பஞ்சாபில் ரூ.43 லட்சம் வளர்ச்சிப் பணிகள் நடந்த கிராமமே காணாமல் போனது எப்படி?

காணொளிக் குறிப்பு, பஞ்சாபில் ரூ.43 லட்சம் வளர்ச்சிப் பணிகள் நடந்த கிராமம் காணாமல் போன கதை
பஞ்சாபில் ரூ.43 லட்சம் வளர்ச்சிப் பணிகள் நடந்த கிராமமே காணாமல் போனது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நியூ கட்டி ராஜோக்கி என்ற கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக 43 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெயரில் ஒரு கிராமமே அங்கு இல்லை என்பது ஆர்.டி. ஐ. மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது, அந்த கிராமத்தை காணவில்லை.

அதேநேரம், ஜரோர் (Zaroor) மாவட்டத்தில் நவி காட்டி ராஜோக்கி என்ற பெயரில் ஒரு கிராமம் உள்ளது. கிராம பஞ்சாயத்தும் உள்ளது. பஞ்சாபியில் நவி என்பதற்கு தமிழிய புது என அர்த்தம். ஆர்.டி.ஐ. ஆர்வலர் குருதேவ் சிஞ், இந்த விவாகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததாக கூறுகிறார்.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி நடந்ததாக சந்தேகித்ததாகவும், அதன் பிறகே ஆர்.டி.ஐ மூலம் நடந்ததாக சந்தேகிக்கப்படும் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாகவும் குருதேவ் சிங் கூறுகிறார்.

"கட்டியில் இருந்து நவி கட்டி கிராமம் வந்தது. இந்த கிராமம் உருவாக்கப்பட்ட பின்னர், சில அதிகாரிகள், நியூ கட்டி என்ற பெயரில் போலியான கிராமத்தை உருவாக்கியுள்ளனர். ஆர்.டி.ஐ. மூலம்தான் அப்படி ஒரு கிராமமே கிடையாது என்பது தெரிந்தது. கூகுள் மேப்பில் கூட இந்த கிராமம் கிடையாது. 55 திட்டங்கள் இந்த கிராமத்துக்கு அனுமதிக்கப்பட்டன.2013 முதல் 2017 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் இங்கு வேலைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆஃப்லைனில் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2017-ல் ஆன்லைன் முறை வந்ததபோது, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு அந்தது.இந்த இல்லாத கிராமத்தின் பெயரில் 43 லட்சம் ஊழல் நடந்துள்ளது." என்கிறார் குருதேவ் சிங்.

நவி கட்டி ராஜோக்கியின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான லால் சிங் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பேசுகையில், நியூ கட்டி என்பதும் நவி கட்டி என்பது ஒரே பெயர் என தான் நினைத்ததாக குறிப்பிடுகிறார். நியூ என்ற ஆங்கில வார்த்தையும் நவி என்ற பஞ்சாபி வார்த்தையும் ஒன்றுதான் என தான் கருதியதாகவும் அவர் தெரிவித்தார்.

"எங்கள் கிராமத்தின் பெயர் நவி கட்டி ராஜோக்கி. அதிகாரிகள், நியூ கட்டி ராஜோக்கி என்ற பெயரில் புதிய கிராமத்தை உருவாக்கி உள்ளனர். எனவே, அந்த பெயரை எங்கள் கிராமத்தின் பெயர் என கருதினேன். கிராமத்துக்கான அனைத்து வளர்ச்சி பணிகளையும் செய்திருக்கிறோம். எங்களுக்கு கிடைத்த நிதி கிராமத்துக்கு வெளிப்படையாகவும் கணக்குவழக்குடனும் செலவிடப்பட்டுள்ளது." என்று லால் சிங் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருவதாக கூடுதல் துணை ஆணையர் (வளர்ச்சி) லக்விந்தர் சிங் கூறுகிறார். வருவாய்த் துறையிடம் இருந்து ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. இன்னும் முழுமையாக தரவுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை' என்றும் லக்விந்தர் சிங் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)