உங்கள் குழந்தையை காய்கறி சாப்பிட வைப்பதற்கான 6 எளிய வழிகள்

ஊட்டச்சத்து குறைவான உணவு முறை அவர்களின் சிந்திக்கும் திறன், கவனம் செலுத்துதல், நடத்தை மற்றும் கல்வித் திறனைக் கூட பாதிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மெலிசா ஹோகன்பூம்
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

குழந்தைகளைப் போதிய அளவு காய்கறிகளைச் சாப்பிட வைப்பது ஒரு பெரிய போராட்டமாக இருக்கும்.

பெற்றோர் கலந்துரையாடும் இணையப் பக்கங்கள் மற்றும் சாட் குரூப்களில், "என் குழந்தை பிரவுன் அல்லது வெள்ளை நிற உணவுகளை மட்டுமே சாப்பிடுவது இயல்பானதா?" என்பன போன்ற கேள்விகள் நிறைந்திருக்கின்றன.

குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள் மீதான விருப்பம் ஆரம்பத்திலேயே தொடங்கிவிடுவது இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

தாய்ப்பாலில் கூட இயற்கையான சர்க்கரை இருப்பதால், அது ஓரளவுக்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும். அவர்கள் திட உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியவுடன், ஒரு ப்ரோக்கோலி துண்டையோ அல்லது ஒரு ஸ்பூன் கீரையையோ சாப்பிட வைப்பது கடினமான காரியமாகிவிடுகிறது.

ஆனால், குழந்தைகளுக்குப் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஒரு சீரான உணவு முறை தேவைப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைவான உணவு முறை அவர்களின் சிந்திக்கும் திறன், கவனம் செலுத்துதல், நடத்தை மற்றும் கல்வித் திறனைக் கூட பாதிக்கிறது.

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், நீண்ட கால ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் மோசமான கல்வி விளைவுகளோடு தொடர்புடையது.

பெற்றோர்களுக்கு அதிர்ஷ்டவசமாக, குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்ச்சியாளர்கள் தேடி வருகின்றனர், மேலும் சில புதுமையான தீர்வுகளையும் கண்டறிந்துள்ளனர்.

அறிவியல் பூர்வமாக நீங்கள் வீட்டில் எளிதாக முயற்சித்துப் பார்க்கக்கூடிய ஆறு விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1. அடிக்கடி அத்தகைய உணவுகளை வழங்குதல்

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், நீண்ட கால ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் மோசமான கல்வி விளைவுகளோடு தொடர்புடையது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைகள் ஓர் உணவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, பல முறை அந்த உணவை அவர்களுக்குத் திரும்பத் திரும்பக் கொடுக்க வேண்டியிருக்கும்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குழந்தைப்பருவத்தின் தொடக்கத்தில் குழந்தைகளுக்கு முடிந்தவரை பல வகையான காய்கறிகளை அடிக்கடி கொடுப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பயோசைக்காலஜி பேராசிரியை மரியன் ஹெதெரிங்டன் கூறுகிறார். காய்கறிகள் மீதான உங்கள் குழந்தையின் விருப்பத்தை மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த காலமாக அவர்களின் பள்ளிப் பருவத்திற்கு முந்தைய ஆண்டுகளைக் கூறலாம்.

"ஐந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு அதிகமான காய்கறிகளை நீங்கள் அறிமுகப்படுத்தவில்லை என்றால், அது மிகவும் தாமதமாகிவிடும்" என்று ஹெதெரிங்டன் கூறுகிறார்.

ஒரு குழந்தை ஓர் உணவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, பல முறை அந்த உணவை அவர்களுக்குத் திரும்பத் திரும்பக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இருப்பினும், ஓர் உணவை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் எத்தனை முறை கொடுக்க வேண்டும் என்பதற்கான சான்றுகள் முரண்பட்டவையாக உள்ளன.

இது ஐந்து முதல் 15 முறை வரை மாறுபடுகிறது. (ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள் என்ற உண்மையை இந்த சான்றுகள் பிரதிபலிக்கின்றன.)

ஆனால், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பள்ளிக்கு முந்தைய பருவக் குழந்தைகளை (3-4 வயது) விட குறைவான முறை உணவை அறிமுகப்படுத்தினாலே போதுமானதாக இருக்கலாம்.

ஏனெனில், 3–4 வயது குழந்தைகளில் பொதுவாக புதிய உணவுகளை முயற்சி செய்ய தயங்கும் மனநிலை அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தச் செயல்முறை உங்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பே கூடத் தொடங்கலாம்.

