வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்

பட மூலாதாரம், @realDonaldTrump
வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையால் சிறைபிடிக்கப்பட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டுகிறார்.
டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் நிக்கோலஸ் மதுரோ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க போர்க்கப்பலான USS Iwo Jima-வில் மதுரோ இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், @realDonaldTrump
இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பெயரில் வெளியான அறிவிப்பில் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள லா கார்லோட்டா ராணுவ விமான நிலையம் மற்றும் ஃபுவர்டே டியூனா பிரதான ராணுவத் தளம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் நடந்ததாகக் கூறப்படும் வெடிப்புகளின் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த வெடிப்புகள் மற்றும் விமானங்கள் பறந்தது குறித்த தகவல்கள் பற்றி டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
டிரம்ப் கூறியது என்ன?
வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "வெனிசுவேலாவிற்கும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கும் எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. தனது மனைவியுடன் இருந்த நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்." என்று கூறியுள்ளார்.
ஜே.டி. வான்ஸ் கூறியது என்ன?
வெனிசுவேலா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "அதிபர் டிரம்ப் பல வழிகளை முன்வைத்தார், ஆனால் இந்த செயல்முறை முழுவதும் அவர் மிகத் தெளிவாக இருந்தார்: போதைப்பொருள் கடத்தல் நிறுத்தப்பட வேண்டும், திருடப்பட்ட எண்ணெய் அமெரிக்காவிற்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்பதில்" எனத் தெரிவித்துள்ளார்.
"அதிபர் டிரம்ப் தான் சொல்வதை நிச்சயம் செய்வார் என்பது மதுரோவுக்கு புரிந்திருக்கும். இந்த சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட எங்கள் துணிச்சலான படைகளுக்கு பாராட்டுகள்." என்றும் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
மதுரோ மீது நியூயார்க்கில் வழக்கு

பட மூலாதாரம், Reuters
மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார்.
மதுரோ மீது "போதைப்பொருள்-பயங்கரவாத சதி, கொக்கைன் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல், அமெரிக்காவிற்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி" ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
"அவர்கள் விரைவில் அமெரிக்க நீதிமன்றங்களில் அமெரிக்க மண்ணில் அமெரிக்க நீதியின் முழு தாக்கத்தையும் எதிர்கொள்வார்கள்" என்று போன்டை கூறுகிறார், ஆனால் மதுரோவின் மனைவி மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதை அவர் கூறவில்லை.
"இந்த இரண்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களைச் சிறை பிடிக்க, நம்பமுடியாத மற்றும் மிகவும் வெற்றிகரமான பணியைச் செய்த எங்கள் துணிச்சலான ராணுவத்திற்கு மிகப்பெரிய நன்றி," என்றும் போன்டை தெரிவித்துள்ளார்.
நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
வெனிசுவேலா தலைநகர் கராகஸில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் வனேசா சில்வா, தனது வீட்டு ஜன்னலிலிருந்து ஒரு வெடிப்பைக் கண்டார்.
வெடிப்பின் சத்தம் மிகப்பெரியதாகவும், "இடியை விட வலிமையானதாகவும்" இருந்ததாகவும், இதனால் தனது வீடு அதிர்ந்ததாகவும் அவர் கூறினார்.
கராகஸ் ஒரு பள்ளத்தாக்குப் பகுதி, எனவே அந்த சத்தம் நகரத்தைச் சுற்றி எதிரொலித்தது.
"என் இதயம் துடித்தது, கால்கள் நடுங்கின," என்று அவர் கூறினார், "வெடிப்புகள் இவ்வளவு நெருக்கமாக நிகழ்ந்ததைக் கண்டு பயந்ததாகவும்", "அவை மிகவும் துல்லியமாகத் தெரிந்ததாகவும்" கூறினார்.
நகரத்தில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் எல்லோரும் இன்னும் பரபரப்பாக ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பி, நிலவரத்தை அறிந்து வருகிறார்கள் என்று அவர் கூறினார்.
தனது உறவினர் ஒருவர் வானத்திலிருந்து ஏதோ விழுவதைக் கண்டார் என்றும், பத்து வினாடிகள் கழித்து ஒரு பெரும் வெடிப்பு சத்தத்தைக் கேட்டார் என்றும் வனேசா கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
விடை தெரியாத கேள்விகள்
தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டனவா?
தாக்குதலுக்குப் பிறகு வெனிசுவேலாவின் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன?
எத்தனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அவை எங்கு நடந்தன?
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, கராகஸில் நடந்த தாக்குதல்கள் "வெனிசுவேலாவின் மூலோபாய வளங்கள், குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் கனிமங்களைக் கைப்பற்றுவதையும்" மற்றும் "நாட்டின் அரசியல் சுதந்திரத்தை உடைப்பதையும்" நோக்கமாகக் கொண்டவை என்று வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரநிலையை செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களும் "சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சூழ்நிலைகளில்" செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
"நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

பட மூலாதாரம், Reuters
இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் கூறியுள்ளார்.
வெளிநாட்டு துருப்புக்களின் இருப்பை வெனிசுவேலா "எதிர்க்கும்", நாடு முழுவதும் உடனடியாக ராணுவப் படைகள் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒரு காணொளி உரையில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய விளாடிமிர் பட்ரினோ லோபஸ், வெனிசுவேலாவிற்கு எதிரான "மிக மோசமான ஆக்கிரமிப்பை" எதிர்கொள்ள ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தார். அனைத்து ஆயுதப் படைகளும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற 'மதுரோவின் உத்தரவுகளை' வெனிசுவேலா பின்பற்றி வருவதாகவும் கூறினார்.
"அவர்கள் எங்களைத் தாக்கியுள்ளனர், ஆனால் எங்களை அடிபணிய வைக்க அவர்களால் முடியாது" என்று வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























