You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
SRH vs DC: டிராவிஸ் ஹெட் டெல்லிக்கு கொடுத்த 'மரண அடி' - அசுர பேட்டிங்கின் ரகசியம் என்ன?
- எழுதியவர், விதான்ஷு குமார்
- பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஹைதராபாத் அணியின் 266 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி அணி 199 ரன்களுக்கு சுருண்டது.
டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில், டி. நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் ரன் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு, ஹைதராபாத் அணி சனிக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது.
பவர் பிளே
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பல சாதனைகளைப் படைத்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடியின் ஆக்ரோஷமான விளையாட்டால், அந்த அணி 5 ஓவரில் 100 ரன்களை எட்டியது. முதல் பவர்பிளே முடிவதற்குள், ஹைதராபாத் எந்த விக்கெட்டும் இல்லாமல் 125 ரன்கள் எடுத்திருந்தது. எந்தவொரு டி20 போட்டியின் பவர்பிளேவிலும் இதுவே மிகப்பெரிய ஸ்கோர் ஆகும்.
இதற்கு முன் 2017இல் டர்ஹாமுக்கு எதிராக நாட்டிங்ஹாம்ஷயர் 6 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்திருந்தது. 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்தது ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையாக அமைந்தது. இதற்கு முன் 2017இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக பவர்பிளேவில் 105 ரன்கள் எடுத்திருந்தது.
ஆறு ஓவரில் 125 ரன்கள் என்பது எவ்வளவு பெரிய ஸ்கோர் என்பதை இப்படிப் புரிந்து கொள்ளலாம்: அதாவது, ஹைதராபாத் இந்த ரன்ரேட்டில் 20 ஓவர்கள் விளையாடியிருந்தால், இறுதியில் ஸ்கோர் 400 ரன்களை தாண்டியிருக்கும். 50 ஓவர் போட்டியில், இந்த ரன்ரேட் ஸ்கோர் மூலம் 1000 ரன்களுக்கு மேல் கிடைத்திருக்கும்.
டிராவிஸ் ஹெட்டின் வேகமான அரைசதம்
பவர் பிளே: ஹைதராபாத் அணியின் அபார பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் மீண்டும் முக்கியப் பங்கு வகித்தார்.
சனிக்கிழமை இரவு, ஐபிஎல்-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தார். வெறும் 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், இந்த சீசனில் 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மாவின் சாதனையை சமன் செய்தார்.
இந்த சீசனில் அதிவேக சதம் அடிக்கும் பாதையில் டிராவிஸ் ஹெட் பயணித்தார். ஆனால், குல்தீப் யாதவின் ஒரு பந்து அவரது பயணத்தை முடித்துவிட்டது. டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் மூலம், ஆரஞ்சு கேப் பந்தயத்தில் (Orange Cap) டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
விராட் கோலி இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்துள்ளார், அவருக்கு அடுத்த இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
டிராவிஸ் ஹெட்டுடன், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் ஜொலித்தார். இருவரும் இணைந்து 38 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தனர். அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 383 ஆக இருந்தது.
ஹைதராபாத் அணியின் வேகமான பேட்டிங்கின் ரகசியம்
டிராவிஸ் ஹெட் வேகமாக ரன்களை எடுப்பது மட்டுமல்லாமல், அவரது இருப்பு காரணமாக அணியின் மற்ற பேட்ஸ்மேன்களும் மிகவும் சுதந்திரமாக விளையாடத் தொடங்கியுள்ளனர்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன், அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட அபிஷேக், போட்டிக்குப் பிறகு, “கடந்த ஓர் ஆண்டாக அவரைப் பின்பற்றி வருகிறேன், நான் அவருடைய தீவிர ரசிகன். மற்ற பேட்ஸ்மேன்கள் மீது எந்த அழுத்தத்தையும் அவர் அனுமதிக்க மாட்டார். இதனால், நானும் பயனடைகிறேன். அவர் எங்களுடன் விளையாடுவது எங்கள் அணியின் அதிர்ஷ்டம்,” என்றார்.
இந்த சீசனில் ஐபிஎல்-இன் அதிகபட்ச ஸ்கோர்கள் ஐந்தில் மூன்றை ஹைதராபாத் அணி பெற்றுள்ளது. போட்டிக்குப் பிறகு சுனில் கவாஸ்கர், ஹைதராபாத் அணியின் அனுபவமிக்க பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரிடம், பயிற்சி வலையிலும் உங்கள் பேட்ஸ்மேன்கள் இப்படித்தான் பேட் செய்கிறார்களா என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்கு, புவனேஷ்வர் பதிலளிக்கையில் “பயிற்சி வலையிலும்கூட, பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்குகிறார்கள். இது சற்று வினோதமாகத் தெரிகிறது, ஏனெனில் பொதுவாக வலைகளில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதற்கும், தற்காப்பு பேட்டிங்கை பயிற்சி செய்வதற்கும் நேரம் ஒதுக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு அப்படி எதுவும் நடக்கவில்லை,” என்றார்.
