தமிழ்நாடு மழை நிலவரம்: எத்தனை நாள் மழை பெய்யும்? எங்கெங்கு பாதிப்பு?

மழை
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டி உள்ள கேரள மாநிலத்தின் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை முதல் முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேனியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

நீலகிரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதன்கிழமை இரவு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. இதேபோல மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் பாதை

ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

உதகை - குன்னூர் மலை ரயில் பாதையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் பாறைகள், மண் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் கிடக்கின்றன.

இதன் காரணமாக உதகை - குன்னூர் இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே துறையினர் ஈடுபட்டு வ்ருகின்றனர்.

மலை ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை இரயில் சேவை வருகின்ற 25 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)