காணொளி: "வங்கதேசத்தில் இந்தியா சந்திக்கும் சவால்கள்" - நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறுவது என்ன?
''1971 போருக்குப் பிறகு வங்கதேசத்தில் இந்தியா மிகப்பெரிய வியூக ரீதியான சவால்களை எதிர்கொள்கிறது. தேசியவாதத்தின் எழுச்சி, இஸ்லாமிய அமைப்புகளின் எழுச்சி, வங்கதேசத்தில் வளர்ந்து வரும் சீனா, பாகிஸ்தானின் செல்வாக்கு ஆகியவை இந்தியாவிற்குப் புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. இந்தியா தனது அனுகுமுறையை உரிய நேரத்தில் மாற்றியமைக்கவில்லை என்றால், பொருத்தமற்ற தன்மையால் வங்கதேசத்தில் தனது வியூக ரீதியான இடத்தைத் இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும்''
இந்தியா - வங்கதேச உறவின் எதிர்காலம் குறித்து இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் சமர்பித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள வரிகள் இவை.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்கும் விவகாரம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து வங்கதேசத்தை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்த கருத்து, அண்மையில் இந்தியத் தூதரகத்தின் வெளியே ஒரு கும்பல் திரண்டு கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட விவகாரம் என இந்தியா வங்கதேச உறவில் ஒரு அசாதாரண சூழல் தொடர்ந்து நிலவிவருகிறது.
இந்தச் சூழலில், தற்போது வெளியாகி இருக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்த அறிக்கை கவனம் பெற்றிருக்கிறது. அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
அறிக்கையில் நிபுணர்கள் சொல்வது என்ன?
காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் தலைமையிலான நிபுணர்கள் குழு, 99 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையில், "1971 சுதந்தர போருக்குப் பிறகு, வங்கதேசத்தில் இந்தியா முதல்முறையாக மிகப் பெரிய வியூக ரீதியான சவால்களை எதிர்கொள்கிறது. புதிய தலைமுறையின் எழுச்சி, அரசியல் சமநிலையில் மாற்றம், இந்தியாவிடம் இருந்து விலகிச் செல்லும் போக்கு என சில மாற்றங்கள் வங்கதேசத்தில் நடக்கின்றன. அவாமி லீக்கின் நீண்டகால செல்வாக்கு சரிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தேசியவாதம் அதிகரித்து வருகிறது, இஸ்லாமிய அமைப்புகள் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன, சீனா மற்றும் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் நிலைமையை ஒரு புதிய திருப்புமுனைக்கு கொண்டு வந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வங்கதேசத்தை ஒரு முக்கிய கூட்டாளியாக கருதுகிறது. வர்த்தகம் மற்றும் இணைப்பு அடிப்படையில் தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டாளியாக வங்கதேசம் உள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் 2024-ல் இருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குழப்பத்தில் உள்ளது.
ஒரு ஆய்வாளரை மேற்கோள் காட்டி, தற்போது நிலவும் சவால்களுக்கு பின்னணியில் உள்ள காரணத்தையும் அந்த அறிக்கை பட்டியலிடுகிறது.
வங்கதேசம் என்ற நாடு உருவானதில் இந்தியாவின் பங்களிப்பை வங்கதேசத்தில் உள்ள இளம் தலைமுறையினர், முந்தைய தலைமுறையினரைப் போல பார்ப்பதில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் அவை இருதரப்பு உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அந்த அறிக்கையில் கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத ஊடுருவல், அடிப்படைவாதம், பயங்கரவாதம், பிராந்திய பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான பேச்சுக்கள் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சவால்களை ஏற்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கு
வங்கதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு, துறைமுக விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் சீனாவின் வளர்ந்து வரும் பங்களிப்பு குறித்தும் இந்த குழு கவலை தெரிவித்துள்ளது.
மாங்லா (Mongla) துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்காக 370 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் திட்டத்தை செயல்படுத்த, 2025 மார்ச் மாதம் வங்கதேசம் சீனா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும் சீனா உதவியுடன் லால்மோனிர்ஹேட் (Lalmonirhat) விமான தளம் உருவாக்கப்பட்டு வருவதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர்களின் சமீபத்திய சீன பயணத்தையும் இந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. மேலும் இது வங்கதேசத்தில் உள்ள பல்வேறு அரசியல் குழுக்களுடன் சீனாவின் ஆழமான ஈடுபாட்டைக் குறிக்கிறது என்றும் இதன் மூலம் தனது இருப்பை வலுப்படுத்துகிறது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவு இல்லாத எந்தவொரு நாடும் அங்கு ராணுவ தளத்தை அமைக்க முயற்சித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்பதால், வங்கதேசத்தில் வெளிநாட்டு சக்திகளின் செயல்பாடுகளை அரசாங்கம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என இந்த குழு பரிந்துரைத்துள்ளது.
எனினும் இந்தியா, வங்கதேசம் இடையிலான உறவு முற்றிலும் நம்பிக்கையற்றதாக இல்லை எனவும் ஒரு நிபுணரை மேற்கோள்காட்டி அந்த அறிக்கை கூறுகிறது.
கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்ய முடியாத அளவுக்கு உள்ள பாகிஸ்தான் போல வங்கதேசம் அல்ல என குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, அதற்கு 3 முக்கிய காரணங்களையும் குறிப்பிட்டுள்ளது
1. வங்கதேசத்தின் அடையாளம் மத ரீதியானது மட்டுமல்ல, அது கலாச்சார மற்றும் மொழியியல் ரீதியாக வங்க அடையாளத்தை கொண்டுள்ளது.
2. வங்கதேசம் வெகுஜன அடிப்படையிலான அரசியல் கட்சிகளை கொண்டுள்ளது.
3. வங்கதேச ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தைப் போன்றதல்ல, அது சொந்த மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த மறுத்துள்ளது என 3 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் வழங்கியது தொடர்பாகவும் நிலைக்குழுவின் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவு செயலர், ஷேக் ஹசீனா விஷயத்தில், இந்திய அரசாங்கம் தனது பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ளது என கூறி உள்ளார்.
வெளியுறவுச் செயலாளரின் கூற்றுப்படி, நெருக்கடியான காலங்களில் அடைக்கலம் தேடி வருபவர்கள் எவராக இருந்தாலும், இந்தியா எப்போதும் தனது கதவுகளைத் திறந்துள்ளது. இது இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
மேலும், வங்கதேசத்திடம் இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவாக தெரிவித்துள்ளது என்றும், ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவுகளுக்கு எந்தச் சவாலையும் ஏற்படுத்தும் என நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