பவுண்டரி ஷூட்-அவுட்
வெளிப்படையாக ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் ஏற்கெனவே முதல் பந்தில் இருந்து அடித்து ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆக்ரோஷமான சிந்தனையின் உதவியுடன் டெல்லிக்கு எதிராக 266 ரன்கள் எடுத்தனர்.
இருப்பினும், ஆரம்பத்தில் வேகமான பேட்டிங்கிற்கு பிறகு, குல்தீப் யாதவ் ஹைதராபாத் அணி ஸ்கோரில் மற்றொரு சாதனையை உருவாக்கவிடாமல் தடுத்து நிறுத்தினார்.
பதிலுக்கு பேட்டிங் செய்த டெல்லி அணியும் வலுவாக ஆரம்பித்தது. அந்த அணி, முதல் பத்து ஓவர்களில் 130 ரன்களைப் பெற்றது.
இளம் பேட்ஸ்மேன்களான ஃப்ரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோர் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து டெல்லி அணியைக் காப்பாற்றினர்.
மெக்குர்க் மிக எளிதாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்தார். மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப், "இது இரு அணிகளுக்கு இடையிலான பவுண்டரி-ஷூட் அவுட்" என்று கூறினார்.
ஹெல்மெட் அணிந்த ‘பால் பாய்ஸ்'
காலப்போக்கில் கிரிக்கெட் ஆட்டம் எப்படி மாறி வருகிறது என்பதை போட்டிகளில் ஹெல்மெட் பயன்படுத்துவதன் மூலமும் சொல்லலாம்.
நல்ல தரமான ஹெல்மெட்டுகள் சந்தைக்கு வந்தபோது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் அவற்றை முதலில் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னர், கேட்சுகளை எடுக்க பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் நிற்கும் நெருக்கமான ஃபீல்டர்கள் அணிந்தனர்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் கீப்பர்கள் விக்கெட்டுக்கு அருகில் நிற்க ஆரம்பித்தபோது, அவர்கள் ஹெல்மெட்டை அணியத் தொடங்கினர். டி-20 கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன்களின் பலமான அடிகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள நடுவர்களும் ஹெல்மெட் அணிவார்கள். இப்போது எல்லைக்கு வெளியே இருந்து பந்தைப் பிடித்து மைதானத்திற்குத் திருப்பி அனுப்புவதற்குப் பொறுப்பான ‘பால் பாய்ஸ்'-கூட (Ball boys) ஹெல்மெட் அணிய வேண்டியிருந்தது.
பால் பாய்ஸ்கூட மைதானத்தில் ஹெல்மெட் அணிவது இதுவே முதல்முறையாக ஒரு போட்டியில் நடந்திருக்கலாம். கருத்து தெரிவித்த முரளி கார்த்திக் இதைச் சுட்டிக்காட்டிய போது, பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது முதல் பொறுப்பு என்பதால் இது சரியான நடவடிக்கை என சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
நடராஜனை உலகக்கோப்பை அணியில் காண முடியுமா?
முதல் பத்து ஓவர்களில் டெல்லி சிறப்பாக பேட்டிங் செய்தாலும் பின்னர் பேட் கம்மின்ஸ் மற்றும் டி.நடராஜன் ஆகியோர் அபாரமாக பந்துவீசி ஹைதராபாத் அணியின் நிலையை பலப்படுத்தினர்.
நடராஜன் 4 ஓவர்களில் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புவனேஷ்வர் குமார் கூறுகையில், “அவர் மிகவும் கடினமாக உழைக்கும் அமைதியான வீரர். பல நேரங்களில் யாரும் அவரைக் கவனிக்கவில்லை, அவர் போட்டியில் அற்புதங்களைச் செய்கிறார்” என்றார்.
அவரைப் பாராட்டிய சுனில் கவாஸ்கர், “இப்படியே தொடர்ந்து பந்து வீசினால், ஐபிஎல்லுக்கு பிறகு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார் மற்றும் டி20 உலகக் கோப்பையில் அணிக்கு ஆயுதமாக இருக்க முடியும்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)