வடலூரில் ரூ.100 கோடியில் தொடங்கப்பட்ட வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு ஏன்?

வடலூரில் ரூ.100 கோடியில் தொடங்கப்பட்ட வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என - தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வள்ளலாரின் தத்துவமான பெருவெளி நிலத்துக்குள் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என அரசு மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "106 ஏக்கர் பெரு வெளி நிலத்தில் மூன்று ஏக்கரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நடைபெற்று வருகின்றன, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் இடமாக உள்ளது, தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்களின் அறிக்கை கிடைத்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

வள்ளலாரின் பாரம்பரியத்தை கௌவரவிக்கும் வகையில் தமிழக அரசால் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் புதிய வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு ஏன்? வடலூரில் என்ன நடக்கிறது?

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.42 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானம் வள்ளலாரின் ‘பெருவெளி’ தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக கூறி வள்ளலாரை பின்பற்றுபவர்களும், வடலூர் பகுதியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வள்ளலார் எனப்படும் ஸ்ரீ ராமலிங்க அடிகளாருக்கு 175 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீதும் அவரது கொள்கைகள் மீது பற்றுக் கொண்ட மக்களால் 106 ஏக்கர் நிலம் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலம் சத்ய தர்ம சாலையின் ‘பெருவெளி’ என்று அழைக்கப்படுகிறது. வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்ய ஞான சபையில் பௌர்ணமி மற்றும் தைபூசம் நாளன்று சமரச சன்மார்க சங்க இயக்கத்தைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம். தைப்பூசம் நிகழ்வுக்கு 10 முதல் 15 லட்சம் பேர் கூடுவார்கள். பௌர்ணமி நாட்களில் ஒன்று முதல் இரண்டு லட்சம் பேர் வரை கூடுவார்கள்.

இது ஒரு கருத்தியல் மோதலாகவும் இருப்பதால் அரசியல் சர்ச்சையாகவும் மாறி வருகிறது. தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும் நபர்களை பாஜக போன்ற அரசியல் அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டும் எழுகின்றன.

சனாதன தர்மத்தை ஆதரித்தவர் வள்ளலார் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறிய போது, வள்ளலார் எவ்வாறு சாதியையும் சடங்குகளையும் எதிர்த்தார் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பெருவெளியில் கட்டிடம் எழுப்புவது சத்ய தர்ம சாலையின் மாண்பை குறைக்கும் செயல் என்று கூறி, வள்ளலாரை பின்பற்றுபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு பாஜக, பாமக, தமிழ் தேசிய பேரியக்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெருவெளியில் சன்மார்க்க நிகழ்வுகளை நடத்துவதற்கும் இத்திட்டம் இடையூறாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)