You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேர்தல் பத்திர வழக்கு: பாரத ஸ்டேட் வங்கிக்கு எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம் - காணொளி
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மார்ச் 12ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை சமர்பிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி அளிக்கும் தகவல்களை மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.
நரேந்திர மோதி அரசாங்கத்தால் கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், எந்தவொரு இந்தியக் குடிமகனும் எந்தக் கட்சிக்கும் நன்கொடையாக பணம் வழங்க விரும்பினால், அந்தத் தொகைக்கான தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வாங்கலாம்.
பின்னர், எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுக்கப்படுகிறதோ, அந்த கட்சி இந்தப் பத்திரத்தை வைத்து 15 நாட்களுக்குள் பணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தை அரசு அறிவித்ததில் இருந்தே அது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கு முக்கிய காரணம், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பவர்களின் பெயர் உள்ளிட்ட எந்தவொரு விவரமும் அரசியல் கட்சிக்கும் வங்கியால் தெரியப்படுத்தப்படாது, பொதுமக்களும் தரப்படமாட்டாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் இந்த தகவலை பெற முடியாது என மத்திய அரசும் தெரிவித்தது.
இந்நிலையில், தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து ஜனநாயக சீர் திருத்தங்களுக்கான சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்து, அதனை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது.
ஏப்ரல் 12, 2019 முதல் இன்றைய தேதி விற்கப்பட்ட பத்திரங்களின் விவரத்தை 2024 மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்குமாறு, தேர்தல் பத்திரங்களை கையாளுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒவ்வொரு தேர்தல் பத்திரமும் எப்போது விற்கப்பட்டது, யார் வாங்கினார்கள், எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது, எந்தெந்த அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றன, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தையும் எப்போது அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக்கொண்டன உள்ளிட்டவை உட்பட, இந்த விவரங்களை தான் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)