ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பளு தூக்குதல் பயிற்சி அளிக்கும் 85 வயது முதியவர்
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
கோவை உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன்(85). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த முனியப்பன் பள்ளி பருவத்தில் ஒல்லியாக இருந்ததால், "ஜிம்னாஸ்டிக்" பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மற்றவர்கள் பளு தூக்குவதை பார்த்தவருக்கு, தானும், பளு தூக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது. உடல் மெலிந்து இருந்ததால், பளுதூக்குவதற்கு பயிற்சியாளர்கள், தன்னை அனுமதிக்கவில்லை என்றார்.
பெரும் முயற்சிக்கு பிறகு, பளு தூக்க ஆரம்பித்தவருக்கு, ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து பயிற்சியாளரும், சக நண்பர்களும் உதவியுள்ளனர். 1960ல் தொடங்கிய பயிற்சி, 1962 ஆம் ஆண்டில் மாநில அளவில் பதக்கம் பெற வைத்தது. தேசியளவில் பதக்கம் பெற வேண்டும் என்ற இவரது லட்சியம் 1975 ஆம் ஆண்டு நிறைவேறியது.

பெற்றோரின் விருப்பத்தின் பேரில் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் பிறந்ததால், ஐந்து வருடங்கள் பயிற்சி செய்ய முடியவில்லை. இப்படியே விட்டால், உடல் கெட்டு விடும் எனக்கருதி,வீட்டிலேயே சிறியளவில், உடற்பயிற்சி கூடம் அமைத்து பயிற்சி எடுத்து வந்துள்ளார். வீட்டின் அருகில் இருந்த இளைஞர்கள் சிலர், தங்களுக்கு பளுதூக்கும், பயிற்சியளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிலம்பம் பழக வந்த வீரர் ஒருவர்,தனக்கும் பளு தூக்க பயிற்சியளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருக்கு கடின பயிற்சியை வழங்கிய சில மாதஙகளிலேயே, மாநில அளவில் பதக்கம் பெற்றுள்ளார்.
தன்னிடம் பயிற்சி பெற்ற, நிறைய வீரர்கள் காவல், வனம், ரயில்வே,ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சியளித்து வரும் முனியப்பன் தன்னுடைய 85 வயதிலும் அதே துடிப்போடு, மாணவிகளுக்கு பளு தூக்கும் பயிற்சியளித்து வருகிறார். மாணவிகள் 17 ஆண்டுகளாக, பல்கலைக்கழக அளவிலும், மாநில , தேசியளவிலும் தொடர்ந்து இவரது பயிற்சியில் பதக்கங்களை பெற்று வருகின்றனர்.
தயாரிப்பு & படத்தொகுப்பு: மதன் பிரசாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



