செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்தது ஏன்?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்வதாக அறிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திடீரென அந்த முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கிறார். இடையில் என்ன நடந்தது?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது அமலாக்கத்துறை வழக்கைச் சந்தித்துவரும் செந்தில் பாலாஜியை நீக்குவதாக வியாழக்கிழமையன்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "அமைச்சரைப் பதவிநீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை. இதனைச் சட்டப்படி சந்திப்போம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்து அறிவித்த முடிவை நிறுத்திவைப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அது குறித்து அதிகாரபூர்வமாக எந்த செய்திக் குறிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்து முதலமைச்சருக்கு ஆளுநர் அனுப்பிய ஐந்து பக்கக் கடிதமும் அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக அனுப்பிய கடிதமும் ஊடகங்களுக்கு வெளியானது.
ஆளுநரின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது என்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக அனுப்பியிருந்த கடிதத்தில் முதலமைச்சர் மீது ஆளுநர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
"அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தர பணம் வாங்குவது, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
அரசியல்சாசன ரீதியான தார்மீக நடைமுறைகளின் அடிப்படையிலும் அவர் மீது கிரிமினல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், சட்ட நடவடிக்கைகள் சரியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தேன்.
என்னுடைய அறிவுரையை சரியான வகையில் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஜூன் 1ஆம் தேதியன்று தூண்டக்கூடிய வாசகங்களைக் கொண்ட பதில் கடிதத்தை நீங்கள் எழுதினீர்கள். என்னுடைய அறிவுரையைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக மிக மோசமான மொழியைப் பயன்படுத்தியிருந்தீர்கள். நான் என் அரசியல்சாசன வரம்புகளை மீறுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தீர்கள். உங்களுடைய பதில் மிக ஏமாற்றமளிப்பதாக இருந்தது.
செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் அமைச்சராக தன் கடமையைச் செய்ய முடியாது என்ற காரணத்தைக் கூறி, அவரது அமைச்சரவைப் பொறுப்புகளை மாற்றியளிக்க பரிந்துரைத்து ஜூன் 15ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பினீர்கள். மேலும், இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் எனவும் கூறியிருந்தீர்கள்.

பட மூலாதாரம், SENTHIL BALAJI
ஜூன் 14ஆம் தேதி அவர் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டது குறித்தும் நீதிமன்ற காவலில் மருத்துவ சிகிச்சை எடுத்துவருவது குறித்த தகவலை நீங்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் இதில் பல தகவல்கள் பொதுவெளியில் இருந்தன.
செந்தில் பாலாஜியிடம் உள்ள துறைகளை மாற்றுவதற்கான முக்கியமான காரணங்களைக் குறிப்பிடாததால், அதே நாளில் நான் உங்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினேன். ஆனால், நான் கேட்ட தகவல்களை நீங்கள் தரவில்லை. பதிலாக, அதே நாளில் நீங்கள் எழுதிய கடிதம் ஒன்று அடுத்த நாள் எனக்கு வந்து சேர்ந்தது. 15ஆம் தேதியிட்ட கடிதம் தொடர்பாக தாமதமின்றி நடவடிக்கை எடுக்கும்படி மோசமான மொழியில் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
ஜூன் 16ஆம் தேதி நான் எழுதிய கடிதத்தில், செந்தில் பாலாஜி வகித்துவந்த இரு துறைகளை மாற்றியளித்ததோடு, விசாரணை ஒழுங்காக நடக்க வேண்டுமென்பதற்காக செந்தில் பாலாஜி பதவியில் தொடரக்கூடாது என்றும் கூறியிருந்தேன். ஆனால், செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படாததோடு, அவர் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்பதற்கான அரசாணையும் வெளிவந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், R N RAVI
செந்தில் பாலாஜி குறித்து உச்ச நீதிமன்றம் கூறியிருந்த சில தகவல்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டியிருந்தார்.
“நியாயமான விசாரணைக்கும் நீதிக்கும் செந்தில் பாலாஜி இடையூறு ஏற்படுத்தக்கூடும் என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் நீங்கள் அவரை அமைச்சராக வைத்திருந்தது அவருக்கு மேலும் ஊக்கமளித்தது. இதனால், மத்திய புலனாய்வு அமைப்பான வருமான வரித் துறையின் பணிகளையே தடுக்கும் அளவுக்குச் சென்றார். செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையோரின் வீடு மற்றும் இடங்களில் மே 28ஆம் தேதி வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, வருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டார்கள். அவர்கள் வசம் இருந்த ஆவணங்கள் பறிக்கப்பட்டன. இந்த நிலையைச் சமாளிக்க உள்ளூர் காவல்துறையினர் உதவாததால், சிஆர்பிஎஃப் படையினரின் உதவியைக் கோரும் நிலை ஏற்பட்டது.
சாதாரண சூழலில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய ஆலோசனையை மீறி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் தொடரச் செய்யும் முடிவு உங்கள் பாரபட்சமான தன்மையைக் காட்டுகிறது.
செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வதென்பது சட்ட, நீதி நடைமுறைகளுக்கு ஊறு விளைவிக்கும் என்ற நியாயமான சந்தேகங்கள் இருக்கின்றன. அம்மாதிரியான ஒரு சூழல் மாநிலத்தில் அரசியல் அமைப்புச் சட்டநடைமுறை குலைவதற்கு வழிவகுக்கும்.
இம்மாதிரியான ஒரு சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகள் எனக்கு அளிக்கும் அதிகாரத்தின்படி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்கி உத்தரவிடுகிறேன்" எனவும் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், SENTHIL BALAJI
ஆளுநரின் இரண்டாவது கடிதத்தில் கூறப்பட்டது என்ன?
இந்தக் கடிதத்திற்குப் பிறகு இரவில் ஆளுநரிடமிருந்து முதலமைச்சருக்கு இன்னொரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில், முன்பு தான் எடுத்த முடிவை நிறுத்திவைப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருந்தார்.
"செந்தில் பாலாஜி குறித்த என்னுடைய முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைக் கேட்பதே சரியாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆகவே, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை நான் கேட்கவிருக்கிறேன். என்னிடமிருந்து அடுத்த தகவல் வரும்வரை, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கும் முடிவு நிறுத்திவைக்கப்படுகிறது" என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இரவில் நடந்தது என்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டு சில மணி நேரமே ஆன நிலையில், அந்த அறிவிப்பை அவர் திரும்பப் பெற்றது ஏன் என்பதும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது.
"நான்கு நாள் தில்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் அங்கிருந்த சட்ட ஆலோசகர்களுடன் விவாதித்தார். அதற்குப் பிறகு தி.மு.கவை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படியே செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்வதாக முதல் கடிதத்தை ஆளுநர் அனுப்பினார். ஆனால், அடுத்தடுத்து அரசியல் களத்தில் நடந்த விவகாரங்களைப் பார்த்த இங்கிருந்த அரசியல் தலைவர் ஒருவர், அரசியல் சூழல் எதிர்பார்த்ததற்கு மாறாகச் செல்வதை மத்தியத் தலைமைக்குத் தெரிவித்தார். அங்கிருந்து வந்த அறிவுரையின்படி, அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது. ஒட்டுமொத்த கெட்ட பெயரும் ஆளுநர் ஏற்க வேண்டியதாகிவிட்டது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமிருந்து ஆளுநருக்கு விரிவான பதில் கடிதமோ, அறிக்கையோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

















