கத்தாரை தாக்கிய இஸ்ரேல் - அமெரிக்கா மீது அரபு நாடுகளின் நம்பிக்கை குலைகிறதா?

பட மூலாதாரம், Jacqueline Penney/AFPTV/AFP via Getty Images
- எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கத்தாரின் தலைநகரான தோஹாவில் ஹமாஸ் தலைமை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், பிராந்தியத்தில் மோசமான அளவில் மோதல் அதிகரிக்கும் என வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல், காஸா போர்நிறுத்த முயற்சிகளை பின்னுக்குத் தள்ளி மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கூட்டணிகள் பற்றி நீண்ட காலமாக இருந்து வந்த அனுமானத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது.
ஹமாஸ் பேச்சுவார்த்தை குழு முகாமிட்டிருக்கும் கத்தாரின் மத்திய தோஹாவில் உள்ள வளாகம் மீது நடத்திய வான் தாக்குதலை "துல்லியமானது" என இஸ்ரேல் விவரித்துள்ளது.
இந்த தாக்குதல் அதற்கு முந்தைய நாள் ஆறு பேர் உயிரிழந்த ஜெருசலேம் துப்பாக்கிச் சூடு மற்றும் 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பழி தீர்த்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.
ஆனால் முழுமையாக கட்டுப்படுத்தவோ, துல்லியமாக கணிக்கவோ முடியாதது என்னெவென்றால், இதுவரையில் இல்லாத வகையில் கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் பரவலான விளைவுகள் தான், என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Emmanuel Dunand/AFP via Getty Images
போர்நிறுத்தத்திற்கான சாத்தியங்கள் குறைந்துவிட்டன
வெளிநாட்டு உறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் மத்திய கிழக்கு வல்லுநராக உள்ள ஹூக் லோவாட், ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர்களை தாக்குவது என்பது காஸாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்மொழியும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மிகப்பெரிய இடியாக விழுந்துள்ளது என்கிறார்.
எகிப்து மற்றும் அமெரிக்கா உடன் சேர்ந்து கத்தார் தற்போது ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பணயக் கைதிகள் தொடர்பாகவும், காஸாவில் போர்நிறுத்தம் தொடர்பாகவும் மத்தியஸ்தம் செய்து வருகிறது.
"போர்நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் மத்தியஸ்தர்களை கொல்வது ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான சாத்தியங்களைக் குறைக்கிறது." என லோவாட் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆறு ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் காஸாவில் உள்ள அவர்களின் தலைவரின் மகன் மற்றும் அவரின் அலுவலக மேலாளர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்த குழுவின் பிரதான தலைவர்கள் உயிர் பிழைத்துவிட்டனர்.
"எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவை இஸ்ரேல் கொன்றுவிட்டது. அவர்கள் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவின் சமீபத்திய முன்மொழிவை பற்றி விவாதிக்க கூடியிருந்தனர்" எனத் தெரிவித்தார்.
கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் பல ஆண்டுகளாக தங்கி இருந்தாலும், அவர்களை இஸ்ரேல் குறிவைப்பது இதுவே முதல் முறை.
ஆனால், லோவாட் கூறுவதுப்படி, இஸ்ரேலின் செயல் முறை [இந்தப் பிராந்தியத்தில்] புதியதல்ல.
"ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை, அவர் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இஸ்ரேல் கொன்றது," என்று லோவாட் குறிப்பிட்டார்.
"இது முழுவதும் போர்நிறுத்த வாய்ப்புகளை முடக்குவது பற்றியது. இஸ்ரேல் அரசு என்ன சொன்னாலும், அதன் நடவடிக்கைகளால் அது போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஆர்வம் இல்லை என்பது தெளிவாகிறது."
இத்தகைய நடவடிக்கைகள் ஹமாஸின் உள் நிலையை மாற்றி, ராஜ்ஜீய நடவடிக்கைகளை இன்னும் கடினமாக்கும் என லோவாட் கணிக்கிறார்.
"இஸ்ரேலின் நடவடிக்கைகள் தெளிவாக இருக்கிறது... மிதவாதிகளை கொல்ல முயல்வதன் மூலம் அவர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது. அதேசமயம், 'இஸ்ரேல் வன்முறையைத்தான் புரிந்துகொள்கிறது, ராஜ்ஜீயத்தை அல்ல' என்ற கடும்போக்காளர்களின் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது"என்பதும் லோவாட்டின் கூற்று.
அதேபோல், இஸ்ரேல் இதற்கு முன்பும் லெபனான் மற்றும் சிரியாவில், ஹமாஸ் தலைவர்களை குறிவைத்துள்ளது.
காஸாவைக் கடந்து நீளும் தாக்குதலின் தாக்கம்
ஆனால் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலின் தாக்கம் காஸாவைத் தாண்டி நீள்கிறது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வரும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு, ஒரு புதிய முன்னுதாரணத்தை அமைக்கிறது என்பது அவர்களின் கருத்து.
"இஸ்ரேல் குண்டுவீசிய முதல் அரபு தலைநகரம் இது அல்ல. ஆனால், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாட்டுடைய தலைநகரத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசியது இதுவே முதல் முறை," என்கிறார் லோவாட்.
"மேலும் கத்தார், இரானோ அல்லது லெபனானோ அல்ல.
அது ஒரு பெரிய அமெரிக்க விமானப்படை தளத்தை வைத்திருக்கிறது...மேற்கத்திய நாடுகளில் பெரும் முதலீடுகளும் செய்துள்ளது"என்பதையும் அவர் நினைவூட்டுகிறார்.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், தாக்குதல் குறித்து டிரம்ப் நிர்வாகத்திடம் இஸ்ரேல் தெரிவித்ததாகக் கூறினார்.
ஆனால் அந்த எச்சரிக்கை முன்கூட்டியே வந்ததா, தாக்குதல் தொடங்கிய பிறகா அல்லது அது நடந்து கொண்டிருக்கும்போதே வந்ததா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
மேலும், "தோஹா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், இஸ்ரேல் அல்லது அமெரிக்க இலக்குகளில் முன்னேற்றம் அளிக்காது" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அவர் மேற்கோள் காட்டினார். ஆனால், ஹமாஸை ஒழிப்பது "ஒரு தகுதியான இலக்கு" என்று அவர் நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், லண்டனில் உள்ள சத்தம் ஹவுஸின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா திட்ட இயக்குநர் முனைவர் சனம் வக்கீல், இந்த தாக்குதல் கத்தாரின் பாதுகாப்பை பாதிக்கிறது, மேலும் வளைகுடா கூட்டணிகளின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார்.
"ஹமாஸ் தலைமை மீது நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க அரசு ஆதரித்திருக்கலாம் என்ற உண்மை, கத்தாரின் இருதரப்பு உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்," என்றும் முனைவர் வக்கீல் பிபிசியிடம் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் அமெரிக்காவுடனான உறவுகளை மீறவோ, முறித்துக்கொள்ளவோ போவதில்லை. ஆனால், அவர்கள் நிச்சயமாக [இப்போது] இந்த சூழலில் பாதிக்கப்படக் கூடியவர்களாக உணர்கிறார்கள்"என்றார்.

பட மூலாதாரம், Menahem Kahana/AFP via Getty Images
கூட்டணிகளைப் பற்றிய பழைய நம்பிக்கைகளை இந்த தாக்குதல் உடைத்துவிட்டதாகக் கூறுகிறார் முனைவர் வக்கீல்.
"கூட்டணிகளில், நாடுகள் ஒன்றையொன்று தாக்குவதில்லை, அல்லது ஒன்றுக்கொன்று தாக்குதலை அங்கீகரிப்பதில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது," என்று விளக்கிய அவர்,
"கத்தாரின் இறையாண்மையை மற்றொரு நாடு மீறியதை அமெரிக்கா ஆதரித்திருப்பது, கத்தாருக்கு மட்டுமல்லாமல் முழு வளைகுடா பிராந்தியத்திற்கே அதிர்வுகளை ஏற்படுத்தும்," என்றார்.
யுனைடெட் கிங்டமில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (ருசி) முனைவர் ஹெச்.ஏ. ஹெல்லியர் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்.
"இந்த தாக்குதலின் விளைவால், தோஹாவும் மற்ற பிராந்திய தலைவர்களும், "இஸ்ரேலால் இவ்வாறு தண்டனையின்றி செயல்பட முடிந்தால், அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் உண்மையில் எத்தகைய மதிப்பு கொண்டவை?' என்று கேள்வி எழுப்புவார்கள்," என்று ஹெல்லியர் கூறினார்.
அல்-உதீத் விமானப்படைத் தளத்தை நடத்தி வந்தாலும், இஸ்ரேல்–ஹமாஸ் மோதலில் மத்தியஸ்தம் செய்தாலும், அமெரிக்காவுடன் கத்தாருக்கு உள்ள வரையறுக்கப்பட்ட செல்வாக்கை முனைவர் வக்கீல் சுட்டிக்காட்டுகிறார்.
"கத்தார் தனது பாதுகாப்பிற்காக அமெரிக்காவை அதிகம் சார்ந்து இருக்கிறது... இது கத்தாரை இன்னும் அதிகமாக பணயக்கைதியாக ஆக்குகிறது, மேலும் அதன் செல்வாக்கு எவ்வளவு வரம்புடையது என்பதையும் காட்டுகிறது."
பல ஆண்டுகளாக, கத்தார் வழங்கிய ராஜ்ஜீய வாய்ப்புகளைப் பாதுகாக்கும் பொருட்டு, கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்காக வைப்பதை இஸ்ரேல் தவிர்த்து வந்தது என்ற புரிதல் இருந்தது. ஆனால், அதை இப்போது கைவிட்டு, ராணுவ மற்றும் அரசியல் வாய்ப்பாகக் கருதி செயல்படுகிறது என்று முனைவர் வக்கீல் கூறுகிறார்.
"உளவுத்துறை மற்றும் ராணுவத்திறன் தயாராக இருக்கிறது. மேலும், அரசியல் ரீதியாக இதைச் செய்ய இது ஒரு முக்கியமான நேரமாகத் தெரிகிறது... ஹமாஸை அழிப்பதோடு மட்டுமல்ல, மத்திய கிழக்கில் இரான் ஆதரவு பெறும் பல்வேறு குழுக்களையும் அதிகமாக ஒழிப்பதே அதன் நோக்கம்."
கத்தாரைத் தாக்குவதற்கு டிரம்ப் அனுமதி கொடுத்தாரா இல்லையா என்பது விவாதத்திற்கு உட்பட்டது. ஆனால், வெள்ளை மாளிகையின் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட அவரது வார்த்தைகள், அந்தத் தாக்குதலை ஒரு ராஜ்ஜீயத் தோல்வியாக அல்ல, மாறாக அவரது விரிவான உத்தியின் ஒரு பகுதியாகவே காட்டியதாக முனைவர் வக்கீல் குறிப்பிடுகிறார்.
"பேரம் பேசுவது பேச்சுவார்த்தை மேசையில் தான் நடக்கும் என்று சொல்ல முடியாது," என்ற முனைவர் வக்கீல், "அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரவோ அல்லது அவர்களின் நிலையை மாற்றவோ நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம். அமெரிக்க நலனுக்காக செல்வாக்கும் தாக்கமும் ஏற்படுத்த, அதிபர் வேறு வழிகளைத் தெளிவாக பயன்படுத்துகிறார்"என்றும் கூறினார்.

பிராந்திய விளைவுகள்
முனைவர் வக்கீல் மற்றும் லோவாட் ஆகிய இருவரும், இதன் பிராந்திய விளைவுகள் மிக ஆழமானதாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.
"இஸ்ரேல் இப்போது அதிக ஆக்ரோஷமாக மட்டும் இல்லாமல், அதிகமாக சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் குறித்து அரபு அதிகாரிகள் அதிக அக்கறை காட்டுகின்றனர். அமெரிக்கா அல்லது ஐரோப்பா அதனை அடக்குவதில் மிகக் குறைந்த பங்கு மட்டுமே வகிக்கின்றது," என்கிறார் லோவாட்.
தொடர்ந்து பேசிய முனைவர் வக்கீல், "புதிய சூழலில், புதிய விதிகளோடு,நாம் ஒரு புதிய உலகில் இருக்கிறோம். பழைய நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து சிதறி வருகின்றன"என்றார்.
அந்த கவலை, பிராந்திய சக்திகளை தங்கள் சொந்த ராணுவத் திறன்களை அதிகப்படுத்தத் தூண்டும், என்று அவர்கள் இருவரும் கூறுகின்றனர்.
"இதற்கு, அவர்கள் இஸ்ரேலைத் தாக்குவார்கள் என்று அர்த்தமல்ல... ஆனால், தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறன் அவர்களிடம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்," என்று லோவாட் கூறுகிறார்.
இறுதியில், செவ்வாய்க்கிழமை நடந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளின் பாதிப்பு, வெகுதொலைவுக்கு செல்லும் என்று இரு ஆய்வாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
இறுதியில், "இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளால் அதிக பாதிப்புக்கு உள்ளாவது இஸ்ரேலியர்களோ அல்லது பாலத்தீனியர்களோ அல்லது அந்தப் பிராந்தியமோ மட்டும் இல்லை. மேற்கு நாடுகள் மீதான நம்பகத்தன்மையே " என்று குறிப்பிடுகிறார் லோவாட்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



