ஒரு தாய் சாப்பிடும் உணவுகள் பனிக்குட நீர் மூலம் கருவுக்குக் கடத்தப்பட்டு, அது குழந்தையின் உணவு விருப்பங்களை உருவாக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

2. முதலில் காய்கறிகளை வழங்குங்கள்

3–4 வயது குழந்தைகளில் பொதுவாக புதிய உணவுகளை முயற்சி செய்ய தயங்கும் மனநிலை அதிகமாக காணப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காலை உணவுகளில் காய்கறிகளைச் சேர்ப்பது குழந்தைகளின் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க உதவும்.

ஓர் உணவு உடலுக்கு நல்லது என்று குழந்தைகளிடம் வெறுமனே சொல்வது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் குழந்தைகள் "ஆரோக்கியமானது" என்று விவரிக்கப்படும் உணவுகளை விட "சுவையானது" என்று விவரிக்கப்படும் உணவுகளையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதற்குப் பதிலாக, உணவின் எந்த நேரத்தில் அவர்களுக்குக் காய்கறிகளை வழங்குகிறீர்கள் என்பதைப் பற்றி யோசியுங்கள்.

குழந்தைகள் அதிகப் பசியோடு இருக்கும் நேரத்தில் உணவின் தொடக்கத்திலேயே காய்கறிகளை வழங்குவது, அவர்கள் அதைச் சாப்பிடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

"குழந்தைகள் பெரும்பாலும் தங்களுக்கு மிகவும் பிடித்தமான பொருளையே முதலில் சாப்பிடுவார்கள்," என்று கூறும் ஹெதெரிங்டன்,"அதன் பிறகு பட்டாணியைச் சாப்பிடும் நேரத்திற்குள், அவர்களுக்கு அது வேண்டாம் என்று தோன்றிவிடுகிறது"என்கிறார்.

எனவே, அதிக கலோரிகள் கொண்ட மற்ற உணவுகளுடன் ஏற்படும் அந்தப் போட்டியைத் தவிர்ப்பது உதவிகரமாக இருக்கும் என்கிறார்.

காய்கறிகளை முதலில் சாப்பிட ஊக்குவிப்பது, குழந்தைகள் அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவுகிறது என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் பேராசிரியை பார்பரா ரோல்ஸ் கூறுகிறார்.

மேற்கத்திய உணவு முறைகளில் பொதுவாகக் காலை உணவில் காய்கறிகள் சேர்க்கப்படுவதில்லை என்றாலும், காலையிலேயே அவற்றை முதலில் சாப்பிடக் கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

நீங்கள் ஆம்லெட்டில் காளான்கள் மற்றும் கீரைகளை அல்லது காலை உணவுகளில் சீமை சுரைக்காயைச் சேர்த்து முயற்சிக்கலாம்.

பிரிட்டனில் உள்ள எட்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு சோதனையில், காலை உணவாகக் காய்கறிகள் வழங்கப்பட்ட போதெல்லாம், 60%-க்கும் அதிகமான முறை குழந்தைகள் அவற்றைச் சாப்பிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

3. ஆரோக்கியமான உணவுகளின் அளவை அதிகரிக்கலாம்

காலை உணவில் அல்லது உணவின் தொடக்கத்தில் காய்கறிகளை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லாததாகத் தோன்றினால், மற்றொரு அணுகுமுறையை நீங்கள் கடைபிடிக்கலாம்.

அதாவது, பரிமாறப்படும் உணவுகளின் விகிதத்தை மாற்றி அமைக்கலாம் . அதிக கலோரி கொண்ட பொருட்களின் அளவைக் குறைத்து, அதற்குப் பதிலாகக் காய்கறிகளை அதிகமாக்கலாம்.

துணை உணவாகக் காய்கறிகளின் அளவை அதிகரிப்பதன் மூலமாகவோ அல்லது கேரட் மற்றும் சீமை சுரைக்காய் போன்ற காய்கறிகளைத் துருவி சாஸ்களில் சேர்ப்பதன் மூலமோ நீங்கள் இதைச் செய்யலாம்.

இறைச்சி மற்றும் காய்கறிகளின் அளவு விகிதங்கள் மாற்றப்படும்போது, மக்கள் வழக்கமான அதே அளவு உணவையும், அதே நேரத்தில் அதிக அளவிலான காய்கறிகளையும் சாப்பிட முனைகிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுவதால் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு குழந்தையின் தட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் அளவை 50% அதிகரிப்பது, அவர்கள் அவற்றை எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்ற அளவையும் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக கலோரி கொண்ட பொருட்களின் அளவைக் குறைத்து, அதற்குப் பதிலாகக் காய்கறிகளை அதிகமாக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைகளுக்கு மற்ற உணவுகளை வழங்குவதற்கு முன்பு, முதலாவதாகக் காய்கறிகளைக் கொடுப்பது அவர்கள் அதைச் சாப்பிடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

மதிய உணவு அல்லது இரவு உணவு நேரங்களில் பல்வேறு வகையான காய்கறிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்போது, பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகள் அதிக காய்கறிகளையும், ஆரோக்கியமற்ற உணவுகளையும் குறைவாகச் சாப்பிடுகிறார்கள் என்று மற்றுமொரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

4. காய்கறிகளின் தோற்றத்தை மாற்றலாம்

ஒரு குழந்தை தான் சாப்பிடும் உணவை எப்படிப் பார்க்கிறது என்பதை மாற்றுவதும் பயனுள்ளதாக இருக்கும். நாம் எதைச் சாப்பிட விரும்புகிறோம் என்பதில் பெரும்பாலானவை நம் கண்களிலிருந்து தான் தொடங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். உண்பதற்கு பல உணவுகள் இருக்கும்போது, குழந்தைகள் தங்களுக்கு மிகவும் பரிச்சயமான மற்றும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றும் உணவை நோக்கியே ஈர்க்கப்படுவார்கள்.

அதாவது, உணவு பரிமாறப்படும் விதத்தை மாற்றுவது குழந்தைகள் அதிக காய்கறிகளைச் சாப்பிட உதவக்கூடும் என்பது தான் இதன் பொருள்.

உணவு பரிமாறப்படும் விதத்தை மாற்றுவது குழந்தைகள் அதிக காய்கறிகளைச் சாப்பிட உதவக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காய்கறிகளைப் படைப்பாற்றலுடன் வழங்குவது, குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

ஒரு தட்டில் உணவைக் கலைநயத்துடன் அலங்கரித்து பரிமாறும்போது, குழந்தைகள் புதிய உணவுகளைச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு குழு கண்டறிந்துள்ளது.

ஆரோக்கியமான உணவுகளை வேடிக்கையாகக் காட்டுவது அவற்றின் ஈர்ப்பை அதிகரிக்கும் என்பதைக் காட்டும் வகையில், பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பட்டாம்பூச்சி, பூ அல்லது டெடி பேர் போன்ற சுவாரஸ்யமான வடிவங்களில் வெட்டினால் குழந்தைகள் அவற்றை அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்று மற்றுமொரு ஆராய்ச்சி காட்டுகிறது.

ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகள் எளிதில் பார்க்கக்கூடியதாகவும், சிற்றுண்டியாக எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய வகையிலும் வைத்தால், அவற்றை அதிகமாக சாப்பிடும் பழக்கம் உருவாகும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

10 முதல் 13 வயதுடைய குழந்தைகள், காய்கறிகளைப் பல தனித்தனி தட்டுகளில் வழங்குவதை விட, ஒரே தட்டில் பல காய்கறிகளைத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்து வழங்கியபோது, அவற்றை அதிகமாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு தட்டின் வெவ்வேறு பிரிவுகளில் உணவை அளவாகப் பிரித்து வழங்கியபோது, பள்ளிக்குச் செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகள் 36% அதிக காய்கறிகளைச் சாப்பிட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

5. ஒன்றாகச் சாப்பிடுங்கள்

பெற்றோர் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது, குழந்தைகள் எந்த வகையான உணவை இயல்பானதாகக் கருதுகிறார்கள் என்பதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெற்றோர்கள் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளைச் சாப்பிட்டால், அவர்களின் குழந்தைகளும் அவ்வாறே செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். துரித உணவுகளைச் சாப்பிடும் அல்லது காலை உணவைத் தவிர்க்கும் பெற்றோர்களின் குழந்தைகளும் அதே பழக்கத்தைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.

நியூசிலாந்தில் பள்ளி குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆரோக்கியமான உணவு முறையைக் கொண்ட பெற்றோரின் குழந்தைகள் கேக், சாக்லேட் மற்றும் பிற காரவகை சிற்றுண்டிகளை குறைவாகவே சாப்பிட்டனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வழக்கமாகக் முன்மாதிரியாகக் காட்டும் பெற்றோரின் குழந்தைகள், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவது தெரியவந்துள்ளது.

நியூசிலாந்தில் பள்ளி குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆரோக்கியமான உணவு முறையைக் கொண்ட பெற்றோரின் குழந்தைகள் கேக்குகள், சாக்லேட்டுகள் மற்றும் பிற காரவகை சிற்றுண்டிகளை  குறைவாகவே சாப்பிட்டனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைகளைச் சமைப்பதில் ஈடுபட ஊக்குவிப்பதும், தங்களுக்குப் பழகாத உணவுகளைச் சாப்பிடுவதற்கான அவர்களின் விருப்பத்தை அதிகரிக்க உதவும்.

வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, ஆரோக்கியமான உடல் எடை, சிறந்த உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பெற்றோரும் அவ்வாறே செய்யும்போது ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதற்கான அதிக வாய்ப்புகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஒரு நீண்ட கால ஆய்வில், வழக்கமாக குடும்பத்தோடு ஒன்றாக சேர்ந்து உண்ணும் பழக்கம் கொண்டவர்கள் அதிக உடற்தகுதி அளவைக் கொண்டிருந்ததோடு, குளிர்பானங்களைக் குறைவாகவே பருகினர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

6. உணவை வேடிக்கையானதாக மாற்றுங்கள்

நாம் எதைச் சாப்பிடுகிறோம் என்பதில் பெரும்பகுதி, உணவோடு நமக்கு இருக்கும் உறவிலிருந்தே வருகிறது.

குழந்தைகளைச் சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடுமாறு வற்புறுத்துவது, அவர்கள் உணவை ரசித்துச் சாப்பிடுவதைக் குறைப்பதோடு, குறைவான ஆரோக்கியம் கொண்ட உணவு முறைக்கும் வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல், ஆரோக்கியமற்ற ஒரு தின்பண்டத்தைப் பரிசாக அளித்து குழந்தைகளை ஊக்குவிப்பது, அந்த வகையான உணவுகள் மீதான அவர்களின் விருப்பத்தை அதிகரிக்கக் கூடும்.

ஆனால், குழந்தைகளை உணவோடு விளையாட அனுமதிப்பது மட்டுமே புதிய உணவுகள் மீதான அவர்களின் வெறுப்பைக் குறைக்க உதவும் என ஒரு ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. பீட்ரூட், கொண்டைக்கடலை மற்றும் பாக் சோய் (ஒரு வகை கீரை) உள்ளிட்ட பொருட்களைக் குழந்தைகள் தொடவும், நுகரவும், உற்றுப் பார்க்கவும் ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவித்தனர்.

ஆனால், அவர்கள் அதைச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. இதன் மூலம், குழந்தைகள் தங்களுக்குப் பழகாத பொருட்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெற்றதோடு, பின்னர் அவற்றைச் சுவைத்துப் பார்க்க அதிக விருப்பமும் காட்டியுள்ளனர்.

குழந்தைகளைச் சமைக்க ஊக்குவிப்பதும், பழகாத உணவுகளைச் சாப்பிடுவதற்கான அவர்களின் விருப்பத்தை அதிகரிக்க உதவியது.

இந்த ஆய்வில் இணைந்து பணியாற்றிய சமையல் கலைஞர் ஜோசப் யூசெப் கூறுகையில், குழந்தைகள் உணவை அனுபவிக்கும் விதத்தை மாற்றி அமைப்பதே இதன் முக்கிய ரகசியம் என்கிறார். "விளையாட்டு வடிவில் மாற்றுவதிலும் , புலன் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுத்துவதிலும் குழந்தைகளுக்குப் பலனளிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது" என்று கூறும் அவர், "மிகவும் நிம்மதியான, நிதானமான, வற்புறுத்தல் இல்லாத ஒரு சூழல் இருக்கும்போது, குழந்தைகள் உணவோடு விளையாடவும், பல்வேறு விஷயங்களைச் சுவைத்து, முயற்சித்துப் பரிசோதிக்கவும் அதிக விருப்பத்துடன் இருக்கிறார்கள்" என்கிறார்.

கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால், இவையெல்லாம் உங்கள் குழந்தையை பிரவுன் அல்லது வெள்ளை நிற உணவுகளை மட்டுமே சாப்பிடாமல், வேறு சிலவற்றையும் சாப்பிட வைக்க உதவக்கூடும்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு