பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈ.வெ.ரா எம்எல்ஏ திடீர் மரணம்

முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் காலமானார்.
பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா (46). இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஆக இருந்த நிலையில், இன்று மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியாரின் கொள்ளுப்பேரன்

மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா, பெரியாரின் கொள்ளுப்பேரன் ஆவார்.
2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார் திருமகன் ஈ.வெ.ரா.
அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் சார்பில் தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். அந்த தேர்தலில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.
41 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று, பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவெரா சட்டப்பேரவைக்கு சென்றார்.

உடல் நலம் பாதிப்பு
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த திருமகன் ஈவெரா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்த திருமகன் ஈவெராவிற்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக, வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டில் திருமகன் ஈவெராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
குடும்ப பின்னணி
தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த திருமகன் ஈவெராவிற்கு, மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
பி.ஏ. பொருளாதார பட்டப்படிப்பு படித்துள்ள திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றபின், தொகுதி மக்களுடன் நெருக்கிய தொடர்பை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
இளம் வயது எம்.எல்.ஏ.வாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈ.வெ.ராவின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.எஸ். அழகிரி இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதில், ``46 வயது மட்டுமே நிரம்பிய திருமகன் ஈவெராவின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















