You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கான 17 மணி நேர பயணத்தில் என்ன நடந்தது? காணொளி
அமெரிக்க விண்வெளிவீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஒன்பது மாதங்கள் விண்வெளியில் இருந்துவிட்டு, பூமி வந்தடைந்துள்ளனர் .
அவர்கள் எட்டு நாட்கள் மட்டுமே விண்வெளியில் செலவிட திட்டமிட்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் பழுதானது.
எனவே அவர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வந்தனர்.
மார்ச் 18ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரை பூமிக்கு அழைத்துவரும் பணி தொடங்கியது.
இந்திய நேரப்படி மார்ச் 18ம் தேதி காலை 10.35 மணிக்கு சுனிதா உள்ளிட்டோர் பயணிக்கும் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்தது.
மார்ச் 19ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் அவர்கள் பூமி திரும்பினர்.
இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தனர்.
இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது.
ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்ற முறையில் கடல் பகுதியில் விண்கலம் இறங்கியது. அதாவது, விண்கலம் இறங்கும்போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்த செயல்முறையை 'ஸ்பிளாஷ்டவுன்' என்கின்றனர்.
சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர்.
டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது சற்று நேரத்துக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறையாகும். அப்போது விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. டிராகன் விண்கலத்தின் வெப்பத்தடுப்பு ஓடுகள் உள்ளே இருந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாத்தன.
சிறிது நேரத்துக்குப் பிறகு தகவல் தொடர்பு மீட்கப்பட்டு கடலில் இறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தன்னிச்சையாக விண்கலம் பூமியை நோக்கி விரைந்தது.
அப்போது விண்கலம் சுமார் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. பின்னர் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாரசூட்கள் விரிந்தன. நாசாவின் கேமராக்களில் இந்த நிகழ்வுகள் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு கடலில் வந்து விழுந்த விண்கலத்தை, நாசாவின் மீட்புப் படகுகள் பத்திரமாக கப்பலுக்கு எடுத்து வந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு