இந்திய அணி சொதப்பியது எங்கே? தோல்விக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், விமல் குமார்
- பதவி, விளையாட்டு செய்தியாளர்- பிபிசி இந்தி
- பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வேறு ஒரு அணியால் தோற்கடிக்க முடியும் என்றால் அது நிச்சயம் ஆஸ்திரேலியாவாக தான் இருக்க முடியும்.
0-1 என்ற நிலையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2-1 என்று தொடரை வென்றுள்ளது ரசிகர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியை தரலாம். ஆனால், இந்த வெற்றி தற்செயலானது அல்ல.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய மண்ணில் நடைபெற்ற 27 ஒருநாள் தொடர்களில் 3 தொடர்களில் மட்டுமே இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியிடமும் ஒரு முறை பாகிஸ்தான் அணியிடமும் தோல்வியடைந்துள்ளது.
தங்களது சொந்த மண்ணில் வலுவாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் மட்டுமே தோற்கடிக்க முடியும். நடந்து முடிந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது மூலம் இதை மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியா நிரூபித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணி என்ற இடத்தையும் ஆஸ்திரேலியா பிடித்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா எங்கு தவறியது?
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோகித் ஷ்ர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகியோர் உள்நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் சதம் அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இரண்டில் ஒரு ஆட்டத்தில் இவர்களில் யாராவது ஒருவர் சதம் அடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், ஒருநாள் அணியில் இருந்து தவான் நீக்கப்பட்ட நிலையில், விராட் கோலியும், ரோகித் ஷர்மாவின் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லாமல் இருக்கிறார்கள்.
முதன் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா விளையாடவில்லை. அதை தவிர்த்து இந்த இருவரும் விளையாடிய 5 இன்னிங்ஸிலும் சேர்த்து 150 ரன்களை கூட அவர்கள் எடுக்கவில்லை என்பது இந்த தொடரின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர்
ஷுப்மன் கில், ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் ஒட்டுமொத்தமாக அணிக்கு ஏமாற்றம் அளித்திருக்கின்றனர். கில்லுக்கு 2023ஆம் ஆண்டு தன்னை நிரூபிக்க வேண்டிய ஆண்டாக உள்ளது. எப்படியே இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 50 ரன்களை அவர் கடந்துவிட்டார். இந்த தொடரில் ஜடேஜா 79 ரன்களும் பாண்டியா 66 ரன்களும் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களுக்காக பொறுப்பு என்பது இன்னும் கூடுதலாகவே உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் இருந்து வெளியேறியதைத் கருத்தில் கொண்டு சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த தொடர் அவருக்கு கெட்ட கனவாக அமைந்தது. மூன்று ஆட்டங்களிலும் டக் அவுட் ஆகியது அவர் மோசமான ஃபார்மில் இருப்பதை அப்பட்டமாக காட்டியுள்ளது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டரின் பழைய பலவீனங்களை மீண்டும் அம்பலப்படுத்தினார். அதேபோல், தரமான லெக் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக, அனுபவமிக்க இந்திய பேட்டிங் வரிசையும் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட்டது என்பதை ஆடம் ஜம்பா காட்டினார்.
சமீப ஆண்டுகளாக ட்ரெண்ட் போல்ட், ஷாகின் ஷா அஃப்ரிடி, ஸ்டார்க் என இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்தியாவின் டாப் ஆர்டர் ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறி வருகின்றனர். இந்த பலவீனத்தை இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியா அம்பலப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், ANI
பெரிய போட்டிகளில் சொதப்பும் இந்திய அணி
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 2023 உலகக் கோப்பை தொடருக்கு 17-18 ஆட்டக்காரர்களை அடையாளம் கண்டுள்ளதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அக்டோபர்-நவம்பரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை மனதில் வைத்து வெவ்வேறு ஆடுகளங்களில் வெவ்வேறு இணைகளை கண்டறிவதே தங்களது அணியின் அடிப்படை நோக்கமாக இருந்ததால் கடைசிப் போட்டியின் முடிவு ஒரு பொருட்டல்ல என்றும் அவர் கூறினார்.
டிராவிட்டின் வாதம் ஏற்கக்கூடியதுதான். ஏனென்றால், ஒரு அணிகளுக்கு எதிரான தொடரில் சிங்கமாக இருக்கும் இந்திய அணி பெரிய போட்டிகளின் நாக்- அவுட் போட்டிகளிலேயே தோல்வியடைகிறது.
இதற்கு மத்தியில், சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடைந்துள்ள தோல்வியை இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சில முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியாவும் இந்தத் தொடரில் விளையாடுவதால், டெஸ்ட் போட்டிகளைப் போலவே ஒருநாள் தொடரிலும் வெற்றி சாத்தியம் என்று டிராவிட் கூறியது எவ்வித பலனையும் அளிக்கவில்லை.

பட மூலாதாரம், ANI
ஏமாற்றமளிக்கும் முகமது ஷமி
ஜஸ்பிரிட் பும்ரா உடல் தகுதி இல்லாமல் உள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் என்பதால் முகமது சமியை இந்திய அணி அதிகம் நம்பி இருந்தது. ஆனால், 3 போட்டிகளிலும் மொத்தமே மூன்று விக்கெட்களை மட்டுமே அவர் வீழ்த்தியுள்ளார். அவரது எக்னாமியும் 5.5க்கு அதிகமாக இருந்தது.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு புவனேஷ்வர் குமாரை மறந்துவிட்டது, தற்போது விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் ஷர்துல் தாக்கூர் ஆல் ரவுண்டராக மட்டுமே இருக்க முடியும் போன்றவைதான் தற்போது இந்திய அணியின் பிரச்சனையாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக, சென்னை ஆட்டத்தில் பெற்ற ஒரே ஒரு தோல்வி இந்திய ஒருநாள் அணியில் திடீரென பல குறைபாடுகளை வெளிவர செய்துள்ளது.
இந்த மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அனைவரும் அதில் மும்முரமாக இருப்பார்கள். அதன்பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கவுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரை இந்திய அணி எந்தளவுக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதன்பின்னர், ஆசிய கோப்பை, உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் போன்ற சவால்கள் காத்திருக்கின்றன.
மீண்டும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை தோற்கடித்தால், தற்போது அடைந்த இந்த தோல்வி 6 மாதங்களுக்குப் பிறகு மேலும் சிக்கலைத் தரும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



















