அதிரடி மட்டுமல்ல.. சேவாக்கை இன்றும் மறக்க முடியாத வீரராக்கிய 6 விஷயங்கள்

சேவாக்
    • எழுதியவர், தினேஷ் குமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒரு பேட்டரின் மகத்துவத்தை அவர் குவிக்கும் ரன்களை மட்டுமே வைத்து அளவிட முடியாது. ரசிகர்களின் நினைவுகளில் அவர் என்னவாக எஞ்சியிருக்கிறார் என்பதைப் பொறுத்தே அவருடைய மகத்துவம் உணரப்படுகிறது. 90-களில் பிறந்தவர்கள் சிலருக்கு சச்சினை விட சேவாக்தான் ஆதர்சம்.

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சேவாக் என்றால் துணிச்சல். அப்படி சேவாக்கின் துணிச்சல் வெளிப்பட்ட போட்டி என பாகிஸ்தானுக்கு எதிரான 2004 முல்தான் டெஸ்டை சொல்லலாம். அணியில் தன் இடம் குறித்த கவலையில் சேவாக் இருந்த சமயம் அது. டெஸ்டில் சதமோ இரட்டைச் சதமோ அடிக்காவிட்டால் தன் இடம் காலி என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

அதிரடியாக விளையாடிய சேவாக் முதல் நாளிலேயே இரட்டைச் சதமடித்தார். அடுத்த நாள் முதல் அரைமணி நேரம் கவனமாக விளையாடிய அவர், பிறகு வழக்கமான தனது ஷாட்களை ஆடத் தொடங்கினார். 280 ரன்களில் அவர் இருந்த போது "இன்னும் இரண்டு ரன் எடுத்தால், ஓர் இந்தியர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரான லட்சுமணின் சாதனையை முறியடித்துவிடுவாய் என்பது உனக்குத் தெரியுமா?" என்று சச்சின் அவரிடம் கேட்டுள்ளார்.

ஆனால், அடுத்த பந்திலேயே எட்ஜ் கொடுத்து சேவாக் அவுட் ஆகியிருக்க வேண்டியது. ஆனால், பந்து கீப்பருக்கும் ஸ்லிப் ஃபீல்டருக்கும் இடையில் சென்றதால் தப்பித்தார்.

பின்னர், 295 ரன்களில் இருந்தபோது சச்சினிடம் சென்ற அவர், "சக்லைன் முஷ்தாக் எப்படி வேண்டுமானாலும் பந்துவீசட்டும். நான் கிரீஸை விட்டு இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கப் போகிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு "உனக்கு என்னப் பைத்தியமா?" என்று சச்சின் கேட்டுள்ளார்.

"இல்லை. என்ன நடந்தாலும் நடக்கட்டும். எனக்குக் கவலையில்லை. இப்போது ஒரு சிக்ஸர் அடிக்க வேண்டும், அவ்வளவுதான்" என்றிருக்கிறார் சேவாக்.

சொன்னபடியே சிக்ஸர் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்தியர் ஆனார்.

சேவாக் போன்ற சுயநலமற்ற வீரரைக் காண்பது அரிது என்கிறார் இலங்கை  ஜாம்பவான் குமார் சங்கக்காரா.
படக்குறிப்பு, சேவாக்

மற்ற பேட்டர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சேவாக் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்பதற்கு 2008 காலே டெஸ்ட் ஓர் உதாரணம். முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணிக்கு இலங்கையின் மர்ம சுழலர் மெண்டிஸ் நெருக்கடி கொடுத்தார்.

சுழற்பந்து வீச்சை எதிர்த்து விளையாடுவதில் விற்பன்னர்களான கம்பீர், டிராவிட் ஆகியோர் அடுத்தடுத்து மெண்டிஸ் சுழலுக்கு இரையாகி பெவிலியன் திரும்பினர்.

மறுமனையில் சேவாக், வேறொரு கிரகத்தில் இருந்து வந்திறங்கியவர் போல மெண்டிஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். மெண்டிசுக்கு எதிராக 77 பந்துகளில் 5 ஃபோர்கள், 3 சிக்ஸர்கள் உள்பட 77 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் மொத்த ஸ்கோரான 329 இல் 201 ரன்களை அவர் மட்டுமே எடுத்தார்.

