தவெக மாநாட்டில் பாசிசம், தமிழ் தேசியம், திராவிடம் பற்றி விஜய் பேசியது என்ன?
தமிழ்நாடு அரசியல் அரங்கில் புதுவரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் கொள்கைகள் என்ன? அரசியல் எந்த பாதையில் பயணிக்கப் போகிறது? என்று நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு பதில் தரும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்திருந்தது.
ஓர் அரசியல் தலைவராக தவெக கட்சி மாநாட்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தனது தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜயின் முதல் பேச்சு எப்படி இருந்தது? அவர் என்னென்ன விஷயங்கள் பற்றி பேசினார்?
“அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாற வேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை, அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்,” என்றார் விஜய்.
“இன்று இருக்கும் தலைமுறையைப் புரிந்துகொண்டால்தான் அரசியலைச் சுலபமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப் போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை." என்றார்.
கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் பற்றி விஜய் பேசினார்.
‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார், என்ற அவர், “ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைப் பின்பற்றுவோம்,” என்றார்.
“அதாவது, ஒவ்வொரு தனிமனிதரின் கடவுள் வழிபாடு என்பது அவரவர் விருப்பம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்," என்றார் நடிகர் விஜய்.
தனது கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே தனது எதிரியை அறிவித்துவிட்டதாகக் கூறினார் விஜய்.
சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார்.

“ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். நாம் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?,” என்றார்.
“இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார்.
“பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்றார் விஜய்.
மேலும், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார்.
தனது செயல்திட்டத்தின் முக்கிய விஷயமாக, அதிகாரப் பகிர்வைக் கூறினார் விஜய். “2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்று விஜய் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



