குழந்தைகள் விளையாடும்போது ஆபத்தான பொருள் எதையாவது விழுங்கிவிட்டால் என்ன செய்வது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கலைவாணி
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
காசு, பணம் போன்றவற்றைவிட பெற்றோருக்குத் தங்கள் குழந்தை என்பது மேலானது. குழந்தையை கொஞ்சி மகிழும் தருணத்துக்கு ஈடாக எதையும் கூறிவிட முடியாது.
முன்பெல்லாம், குழந்தையின் ஒவ்வோர் அசைவையுமே பெற்றோர் ஒரு கணம் தவறவிடாது கண்காணிப்பார்கள். தற்போதைய அவசர யுகத்தில் ஒரு சில வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் இத்தகைய சூழலில் வாழும் குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவை குறித்து கேள்வி எழும்புகிறது.
இதுபோன்ற இடங்களில் தவழும் குழந்தைகள், எதார்த்தமாகச் செய்யும் சிறு விஷயங்கள்கூட பெரிய ஆபத்தில் முடியக்கூடும் என எச்சரிக்கிறார் கோவையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அஸ்வத். குழந்தைகள் பராமரிப்பு தொடர்பாக பிபிசி தமிழிடம் சில ஆலோசனைகளை அவர் பகிர்ந்துகொண்டார்.

“குழந்தைகளின் வசிப்பிடத்தை பாதுகாப்போடு பராமரிக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலைக்கு ஆட்கள் வந்து சென்ற பின், கீழே கிடக்கும் துரும்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்," என்கிறார் மருத்துவர் அஸ்வத்.
தவழும் காலமான 9 மாதங்கள் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள் 'ரிஸ்க் குரூப்பாக' அறியப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
"அவர்களிடம், குறடு போன்று இரு விரலில் பொருட்களை எடுத்து கையாளும் பழக்கம்(Pincer Grasp) தொடங்கும் காலமும் அதுவே. கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து, அதை ருசி பார்க்கவும், பற்கள் முளைக்கும் காலத்தில் எதையேனும் துருதுருவென கடிக்கவும் ஆரம்பிப்பர்."
ஆகையால், பெரியவர்களின் பார்வையில் மட்டும் இன்றி தவழும் குழந்தைகளின் கண்ணோட்டத்திலும் என்னவெல்லாம் ஆபத்தாக மாறும் என்பதையும் பார்க்க வேண்டும் என்று அஸ்வத் அறிவுறுத்துகிறார்.
என்னென்ன பொருட்கள் ஆபத்தானவை?
குழந்தைகள் கையாளக்கூடிய பொருட்கள் என்பது கிராமம், நகரம் இரண்டிலும் வேறுபடும். பெரும்பாலும் நகரங்களில் "மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மேக்னடிக் பொருட்களால் குழந்தைகளுக்கு படுகாயம் ஏற்படக்கூடும்."
எடுத்துக்காட்டாக, ஸ்மார்ட் வாட்ச், டிஜிட்டல் தர்மோமீட்டர், நகரும் பொம்மைகள் போன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படும் பட்டன் அளவிலான பேட்டரிகளை குறிப்பிடலாம். "அது பொட்டு போன்ற வட்ட வடிவில், மிளிரும்படி அழகாய் இருப்பதால் குழந்தைகளைக் கவரும். ஒருவேளை சார்ஜ் முழுமையாகத் தீராத பேட்டரியை வாயில் போட்டால், ஈசோஃபேகஸ் (Esophagus) எனும் உணவுக் குழாயில் சிக்கி, பொத்துக் கொண்டு நுரையீரல் வரை செல்லவும் வாய்ப்பு உள்ளது."
அதை 4 முதல் 6 மணிநேரத்திற்குள் அகற்றிவிட வேண்டும். இல்லையென்றால் உமிழ் நீரில் இருக்கும் சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவற்றோடு சேர்ந்து மின்சாரம் தாக்க ஏதுவாகிவிடும் என்று எச்சரிக்கிறார் அஸ்வத். இதனால், "எலக்ட்ரிக்கல் பர்ன் எனப்படும் மின்சார தீக்காயத்தை உணவுக் குழாயில் ஏற்படுத்திவிடும். மின்சாரம் தாக்குவதால் ஏற்படும் தீமைகள் குழந்தைகளுக்கு இதனாலும் நேரலாம்."
நிக்கல், லித்தியம் பேட்டரிகள், கண்ணாடித் துண்டுகள், நாணயம், பின்னூசி, சிறிய மெட்டல்கள், பொம்மைக் கார்களின் சக்கரம், பொம்மைகளின் பேட்டரி மூடியைப் பிணைக்க பயன்படும் குட்டி குட்டி ஸ்க்ரூக்கள், பேனாவின் ரீஃபிள் உள்ளிட்டவற்றை குழந்தைகள் வாயில் போடுவதும் ஆபத்தானது என்றும் விளக்கினார் அவர்.
இதைப் போலவே, பெட் பாட்டில்கள் எனப்படும் தண்ணீர் பாட்டில் மூடிகளை குழந்தைகள் விழுங்க அதிகளவில் முயல்வார்கள் என்றும் அஸ்வத் எச்சரிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
“தண்ணீர் பாட்டில்களின் மூடிகள் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டிருக்கும். குழந்தைகள் விரும்பும் வகையில் பால் நிறத்திலான வெள்ளை, இளஞ்சிவப்பு, நீல நிறத்தில் நறுமணத்துடன் இவை இருப்பதால் குழந்தைகளுக்கு அதை ருசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.
இதை வாயில் போட்டால், தொண்டையில் சிக்கி மூச்சித்திணறல் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம். எனவே, இத்தகைய தண்ணீர் பாட்டில்கள், குளிர் பான பாட்டில்களை நீங்கள் பயன்படுத்தினால், குழந்தைகள் கைகளுக்கு எட்டாதவாறு அவற்றை வைக்க வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறார்.
கிராமப்புறங்களை பொறுத்தவரை இவற்றுடன் சேர்த்து வேறு சில ஆபத்துகளும் இருக்கின்றன. கிராமங்களில் பொதுவாக வீடுகளிலேயே தானியங்கள், விதைகள் போன்றவற்றை தரையில் கொட்டி உலர வைப்பார்கள். இவற்றை குழந்தைகள் எடுத்து தங்களின் வாயில் போட்டுக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.
இதேபோல், "குழந்தைகளுக்கு அதிக பரிட்சயமான பாட்டில்களுக்குள் பூச்சிக் கொல்லி மருந்துகளை வைத்திருப்பார்கள். பாத்ரூம் கிளீனர், கிருமி நாசினிகள், உள்ளிட்டவற்றை கைக்கு எட்டும்படி வைத்திருப்பதும் ஆபத்து.
அந்த பாட்டிலைத் திறக்கும்போது அதிலிருந்து வரும் மணம் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்துவிடும். குடித்துப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும்.
அதில் நிரப்பியுள்ள திரவத்தின் நிறமும் முன்பு ஒருமுறை சுவைத்த இனிப்பான பழச்சாற்றை நினைவூட்டி குழந்தைகளை ஈர்க்கும். வெண்ணிறத்தில் இருந்தால் பால் என நினைத்துப் பருகிட வாய்ப்புண்டு. எனவே, இவற்றை குழந்தைகளின் பார்வையில் படாதவாறு பார்த்துகொள்ள வேண்டும்," என்று மருத்துவர் அஸ்வத் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மரப்பாச்சி பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம்
குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக் கொடுப்பதிலும் பெற்றோர் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் அஸ்வத்.
முன்பெல்லாம் பொம்மைக்கு பூசும் சாயத்தில் ஈயம் என்னும் விஷத்தன்மை வாய்ந்த உலோகம் இருந்தது. அதனால் பல குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தும் நேர்ந்தது. இதன் விளைவாக குழந்தைகள் கையாளும் பொருட்களில் ஈயம் பயன்பாடு ஒழிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், "குழந்தைகள் அடம் பிடிக்கிறார்களே என்பதற்காக அவர்களது வயதுக்கு மீறிய பொம்மைகளை வாங்கிக் கொடுப்பதால் மோசமான விளைவுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவற்றை பிறந்தநாளுக்கு பரிசாக அளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மாறாக மரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். அதில், செம்மண், களிமண், காய்கறிகள் போன்ற இயற்கையான நிறமிகள் கொண்ட பூச்சே இருக்கும்.
குழந்தைகளை கவனிக்க முடியாத சூழலில் இருக்கும் பெற்றோர்கள், குழந்தைகளின் பொம்மைப் பெட்டியில் உள்ள கழன்றுபோன குட்டி டயர்கள், உடைந்த ரிமோட்டில் இருக்கும் பேட்டரிகள், பட்டன்கள், கழற்றி மாட்டக்கூடிய பொம்மைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஒருசில குழந்தைகள் உடைந்த பலூனை வாயில் வைத்து உறிஞ்சி குட்டி பப்புள் போன்று செய்து குழந்தைகள் கையில் தேய்த்து அதில் வரும் ‘கிரீச்’ சத்தத்தை ரசித்து விளையாடுவார்கள்.
அத்தகைய பலூனின் ஒரு பகுதி துண்டாகி வயிற்றுக்குள் போனால் பெரும்பாலும் தொல்லை தராது. மலம் வழியே வெளியேறிட வாய்ப்புண்டு. அதுவே குழந்தைகளின் மிக மெல்லிய காற்றுக் குழாயை அடைத்துவிட்டால், மூச்சுத் திணறல், அடைப்பு போன்றவை ஏற்படக்கூடும் என்று அஸ்வத் தெரிவிக்கிறார்.
இதேபோல், குழந்தைகள் உள்ள வீட்டில் இருக்கும் பெரியோர்கள் தினசரி மாத்திரைகளை உட்கொள்பவர்களாக இருந்தால், குழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு மாத்திரைகளை வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"ஆணி, நட்டு, போல்ட் போன்றவைகூட எக்ஸ்ரே செய்து பார்க்கும்போது அயல்பொருளாகத் தெரிந்துவிடும். ஆனால் உணவுப் பொருட்களான கடலைக் கொட்டை, பொட்டுக் கடலை, மாதுளை விதை, பாப்கார்ன், வேர்க்கடலைத் தோல் ஆகியவற்றை மூக்கில் போட்டுவிட்டால் அது பெரும்பாலும் எக்ஸ்ரேவில் தெரிய வர வாய்ப்பு குறைவு.
எனவே, மருத்துவர்கள் கூட சில நேரம் எதுவும் மூச்சுக்குழாயில் சிக்கவில்லை என்ற தவறான முடிவுக்கு வந்துவிட வாய்ப்புள்ளது."

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகள் விளையாடும் சூழல் குறித்த ஆய்வு அவசியம்
குழந்தை திடீரென மயங்கியதாக மருத்துவரிடம் பெற்றோர் அழைத்து வருவார்கள். அப்போது குழந்தை என்ன மாதிரியான சூழலில் முதல் அறிகுறியை வெளிப்படுத்தியது என ஆய்வு செய்ய வேண்டும் என்று அஸ்வத் அறிவுறுத்துகிறார்.
எடுத்துக்காட்டாக, ஸ்வீட் கார்ன் எனப்படும் வேக வைத்த சோளத்தை குழந்தைகள் சாப்பிட்டு ஒருவருக்கொருவர் அடித்து விளையாடும்போதோ, அதிர்ச்சியை வெளிப்படுத்த திடீரென மூச்சை உள்ளே இழுக்கும்போதோ, வாயில் வைத்துக்கொண்டே சிரிக்கும் போதோ அது உணவுக் குழாயில் மாட்டியிருக்கலாம்.
இப்படி ஏதும் நடந்தால், "உடன் விளையாடிய குழந்தைகளிடமும் நடந்ததைக் கேட்க வேண்டும். அந்தச் சூழலில் சிதறிக் கிடந்த அல்லது சாப்பிட்டுக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்து பார்க்கவேண்டும். இல்லையேல் சாப்பிடும்போது எலும்போ, மீன் முள்ளோ தொண்டையில் சிக்கியிருக்கலாம்.
சினிமா தியேட்டரில் நகைச்சுவைக் காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டே பாப்கார்ன் சாப்பிடும்போதுகூட அது மூச்சுக்குழாயை அடைத்துவிட வாய்ப்புண்டு."
குழந்தைகள் விளையாடும்போது எதையாவது விழுங்கிவிட்டார்களா என்பதை எப்படி அறிவது?

பட மூலாதாரம், Getty Images
எவ்வித காய்ச்சல், சளி இல்லாத ஆரோக்கியமான குழந்தைகளுக்கு திடீரென பின்வரும் அறிகுறிகள் தெரிந்தால் எதையாவது விழுங்கியிருக்கலாம் என சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
- மூச்சுத் திணறல் ஏற்படுதல்
- வாயில் நுரை தள்ளுதல்
- கை, கால்கள் நீலம் பூத்தல்
- விழுங்க முடியாமல் வாயிலிருந்து எச்சில் வடிதல்
- மூச்சுவிடாமல் அதிக சத்தத்தில் வீரிட்டு கத்தி அழுதல்
- திடீரென சோர்வடைதல்
- உடல் தூக்கிப் போடுதல்
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், குழந்தைகளை மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். அதை விடுத்து நாமே எதையேனும் யூகித்து போனமுறை மருத்துவர் கொடுத்த மருந்தை கொடுத்துப் பார்க்கலாம் எனப் பரிசோதித்து காலம் தாழ்த்தக் கூடாது.
ஆபத்தை வெளிப்படுத்த சொல்லிக் கொடுங்கள்
குழந்தைகள் 2 வயதைக் கடந்துவிட்டாலே பொதுவாக பேசத் தொடங்கிவிடுவார்கள். தொண்டையிலோ மூக்கிலோ ஏதேனும் சிக்கியிருக்கும்போது பாதிக்கப்பட்ட குழந்தையால் பேச முடியாது. எனவே குழந்தைகளுக்கு Universal Sign of Choking-ஐ சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அதாவது தான் அபாயத்தில் இருப்பதைக் குறிக்க தனது குரல்வளையை தனது கையை வைத்தே நெருக்குவது போன்ற அறிகுறியை செய்துகாட்டி தன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை வெளிப்படுத்துவது எப்படி என்பதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றும் மருத்துவர் அஸ்வத் கூறுகிறார்.
முதல் உதவி
முதுகுக்குப் பின்புறம் ஓங்கி தட்டவேண்டும். வயிற்றுக்கும், நெஞ்சுக்கும் இடையே கையை வைத்தோ, பின்னால் இருந்து அணைத்தோ அழுத்த வேண்டும்.
இந்த அழுத்தமானது சிக்கியுள்ள பொருள் சற்று மேலே வர வழிவகுக்கும். அப்போது இருமியே அதை வெளியேற்றச் செய்யலாம். அல்லது கண்ணுக்குத் தென்பட்டால் வாயை நன்கு திறக்கச் சொல்லி, தொண்டைக்குள் கையையோ, முள் இடுக்கியை விட்டோ எடுத்துவிடலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