மெண்டிஸ் மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய அந்த டெஸ்டில் இந்தியா, 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேவாக் எப்படி மெண்டிஸை சமாளித்தார்?

"சேவாக், மெண்டிஸை எதிர்கொண்ட விதம் மற்ற பேட்டர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. மெண்டிஸ் ஒரு குறிப்பிட்ட லைன் & லெங்த்தில் செட்டில் ஆக சேவாக் அனுமதிக்கவில்லை." என்று தனது 'தி ஆர்ட் ஆஃப் பேட்டிங்' புத்தகத்தில் கிரிக்கெட் எழுத்தாளர் ஜாரட் கிம்பர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய மண்ணில் சிறந்த ஓபனராகத் திகழ்ந்த அவர், பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் பெரிதாக சோபிக்கவில்லை. குறிப்பாக வலக்கை பேட்டர்களுக்கு பந்தை எடுத்துச் செல்லும் ஸ்டெயின் உள்ளிட்ட அவுட் ஸ்விங் பந்துவீச்சாளர்கள் அவருக்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர்.

இழப்பை பற்றி கவலை இல்லாதவர்

ஆசிய மண்ணில் சிறந்த ஓபனராகத் திகழ்ந்த அவர், பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் பெரிதாக சோபிக்கவில்லை. குறிப்பாக வலக்கை பேட்டர்களுக்கு பந்தை எடுத்துச் செல்லும் ஸ்டெயின் உள்ளிட்ட அவுட் ஸ்விங் பந்துவீச்சாளர்கள் அவருக்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர்.

அதேநேரம், பவுன்ஸ் அதிகமுள்ள ஆஸ்திரேலிய பிட்ச்களில் சேவாக் ரன் வேட்டை நிகழ்த்தினார். 2023 இல் மெல்போரினில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டில் அவர் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது. தனது முதல் ஸ்பெல்லை அனல் பறக்க வீசிய பிரெட் லீயின் இரண்டு பவுன்சர்கள் சேவாக்கின் ஹெல்மெட்டைத் தாக்கின.

தொடக்கத்தில் மெதுவாகத் தொடங்கிய சேவாக், பின்னர் தனது வழக்கமான அதிரடிக்குத் திரும்பினார். 25 ஃபோர்களும் 5 சிக்ஸர்கள் அடங்கிய அந்த இன்னிங்ஸில் அவர் 83.69 ஸ்ட்ரைக் ரேட்டில் 195 ரன்கள் குவித்தார். பகுதி நேர சுழலர் கேடிச்சின் புல் டாஸ் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்ற போது பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இரட்டைச் சதத்தை இழந்ததற்காக அவர் சிறிதும் வருந்தவில்லை. மீண்டும் அதுபோன்ற சூழல் வாய்த்தால், ஒரு பகுதிநேர இடக்கை சுழலரை எதிர்கொள்ளும் போது, அதே ஷாட்டைத் தான் ஆடுவேன் என்று உறுதியாக கூறினார்.

சேவாக்

இடக்கைச் சுழலர்கள் மீதான ஆதிக்கம்

இடக்கைச் சுழலர்கள் மீதான சேவாக்கின் ஆதிக்க மனப்பான்மைக்கு 2002 லார்ட்ஸ் மற்றொரு உதாரணம். சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்லி கைல்ஸ் பந்துவீச வந்ததும் உடனடியாக கவர் திசையில் இரு பவுண்டரிகளை அவர் விளாசினார்.

சேவாக்கின் அடியைக் கண்டு அச்சமடைந்த கைல்ஸ், தற்காப்புக்காக ஓவர் த விக்கெட்டுக்குச் சென்றார்.

சேவாக், லெக் சைடில் நகர்ந்து கவர் திசையில் அடிக்க முயன்று பவுல்டானார். அப்போது மீடியா பாக்ஸில் இருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆதர்டன், சேவாக்கின் அணுகுமுறையை விமர்சித்தார்.

அங்கிருந்த வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குஹா, "சேவாக் 84 ரன்களை எட்டிய விதம்தான் அவர் ஆட்டமிழக்கவும் காரணமாக இருந்தது. வழக்கமான தொடக்க ஆட்டக்காரரைப் போல — அதாவது, உங்களைப் போல (ஆதர்டன்) அவரால் விளையாட முடியாது" என்று பதிலடி கொடுத்தார்.

தனது ஆல் டைம் இந்திய லெவனில் கவாஸ்கரின் ஜோடியாக சேவாக்கை வைத்து அழகு பார்க்கிறார் ராமச்சந்திர குஹா.

சேவாக் டெஸ்டில் எப்படி சாதித்தார்?

"டெஸ்டில் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடங்குவார்கள். ஆனால், அந்த லைனில் எந்த லெங்த்தில் போட்டாலும் சேவாக் ஆஃப் சைடில் பிரித்துவிடுவார். சரி ஸ்டம்ப் லைனில் வீசலாம் என்றால், அழகாக லெக் சைடில் ஃபிளிக் செய்துவிடுவார். வேறு வழியின்றி கொஞ்சம் ஷார்ட்டாக பிட்ச்சில் அடித்துப் போட்டால், ஆஃப் சைடில் ஸ்லிப் ஃபீல்டர்களின் தலைக்கு மேலோ அல்லது லெக் சைடிலோ தூக்கி அடித்துவிடுவார். சுழற்பந்து வீச்சாளர்களை அழைப்பது என்பது சேவாக்கை விருந்துக்கு அழைப்பது போல. புதிய பந்து என்பதால் பவுன்சர் உத்தியையும் கையில் எடுக்க முடியாது. பந்து சேதமடைந்தால் ஸ்விங் செய்வது கஷ்டம். பந்துவீச்சாளர்கள் என்னதான் செய்வார்கள்?" என்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் ஜாரட் கிம்பர்.

சேவாக்கின் ஆட்டத்தில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தன. கால்பாடம்(footwork) சிறப்பாக இல்லாததால், பந்துகளுக்கு ஏற்ப கால்களை நகர்த்தி விளையாடும் நுட்பம் அவருக்குச் சாத்தியப்படவில்லை. ஆனால், அதுவே அவருக்கு ஒரு நிலையான சமநிலையுடன் கூடிய பேட்டிங் ஸ்டேன்ஸை உருவாக்கித் தந்தது. இப்படித் தன் பலவீனங்களையே பலமாக மாற்றிக் கொண்டவர் அவர்.

சிறப்பான கண்-கை ஒருங்கிணைப்பும் (hand-eye coordination) அபாரமான மணிக்கட்டுச் செயல்பாடும் அவருக்கு வாய்த்திருந்தன. கண்-கை ஒருங்கிணைப்பு என்பதை பந்தைக் கணித்து, சரியான நேரத்தில் அடிக்கும் திறன் எனலாம்.

தொடக்கத்தில் சச்சினைப் பின்பற்ற முயன்ற சேவாக், பின்னர் தனக்கென ஒரு தனித்துவமான ஆட்டப் பாணியை உருவாக்கிக்கொண்டார். கரியரின் இறுதிக் காலத்தில்கூட தனது அதிரடி அணுகுமுறையை அவர் கைவிடவில்லை.

விரைவாக ரன் சேர்க்கும் அணுகுமுறை

சேவாக்கை பேட்டிங் டெக்னிக் இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது. டெக்னிக் இல்லாத ஒருவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 50 சராசரியில் 23 சதங்களுடன் 8586 ரன்களை குவித்திருக்க முடியாது. சேவாக் தனக்கு மட்டுமே ஒத்துவரும் ஒரு பாணியை தனக்கான டெக்னிக்காக மாற்றிக் கொண்டார்.

சிறுவயதில் 10 ஓவர் போட்டிகளை சேவாக் அதிகமாக விளையாடியுள்ளார்.

அதுபோன்ற போட்டிகளில் விரைவாக ரன் குவிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அதனால், விரைவாக ரன் சேர்க்க வேண்டிய அணுகுமுறையை அவர் வளர்த்துக் கொண்டார். அதையே சர்வதேச கிரிக்கெட்டிலும் தனக்கான பாணியை அமைத்துக்கொண்டார்.

தொடக்கத்தில் சச்சினைப் பின்பற்ற முயன்ற சேவாக், பின்னர் தனக்கென ஒரு தனித்துவமான ஆட்டப் பாணியை உருவாக்கிக்கொண்டார். கரியரின் இறுதிக் காலத்தில்கூட தனது அதிரடி அணுகுமுறையை அவர் கைவிடவில்லை.

ஃபார்ம் சரிந்ததும், பார்வைத்திறன் குறைந்ததும், அவரது போதாமைகள் வெளிப்படத் தொடங்கின. இருப்பினும், தனது சாகச மனப்பான்மையிலிருந்து அவர் பின்வாங்காததால், அவரைத் தேர்வு செய்வதில் தேர்வாளர்கள் ஆர்வம் காட்டுவதை நிறுத்திக்கொண்டனர்.

சேவாக்

சிந்தனை முழுக்க பவுண்டரி, சிக்ஸர்

சேவாக் போன்ற சுயநலமற்ற வீரரைக் காண்பது அரிது என்கிறார் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா.

"விரைவாக ரன் குவித்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதுவே சேவாக்கின் ஒரே லட்சியம். டெஸ்ட், ஒருநாள், டி20 என எதுவாக இருந்தாலும் அவருடைய அணுகுமுறை ஒன்றுதான். ஆடுகளங்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் ஏற்ப ஓரளவுக்கு அவர் தன்னை மாற்றிக்கொள்வார். ஆனால், தனக்கேற்ப அவர்கள் மாற வேண்டும் என்பதையே அவர் அதிகம் விரும்பினார்." என்று விஸ்டன் இதழில் எழுதினார் குமார் சங்கக்காரா.

"பார்வையாளர்களும் எதிரணி வீரர்களும் அவரை அலட்சியமானவராகவும் ஆடம்பரமானவராகவும் கருதக்கூடும். ஆனால், அவருக்கு மிக நுட்பமான கிரிக்கெட் அறிவு இருக்கிறது. ஆட்டத்தைப் பற்றி அவர் தெளிவாகவும் நேர்மறையாகவும் சிந்திப்பார். உத்தி ரீதியிலும் சிறந்த புரிதல் கொண்டவர்." என்கிறார் அவர்.

"இந்தியா பேட்டிங் செய்யும்போது வீரர்கள் அமரும் இடத்தில் அவர் பக்கத்தில் அமர்ந்தால்தான், சேவாக் எப்படி சிந்திக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சில நிமிடங்களுக்கு ஒருமுறை தலையைப் பிடித்துக்கொண்டு, 'பவுண்டரி மிஸ்' அல்லது 'சிக்ஸர் மிஸ்' என்று கத்துவார். தான் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்திருக்க வேண்டிய பந்தில் மற்றொரு வீரர் ரன் எடுக்கத் தவறுவதைப் பார்த்து வரும் ஏமாற்றம் அது. பவுண்டரிகள், சிக்ஸர்கள் என்றுதான் அவர் எப்போதும் சிந்திக்கிறார்." என்கிறார் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கை தொடக்க வீரராக மாற்றிய கேப்டனான கங்குலி.

சேவாக் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர் குவிக்கும் ரன்களை மட்டுமே வைத்து அளவிட்டு விட முடியாது என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் ராகுல் பட்டாச்சார்யா.

"சேவாக்கின் அதிரடி ஆட்டம் சக பேட்டர்களுக்கு நெருக்கடியை குறைத்தது. சேவாக் வேகமாக ரன் சேர்த்த போட்டிகளில் சச்சின் பொறுமையாக விளையாடினார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடும் பொறுப்பை சேவாக்கிடம் எடுத்துக் கொண்டதால் சச்சின் ரன் குவிப்பதில் கவனம் செலுத்தினார்." என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு