இந்திய தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்கள் நியமன விவகாரம்: மாநில கட்சிகளின் குரலுக்கும் இடம் வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
இந்திய தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்களை இந்தியாவின் மத்திய அரசாங்கம் மட்டுமே முடிவெடுத்து நியமிக்கக் கூடாது, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட குழு முடிவெடுத்து இந்த நியமனத்தை செய்யவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
ஒரு ஜனநாயகத்தில் தேர்தல் என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் நியாயமாக இருக்கவேண்டும் என்றும் தேர்தலின் களங்கமற்ற தன்மையை உறுதி செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்றும் குறிப்பிட்ட கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு,
அரசமைப்புச் சட்டத்தின் 324(2)வது பிரிவுக்கு ஏற்ப இது தொடர்பில் ஒரு சட்டத்தை இயற்றும் வரையில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை செய்யும் என்று தீர்ப்பளித்தது.
எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இல்லாமல் போனால், எண்ணிக்கை அடிப்படையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் இந்தக் குழுவில் உறுப்பினராக இருப்பார் என்றும் தெளிவுபடுத்தியது.
ஸ்டாலின் வரவேற்பு
இதுகுறித்து ட்வீட் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக குறிப்பிட்டிருந்தார். தன்னாட்சி பெற்ற அமைப்புகள் களவாடப்படும்போது, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிய காலத்தில் நிகழ்ந்த உச்ச நீதிமன்றத்தின் தலையீடு முக்கியமானது. தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான செயல்பாடு துடிப்பான ஜனநாயகத்தைக் காப்பாற்ற இன்றியமையாதது என்றும் அவர் தமது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

சாத்தியமாகாது: வில்சன்

தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை முடிவு செய்வதற்கு ஒரு குழுவை நியமித்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், இந்திய அரசியலில் கணிசமான பகுதியை தீர்மானிக்கும் மாநிலக் கட்சிகளுக்கு இந்த நடைமுறையில் எந்தப் பங்கும் இருக்காது என்பதையும், சில நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையில், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியே இரண்டாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் இடம் பெற வாய்ப்பிருப்பதையும் சுட்டிக் காட்டி இந்த முடிவெடுக்கும் முறைமையை மாநிலக் கட்சிகளுக்கும் இடமிருக்கும் வகையில் விரிவுபடுத்தவேண்டுமா என்று கேட்டபோது,
அது சாத்தியமாக இருக்காது என்றார் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் புகழ்பெற்ற வழக்குரைஞருமான வில்சன்.
“ஏற்கெனவே பிரதமர் நினைப்பவரை நியமித்துவிடலாம். அதில், ஒருதலைச் சார்புக்கு வாய்ப்புண்டு. இப்போது எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரும் இதை முடிவு செய்யும் பொறுப்பை பகிர்ந்துகொள்வார்கள். இதன் மூலம் சார்பின்மை, தகுதி ஆகியவற்றை உறுதி செய்ய முடியும். மாநிலக் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் என்றால், முடிவு எடுக்கவே முடியாமல் போய்க்கொண்டிருக்கும்” என்றார் வில்சன்.
மாநிலக் கட்சிகளுக்கு இடம் வேண்டும்: நாகநாதன்

பட மூலாதாரம், Naganathan
ஆனால், சென்னை பல்கலைக்கழக பொருளியல் துறையின் முன்னாள் தலைவரும், திமுக கட்சி சார்ந்த அறிவு ஜீவியுமான பேராசிரியர் நாகநாதனிடம் இது பற்றிக் கேட்டபோது, “சென் வர்மா, டி.என்.சேஷன், லிங்டோ போன்றவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர்களாக இருந்தபோது தேர்தல் ஆணையம் பக்கச் சார்பற்றதாக இருந்தது. இப்போது அந்த பக்கச்சார்பின்மை குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், இப்போது உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறது.
ஆனால், தேர்தல் ஆணையம் வெறும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமல்ல மாநிலத் தேர்தல்களையும் நடத்தக்கூடியது. எனவே, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவம் இதில் இருக்கவேண்டும். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் தர முடியாது. ஆனால், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு திசைகளையும் சேர்ந்த தலா ஒரு மாநில முதல்வர்களை தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உறுப்பினராக்கலாம்.
இந்த நான்கில் இரண்டு மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலமாக இருப்பதை உறுதி செய்யலாம். எந்த மாநில முதல்வர் இதில் இடம் பெறவேண்டும் என்பதை சுழற்சி முறையில் முடிவு செய்யலாம். ஸ்விட்சர்லாந்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரமே மாநில முதல்வர்களுக்கு உண்டு. கூட்டாட்சி என்பது பிரித்து வழங்கப்பட்ட இறையாண்மை என்று கூட்டாட்சி தொடர்பான அறிஞர் கே.சி.வீயர் கூறுவதை கருத்தில் கொள்ளவேண்டும்” என்றார் நாகநாதன்.
நியமன முறையை தேர்தல் போல மாற்ற முடியாது - ராஜன் குறை

பட மூலாதாரம், Rajan Kurai/FB
அரசியல் விமர்சகரும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான ராஜன்குறை கிருஷ்ணனிடம் இது பற்றிக் கேட்டபோது,
“தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை நியமிப்பதற்கு ஒரு உயர்மட்ட குழுவை. பிரதமர், எதிர்கட்சி தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய குழுவை உருவாக்கியிருப்பது மானாவாரியான நியமனங்களை தவிர்க்க உதவும். ஆனால் எப்படி நியமிக்கப்பட்டாலும், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். எந்த அளவு இந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கூடுகிறதோ அந்த அளவு நல்லது எனலாமே தவிர, ஆணையம் எப்படி இயங்குகிறது என்பதற்கு இது மட்டுமே உத்திரவாதமல்ல.
இப்போது உச்ச நீதிமன்றத்தின் சுதந்திர செயல்பாடே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்னும்போது இந்த நிறுவனங்களின் ஆட்டானிமியைக் காப்பது அரசியல் கலாசாரத்தின் பிடியில்தான் இருக்கிறது. பாசிச கலாசாரம் நிலவும்போது எல்லா நிறுவனங்களுமே சிக்கலுக்குத்தான் உள்ளாகும். சுதந்திரவாத கலாசாரத்தை நிலை நிறுத்துவதுதான் முழுமையான தீர்வாக இருக்குமே தவிர, சட்டங்களால் மட்டுமே தீர்வைத் தர முடியாது” என்றார்.
சுதந்திரவாத கலாசாரம் ஆபத்துக்குள்ளாகாத காலங்களில் இப்படி ஒரு கேள்வியோ, இதை முறைப்படுத்துவதற்கான தேவையோ எழவே இல்லை. ஆனால், இப்படி ஒரு சிக்கல் தோன்றி அதற்கான ஒரு முறைமையை உருவாக்கித் தீர்வு காணும்போது இந்திய அரசியலில் கணிசமான பங்கு வகிக்கும் மாநிலக் கட்சிகளுக்கு இந்த முடிவெடுக்கும் நடைமுறையில் இடமில்லாமல் இருப்பது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதா என்று அவரிடம் கேட்டபோது,
“தெரியவில்லை. நியமன முறையை கிட்டத்தட்ட தேர்தல் போல மாற்ற முடியாது. தேர்தல் ஆணையரின் முடிவெடுக்கும் புலம் எல்லைக்கு உட்பட்டதுதான். அது சரிவர இயக்குவதற்கான நெறிமுறைகள் உருவாக்குவது முக்கியமே தவிர யார், எப்படி நியமிக்கப் படுகிறார்கள் என்பது மட்டுமே அல்ல. எனவே நியமனத்தில் மாநில கட்சிகளுக்கும் பங்கேற்க வாய்ப்பு தருவது என்பது சாத்தியமா, தேவையா என்று தெரியவில்லை” என்றார் ராஜன்குறை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































