மாலில் இளைஞர்கள் ஓட்டிய காரால் 3 முறை மோதப்பட்ட மருத்துவ மாணவி உயிரிழப்பு - ஆந்திராவில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், UGC
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி இளைஞர்கள் ஓட்டிய கார் மோதியதில் படுகாயமடைந்த மருத்துவ மாணவி பிரியங்கா உயிரிழந்தார்.
ஹைதராபாத்தில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில், அவரது உடல், குடும்பத்தினரால் தெலங்கானாவில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
"பிரியங்கா ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிற்பகல் 3.32 மணிக்கு உயிரிழந்தார்," என்று அவருக்கு சிகிச்சை அளித்த கிம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஆகஸ்ட் 6-ஆம் தேதி பிற்பகல் 2.12 மணிக்கு பிரியங்கா கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 9) பிற்பகல் 3.32 மணிக்கு அவர் உயிரிழந்தார்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராக உருவாகக்கூடிய ஒரு மருத்துவ மாணவியை இழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது," என்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த பிரியங்காவின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

பட மூலாதாரம், KIMS
என்ன நடந்தது?
ராஜமகேந்திரவரத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் ஓட்டிய கார் பின்னால் இருந்து மோதியதில் இரண்டு முதுநிலை மருத்துவ மாணவர்கள் காயமடைந்த சம்பவம் குறித்து பிரகாஷ்நகர் சர்கிள் ஆய்வாளர் பாஜிலால் பிபிசியிடம் விவரித்தார்.
"ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு, சூரவரப்பு தஸ்வந்த் மற்றும் ஆண்ட்ரூ ஜோசப் எட்வர்ட் ஆகியோர் பிரசாத் ஆதித்யா மாலில் இரண்டாம் காட்சி திரைப்படத்தைப் பார்க்கச் சென்றனர். அங்கு பாதுகாப்பு சோதனையின் போது நடத்தப்பட்ட பிரெத் அனலைசர் பரிசோதனையில், இருவரும் மதுபானம் அருந்தியிருந்தது தெரியவந்தது.
பாதுகாப்பு ஊழியர்கள், மதுபோதையில் இருப்பவர்களுக்கு திரையரங்கிற்குள் அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதனால் இருவருக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் காரை நிறுத்துமிடத்தில் விட்டு வெளியேற முயன்றனர்.
அந்த நேரத்தில், முதல் காட்சி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் உமேஷ் மற்றும் பிரியங்காவின் வாகனத்தின் பின்புறம் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் ஓட்டிய கார் மோதியது.
பின்னர் அவர்கள் காரை, வேகமாக இருசக்கர வாகனத்தின் மீது மீண்டும் மோதி சாலைக்கு சென்றனர். அப்போது வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த பிரியங்கா கீழே விழுந்தார்.
ஆனால், காரில் இருந்த இளைஞர்கள் மீண்டும் காரை பிரியங்கா மீது ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த பிரியங்காவும், உமேஷும் அப்பகுதி மக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்," என்று பாஜிலால் விளக்கினார்.

பட மூலாதாரம், Screengrab
'விரைவாக தண்டனை பெற்றுத் தருவோம்'
இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி, விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் நோக்கில் காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) டி. நரசிம்ம கிஷோர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நபரான சூரவரப்பு தஸ்வந்த் (24), ராஜமகேந்திரவரம் மோரம்புடி பகுதியைச் சேர்ந்தவர். இரண்டாவது நபரான தேசபத்துலா ஆண்ட்ரூ ஜோசப் எட்வர்ட்ஸ் (23), ராஜமகேந்திரவரம் லாலாச்செருவு பகுதியைச் சேர்ந்தவர்.
"இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறைக்கு எந்த அரசியல் அழுத்தமும் இல்லை. விசாரணை முழுமையாக பாரபட்சமின்றியும் வெளிப்படையாகவும் நடைபெற்று வருகிறது," என்று நரசிம்ம கிஷோர் தெரிவித்தார்.
"சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் விரிவாக ஆய்வு செய்தபின், இது கொலை முயற்சியாக நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என்றும் அவர் கூறினார்.
'மிகுந்த வேதனை அளிக்கிறது' – சந்திரபாபு நாயுடு
ராஜமகேந்திரவரத்தில் இளைஞர்கள் மதுபோதையிலும் அலட்சியத்துடனும் ஓட்டிய கார் மோதி காயமடைந்த மருத்துவ மாணவி பிரியங்கா உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
"பிரியங்காவின் மரணத்திற்கு காரணமானவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அலட்சியத்தால் ஒரு உயிரைப் பறித்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்த பிரியங்காவின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், தனது ஆழ்ந்த இரங்கலை குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































