You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீதிமன்ற உத்தரவை மீறி நூற்றுக்கணக்கானவர்களை எல் சால்வடோருக்கு நாடு கடத்திய அமெரிக்கா
குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் உறுப்பினர்கள் என அமெரிக்கா குற்றம்சாட்டும் 200-க்கு மேற்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்தவர்களை எல் சால்வடோரில் உள்ள அதீத பாதுகாப்பு கொண்ட சிறைக்கு அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது.
எல் சால்வடோர் அதிபர் நயீப் புகேலே, வெனிசுலா கும்பலான ட்ரென் டி அரவாவின் 238 உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச எம்எஸ்-13 கும்பலின் 23 உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை எல் சால்வடோர் வந்தடைந்ததாக கூறி உள்ளார்.
நாடு கடத்தப்பட்டவர்களின் விவரங்கள் அல்லது அவர்கள் இழைத்த குற்றம் தொடர்பான விவரங்கள் எதையும் அமெரிக்காவோ அல்லது எல் சால்வடோரோ இதுவரை வெளியிடவில்லை.
நாடு கடத்தப்பட்டவர்கள் கைகால்களில் விலங்கிட்டு அழைத்துவரப்பட்டதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.
ட்ரென் டி குழுவினர் அமெரிக்காவுக்குள் நுழைத்து மோசமான தாக்குதல் நடத்துவதாகவும், அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டுகிறார்.
ஏலியன் எனிமீஸ் சட்டம் 1798-ன் படி, இவர்களை டிரம்ப் அரசு நாடு கடத்தி உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் நாடு கடத்தும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தாக சனிக்கிழமை டிரம்ப் தெரிவித்தார். இந்த சட்டம் கடைசியாக இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய-அமெரிக்கர்களை சிறையில் அடைக்க பயன்படுத்தப்பட்டது.
சனிக்கிழமை மாலை, வாஷிங்டன் டிசியில் உள்ள மாவட்ட நீதிபதி இந்த நாடுகடத்தல் நடவடிக்கையை 14 நாள் நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். ஆனால், விமானம் ஏற்கனவே புறப்பட்டுவிட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி விமானத்தை திருப்பி வரவழைக்க வாய்மொழியாக தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்கங்கள் தெரிவித்தன, எனினும், அந்த உத்தரவு அவரது எழுத்துப்பூர்வ தீர்ப்பில் இல்லை.
நீதிமன்றத் தீர்ப்பு மீறப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் கரோலைன் லெவிட் மறுத்தார்.
சட்டப்பூர்வமான அடிப்படை இல்லாத இந்த உத்தரவு, அக்குழுவினர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் பிறப்பிக்கப்பட்டது என அவர் கூறினார். நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
ஏலியன் எனிமீஸ் சட்டம் செயல்படுத்தப்பட்டதை வெனிசுலா விமர்சித்துள்ளது.
இந்த சட்டம் குடியேறிய வெனிசுலாவினரை அநியாயமாக குற்றத்துக்கு உள்ளாக்குகிறது என்றும் மனிதகுல வரலாற்றின் அடிமைத்தனம் முதல் நாஜி வதை முகாம்களின் திகில் வரை இருண்ட அத்தியாயங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது என்றும் வெனிசுலா கூறி உள்ளது.
இதுகுறித்த கூறுதல் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)