You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: டி20 உலகக் கோப்பை 3வது முறையாக இந்தியாவுக்கு வந்தது இப்படிதான்
பிப்ரவரி 7-ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பை தொடங்கும்போது இதுதான் டி20 உலகக் கோப்பையின் வரலாறு:
- தொடரை நடத்திய அணி கோப்பையை வென்றது இல்லை
- எந்த நடப்பு சாம்பியனும் கோப்பையை தக்கவைத்ததில்லை
- நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியதில்லை
ஆனால், மார்ச் 8 இந்த வரலாறையெல்லாம் மாற்றி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற புதிய வரலாறு படைத்திருக்கிறது இந்தியா.
ஆமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வழக்கமாக அதிரடியாக பேட்டிங்கைத் தொடங்கிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் சற்று நிதானம் காட்டினார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் இந்தியா 12 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால், சான்ட்னர் அதன்பிறகு எடுத்த முடிவு போட்டியின் போக்கையே மாற்றியது.
முதலிரு ஓவர்கள் வீசிய பௌலர்களின் ஸ்பெல்லைத் தொடராமல், அடுத்த இரு ஓவர்களும் புதிய பௌலர்களைப் பயன்படுத்தினார் அவர்.
மூன்றாவது ஓவரை வீசிய ஜேக்கப் டஃபி நன்கு வேகம் கொடுக்க, அதை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய பேட்டர்கள் அதிரடியைத் தொடங்கினார்கள்.
அந்த ஓவர்களில் 15 ரன்கள் வர, லாக்கி ஃபெர்குசன் வீசிய நான்காவது ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டது.
மேட் ஹென்றி வீசிய ஐந்தாவது ஓவரில் 21 ரன்கள், ஜேக்கப் டஃபி வீசிய ஆறாவது ஓவரில் 20 ரன்கள் என ரன்கள் வந்துகொண்டே இருந்தது. பவர்பிளே முடிவில் இந்திய அணி 92 ரன்கள் விளாசியிருந்தது.
இந்த உலகக் கோப்பையில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
ஒட்டுமொத்தமாக டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் அதிகபட்ச பவர்ப்பிலே ஸ்கோருக்கான சாதனையை இந்தியா சமன் செய்தது.
அந்த பவர்பிளேவுக்குள்ளேயே அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த உலகக் கோப்பையின் அதிவேக அரைசதம் இதுதான்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன், இந்த இறுதிப் போட்டியிலும் அரைசதம் கடந்து ஹாட்ரிக் அடித்தார்.
நியூசிலாந்து அணியின் ஆபத்தான பௌலராகக் கருதப்பட்ட மிட்செல் சான்ட்னரை மட்டும் சாம்சன் நிதானமாக எதிர்கொண்டார்.
அவருடைய ஓவரில் விக்கெட் விழாமல் ஆடிவிட்டு மற்றவர்களின் பந்துவீச்சைப் பதம் பார்த்தார்.
இப்படி பௌலர்களை சிறப்பாகக் கையாண்ட சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சாம்சன், அபிஷேக் மட்டுமல்லாமல் மூன்றாவது வீரராக வந்த இஷான் கிஷனுமே அதிரடியாக விளையாடினார். முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடிய அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், 17-வது மற்றும் 18-வது ஓவரில் இந்தியாவின் ரன் விகிதம் குறைந்தது.
250 ரன்கள் வருவது கேள்விக்குறியானது.
ஆனால், கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷிவம் துபே, 24 ரன்கள் விளாசினார். அதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தன்னுடைய ஃபீல்டிங்கால் ஆட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய அக்ஷர் பட்டேல், இந்தப் போட்டியில் தன்னுடைய பந்துவீச்சில் அதே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார்.
மூன்றாவது ஓவரில் பந்துவீசிய அக்ஷர் பட்டேல், அரையிறுதியில் அதிவேக சதமடித்திருந்த ஃபின் ஆலனின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
அடுத்ததாக திரடி வீரர் கிளென் ஃபிலிப்ஸ் விக்கெட்டையும் பின்னர் 13-வது ஓவரில் டேரில் மிட்செல் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர்.
இன்னொருபக்கம், நியூசிலாந்தின் பெரும்பாலான வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பினார் ஜஸ்ப்ரித் பும்ரா.
முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார்.
தன்னுடைய கடைசி ஸ்பெல்லை வீச வந்த பும்ரா 'ஸ்லோயர் யார்க்கர்களாக' வீசி மூன்று நியூசிலாந்து வீரர்களின் ஸ்டம்புகளைப் பதம் பார்த்தார். மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி என அனைவருமே பும்ராவின் ஸ்லோயர் யார்க்கர்களில் போல்டாகி வெளியேறினார்கள்.
இதன்மூலம் இந்த உலகக் கோப்பையின் டாப் விக்கெட் டேக்கர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் அவர்.
பவர்பிளேவிலேயே பின்தங்கிய நியூசிலாந்து அணியால் அதன்பின் கம்பேக் கொடுக்க முடியவில்லை. டிம் செய்ஃபர்ட் மட்டும் சற்று போராடி அரைசதம் அடித்தார்.
கடைசி கட்டத்தில் பும்ரா வரிசையாக விக்கெட்டுகள் வீழ்த்த 19-வது ஓவரின் முடிவில் நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியால் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி உலக சாம்பியன் ஆனது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு