You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காருக்குள் புதினுடன் சுமார் 45 நிமிடங்கள் தனியே பேசிய மோதி
- எழுதியவர், பௌலின் கோலா
- பதவி, பிபிசி நியூஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சீனாவில் நடந்த ஒரு உச்சி மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் "உள்ளார்ந்த ஆழமான" உரையாடல் நடத்தியதாகக் கூறியுள்ளார்.
இரு தலைவர்களும் ரஷ்ய அதிபரின் காருக்குள் சுமார் 45 நிமிடங்களை செலவிட்டனர். அதன் பிறகு மோதி, பயணத்தின் புகைப்படத்தை பகிர்ந்து புதினுக்கு புகழாரம் சூட்டினார்.
"அவர்கள் தங்கள் இல்லத்தில் இருந்ததைப் போல உணர்ந்தனர். அங்கு அவர்கள் வசதியாக உணர்ந்தனர், அதனால்தான் உரையாடலைத் தொடர்ந்தனர்," என்று புதினின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் நடத்தப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றபோது இருவரும் கைகோத்து நடந்த காட்சிகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நடந்தது. இந்த உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு ஒரு சவாலாகக் கருதப்படுகிறது.
இந்தியா ரஷ்ய எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக டெல்லியை தண்டிக்கும் வகையில் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 50% வரி விதித்துள்ளார்.
உலகிலேயே மிக அதிகமான இந்த வரி விகிதத்தில், ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொண்டதற்காக விதிக்கப்பட்ட 25% அபராதம் அடங்கும். இந்த வர்த்தகம்தான் யுக்ரேன் போருக்கு ரஷ்யா நிதி திரட்டுவதற்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளன.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய உத்தி ரீதியான கூட்டாளியான இந்தியா, இந்த கொள்முதலை நிறுத்துவதற்கு எந்த அறிகுறியையும் காட்டவில்லை என்பதுடன் தியான்ஜினில் புதினுடனான நட்பு, டிரம்பின் மிரட்டல்களோடு இணைத்து பார்க்கப்படுகிறது.
சமீபத்திய காலம் வரை அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்தது.
புதினைப் பொறுத்தவரை, யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கியுடன் அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொள்ள டிரம்ப் விதித்த காலக்கெடுவை எதிர்கொண்டிருந்தார்.
அத்தகைய எந்த சந்திப்பிற்குமான திட்டம் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.
தியான்ஜினில் நடந்த உச்சி மாநாட்டில் பேசிய புதின், யுக்ரேன் நெருக்கடியை "தீர்க்க உதவும்" முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் சீன மற்றும் இந்திய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த மாதம் அலாஸ்காவில் டிரம்புடன் நடந்த சந்திப்பில் எட்டப்பட்ட "புரிந்துணர்வுகள்" யுக்ரேனில் அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாகவும் புதின் தனது உரையில் கூறினார்.
புதின் 2022 பிப்ரவரியில் யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கினார்.
அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதற்கு முன், பதிலளிக்க புதினுக்கு "இரண்டு வாரங்கள்" கால அவகாசம் கொடுத்திருப்பதாக ஆகஸ்ட் 22ஆம் தேதி டிரம்ப் கூறியிருந்தார்.
இது ரஷ்ய தலைவருக்கு அவர் வழங்கிய தொடர் எச்சரிக்கைகள் மற்றும் காலக்கெடுகளில் சமீபத்தியது. புதின் அவற்றை கண்டுகொள்ளவில்லை.
டிரம்ப், தன்னால் யுக்ரேன் போரை ஒரே நாளில் தீர்க்க முடியும் என்று முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு