காஷ்மீர் குறித்து ஃபரூக் அப்துல்லா என்ன பேசினார்? 'இந்தியாவுக்கு எதிரான கருத்து' என பாஜக விமர்சிப்பது ஏன்?

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

காஷ்மீர் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்த கருத்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்து 'இந்தியாவுக்கு எதிரானது' என்று பாஜக விமர்சித்துள்ளது.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய ஃபரூக் அப்துல்லா, பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், "அவர்கள் நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள்" என்று கூறினார்.

அவரது கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களும் ஃபரூக் அப்துல்லா இத்தகைய கருத்தைத் தெரிவித்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். பல முஸ்லிம் மதத் தலைவர்களும் அவரது கருத்தைக் கண்டித்துள்ளனர்.

ஃபரூக் அப்துல்லா என்ன கூறினார்?

பாரமுல்லாவில் ஃபரூக் அப்துல்லா
படக்குறிப்பு, பாரமுல்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, கடந்த சனிக்கிழமை, அக்டோபர் 24ஆம் தேதி, பாரமுல்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது, சட்டப்பிரிவு 370-ன் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, தொகுதி மறுவரையறை ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம்களிடம் பாஜக பாகுபாடு காட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.

"டெல்லியிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்கள் நீதி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? அவர்களை எதிர்கொள்ளத் துணிவுடன் இருங்கள். இல்லையென்றால் அழிந்துபோவீர்கள்; உங்கள் பெயரும் அடையாளமும் இல்லாமல் போய்விடும். இன்று அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஏனெனில், உலகம் முழுவதும் இந்த விவகாரம் குறித்துப் பேசப்படுகிறது. நமது அண்டை நாடு அவர்களைத் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று, 'காஷ்மீர் விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை' என்று கூறுகிறது. அது நம்மைப் பாதுகாத்து வருகிறது.

"அவர்களின் நோக்கங்கள் நல்லவை அல்ல. ஒன்றைக் கூறிவிட்டு, அதற்கு முற்றிலும் மாறாகச் செயல்படுகிறார்கள். உண்மையைப் புரிந்துகொள்ளும் துணிவைப் பெறுங்கள். உண்மையைச் சொல்வது எளிதல்ல." என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குப் பல்வேறு வழிகளில் சிரமங்களை ஏற்படுத்த அவர்கள் முயன்றுள்ளனர். மக்கள் முன்னேற முடியாமல், தவழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்; நாம் அவர்களிடம் யாசகம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். நீங்கள் சொந்தக் காலில் நிற்கும் வரை, உங்கள் கண்ணியத்தை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது. நான் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

தாம் இந்தியர் அல்ல என்று ஒருபோதும் கூறியதில்லை என்றும் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மௌலானா ஆசாத் ஆகியோரின் இந்தியாவுடன் தாம் இணைந்ததாகத் தொடர்ந்து கூறிவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் முஸ்லிம்கள் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், "இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்பிவிடப்படும் ஒரு காலம் வரும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே இதைச் செய்கிறார்கள். இந்தியாவின் நிலைமையை மோசமாக்கிவிட்டனர்" என்றார்.

பாஜக, காங்கிரஸ் தலைவர்களின் எதிர்வினை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஜம்மு-காஷ்மீர் பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாஃப் தாக்கூர், ஃபரூக் அப்துல்லாவின் கருத்து இந்தியாவுக்கு எதிரானது என்று கூறினார். தேசிய மாநாட்டுக் கட்சியின் அணுகுமுறையே எப்போதும் இந்தியாவுக்கு எதிரானதாக இருந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

"இது நாட்டுக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சி. அவரது கருத்து நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. தேசிய மாநாட்டுக் கட்சி எப்போதும் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்துள்ளது. ஃபரூக் அப்துல்லாவின் கருத்து முற்றிலும் நாட்டுக்கு எதிரானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங் கூறுகையில், "ஃபரூக் அப்துல்லா புகழ்ந்து பேசும் பாகிஸ்தான், காஷ்மீரின் இந்த பகுதிக்கு என்ன கொடுத்துள்ளது? பயங்கரவாதம், பிரிவினைவாதம், மக்களைக் கல்லெறிபவர்களாக மாற்றியதைத்தான் கொடுத்துள்ளது" என்றார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீர் இந்தியாவின் மைய நீரோட்டத்துடன் இணைந்துள்ளதாகவும், அங்கு முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பாஜக தலைவர் ரவீந்திர ரெய்னா கூறுகையில், "காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் தொடர்பாக ஃபரூக் அப்துல்லா தெரிவித்த கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கதும் பொறுப்பற்றதுமாகும். அவர் மீண்டும் ஒருமுறை தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனில் பாகிஸ்தானுக்கு எப்படிக் கவலை இருக்க முடியும்? ஒருபோதும் இருக்க முடியாது" என்றார்.

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் விமர்சனம்

இம்ரான் மசூத் (கோப்புப் படம்)
படக்குறிப்பு, இம்ரான் மசூத் (கோப்புப் படம்)

சஹாரன்பூரைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத் கூறுகையில், "பாகிஸ்தானால் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் நல்ல நாடாக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களை நன்றாக நடத்தியிருக்கும். பாகிஸ்தான் ஒரு தந்திரமான நாடு. அதனிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது. ஃபரூக் அப்துல்லா ஏன் இப்படிக் கூறினார் என்று எனக்குப் புரியவில்லை. ஷேக் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா முதல் உமர் அப்துல்லா வரை, அவர்களது கொள்கை எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவானதாகவே இருந்துள்ளது" என்றார்.

ஃபரூக் அப்துல்லா எந்தச் சூழலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார் என்பது தனக்குத் தெரியவில்லை என்றும், அவர் இவ்வாறு கூறியிருந்தால் அதைத் தன்னால் ஆதரிக்க முடியாது என்றும் இம்ரான் மசூத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் கூறுகையில், "ஃபரூக் அப்துல்லா இதற்கு முன்பு இப்படிப் பேசியதை நான் கேட்டதில்லை. அவர் ஒருபோதும் இத்தகைய கருத்தைத் தெரிவித்ததில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள். பாகிஸ்தானில் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்திருந்தால், இந்தியாவுடன் இணையப் போராடுவார்களா?" என்றார்.

சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹிபுல்லா நத்வி கூறுகையில், "காஷ்மீரும் நம்முடையது; காஷ்மீர் மக்களும் நம்முடையவர்கள். சமத்துவத்தை வலியுறுத்தும் நாங்கள் அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறுகிறோம். காஷ்மீரில் நிலவிய அமைதியின்மைக்கு பாகிஸ்தானின் தலையீடும் அதன் தவறான கொள்கைகளுமே காரணம். இதனால் காஷ்மீரின் தனித்துவமான அடையாளத்துக்கும் கலாசாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. காஷ்மீர் முஸ்லிம்கள் மட்டுமின்றி, பண்டிட்டுகள் மற்றும் சீக்கியர்களும் பாதிக்கப்பட்டனர்" என்றார்.

ஃபரூக் அப்துல்லா எதற்காக இத்தகைய கருத்தைத் தெரிவிக்கிறார் என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

தேவ்பந்த் மத அறிஞர் காரி இஷாக் கோரா, ஃபரூக் அப்துல்லாவின் கருத்து கண்டிக்கத்தக்கது என்றும், அவர் இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் ஃபிரங்கி மஹலி, "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தப் பகுதியின் பாதுகாப்பை நமது பாதுகாப்புப் படைகள்தான் எப்போதும் உறுதிசெய்து வந்துள்ளன. அதனால்தான் ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புக்காக ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்புப் படையினர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

"அங்கு பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகப் பல பாதுகாப்புப் படையினர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்பதிலும் சந்தேகமில்லை. எனவே, வேறொரு நாடு ஜம்மு-காஷ்மீரைப் பாதுகாத்து வருகிறது என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது ஆட்சேபனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும். இத்தகைய கருத்தைத் தெரிவித்தவர் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு