You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை குற்றாலத்தில் போலி டிக்கெட் மூலம் ரூ.1 கோடி முறைகேடு? வனவரிடம் இருந்து ரூ.35 லட்சம் மீட்பு
கோவை குற்றாலத்தில் போலி டிக்கெட் அச்சிட்டு ரூ.1 கோடி வரை முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த அதிகாரிகள், வனவர் ஒருவரிடம் இருந்து ரூ.35 லட்சம் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர்.
கோவை மாவட்டத்தில் போலாம்பட்டி வனச்சரகத்தில் கோவை குற்றாலம் அருவி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இங்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். கோவை குற்றாலம் முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் சூழல் சுற்றுலாவாக இயங்கி வருகிறது. நீர் வரத்து அதிகம் உள்ள நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
கோவை குற்றால அருவிக்கு செல்ல சின்னார் சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சோதனை சாவடியில் சொந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் வனத்துறையின் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவர். அதன் பின்னர் சிறுது தூரம் நடந்து சென்றால் கோவை குற்றால அருவியை அடையலாம்.
இதற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 30 ரூபாயும், இருசக்கர வாகனம் நிறுத்த 20 ரூபாயும், கார்கள் நிறுத்த 50 ரூபாயும் கட்டணமாக வனத்துறையினர் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை குற்றால கட்டண வசூலில் ரூ.1 கோடி வரை முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கோவை குற்றாலத்தில் நுழைவு சீட்டுகள் வழங்கும் இடத்தில் இரண்டு இயந்திரங்களில் நுழைவு கட்டண சீட்டை அச்சிட்டு பணம் பெறப்பட்டு வந்தது. அதில் ஒரு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கான தொகை மட்டுமே அரசுக்கு செல்லும் வகையில் மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மற்றொரு இயந்திரத்தில் நுழைவு கட்டணம் போன்றே போலியான நுழைவு சீட்டை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கியும், அந்த தொகையினை கணக்கு காட்டாமல் வனத்துறை அதிகாரிகளே எடுத்துக் கொண்டு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்த கோவை மாவட்ட வனத்துறை உத்தரவிட்டிருந்தது. இதில் நுழைவு கட்டணம் வசூலித்ததில் மோசடி நடந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலாம்பட்டி வனவர் ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் தெரிவிக்கையில், "முன்னாள் போலாம்பட்டி வனச்சரக அலுவலர் சரவணன் (தற்போது ராமேஸ்வர வனச்சரக அலுவலராக இருப்பவர்) மற்றும் போலாம்பட்டி வனவர் ராஜேஷ்குமார் கடந்த ஓராண்டாக கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவுச்சீட்டு வழங்குவதில் முறைகேடு செய்து ரூ.23 லட்சம் மற்றும் ரூ.35 லட்சம் முறையே மோசடியாக பணம் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வனவர் ராஜேஷ் குமார் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு அவர் ஒப்படைத்த ரூ.35 லட்சம், உரிய சூழல் சுற்றுலா குழு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. வனவர் ராஜேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அப்போதைய வனச் சரக அலுவலர் சரவணன் இப்போது மதுரை வன மண்டலத்தில் பணிபுரிகிறார். எனவே அவரை பணி இடைநீக்கம் செய்ய மதுரை வனப்பாதுகாவலர் மூலம் நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்