ஆம்ஸ்ட்ராங் விவகாரம்: திருமாவளவன் - ரஞ்சித் இடையே என்ன நடக்கிறது?
பகுஜன்சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரத்தைத் தாண்டி தலித் செயற்பாட்டாளர்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபுறம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தங்களின் நடவடிக்கை தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் யாரோடும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
அதே சமயத்தில் எந்தவொரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்நிலையில் வைத்து அணுகியது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை அன்று, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 'ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி' நிகழ்வைக் குறிப்பிட்டுதான் திருமாவளவன் பேசியதாக விமர்சனங்களும் எழுந்தன.
இந்த விவகாரத்தில் நடப்பது என்ன? ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளில் சிலவற்றுக்குள் முரண்பாடுகள் நிலவுவதாக கூறப்படுவது உண்மையா?
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ‘ "ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை குறித்துப் பேசினால் பி-டீம் என்று சொல்கின்றனர். நம் ஒற்றுமைக்கு விலை பேசுகின்றனர். பாஜகவிற்கு எப்போதும் நேர் எதிரானவர்கள் நாங்கள்” எனக் கூறினார்.
திமுகவை மட்டுமல்லாது அனைத்துக் கட்சிகளையும் தான் விமர்சிப்பதாக கூறிய அவர், "அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றியுள்ளன. அதிமுக, திமுகவுக்குதான் நாங்கள் மாற்றி மாற்றி வாக்கு செலுத்தியுள்ளோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு செய்தது என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "எங்களுக்கு எதிராக அண்ணன் திருமாவளவனை நிறுத்துவது கொடுமையான விஷயம். அவருக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் நிற்க மாட்டோம். அவர் எங்களுடைய குரல்" எனக் கூறினார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை (20.07.2024) அன்று தனது முகநூல் பக்கத்தில், நேரலையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "கூலியைப் பெற்றுக் கொண்டு, சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற, அரசியல் அறியாமையில் உளறுகிற அற்பர்கள், ஆம்ஸ்ட்ராங் கொலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்படும் நிலையில், அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது என்றும் தன் கட்சியினருக்கு அறிவுறுத்தினார் திருமாவளவன்.
சனிக்கிழமை (21.07.2024) அன்று நீலம் பண்பாட்டு மையத்தின் பேரணி நடைபெறும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாக திருமாவளவன் இவ்வாறு பேசினார்.
ஆனால், திருமாவளவன் நீலம் பண்பாட்டு மையத்தைக் குறித்து பேசவில்லை என்றும், தங்களுக்குள் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றும் கூறுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலக் கொள்கைபரப்புத் துணைச் செயலாளர் ஆதிமொழி.
"ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் நீதி வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அப்படியிருக்க, உண்மையில் சில சக்திகள் கூலி வாங்கிக்கொண்டு இந்த விஷயத்தை திமுகவுக்கு விசிகவுக்கும் எதிராக திருப்ப முயல்கிறார்கள். இதன் பின்னணியில் பாஜக உள்ளது. அவர்களைதான் திருமாவளவன் குறிப்பிட்டார்" என்கிறார் அவர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்டவர்களை விரைவாக கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை தெரிவித்த போது, விசிக தலைவர் திருமாவளவன் அதனை மறுத்து, "கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இதைச் சுட்டிக்காட்டிய ஆதிமொழி, "நாங்கள் கண்மூடித்தனமாக திமுகவுக்கு ஆதரவளிப்பவர்கள் அல்ல. மக்களுக்கான பணி என்பது வேறு, தேர்தல் அரசியல் என்பது வேறு என்பதில் தெளிவாக உள்ளோம். தொடக்கத்திலிருந்தே இந்த படுகொலை வழக்கில் நீதிக்காக தீவிரமாக பணியாற்றுவது விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான்" என்று கூறினார்.
பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நிற்கும் அமைப்பு என்ற முறையில், ஆம்ஸ்ட்ராங் தொடர்பான நிகழ்வுகள் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதில் தவறு இல்லை என்றும் அவர் கூறினார்.
நீலம் பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வாசுகி பாஸ்கர் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பேசும்போது, "பொதுவாகவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலில், இயக்கங்களுக்கும் தேர்தல் அரசியலில் இருக்கும் கட்சிகளுக்கும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படி சில சிக்கல்கள் எங்களுக்கும் விசிகவுக்கும் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி திருமாவளவனை ஒரு முன்னோடியாகத்தான் பார்க்கிறோம்" என்றார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியிருப்பதன் அர்த்தம், நீலம் பண்பாட்டு மையம் தேர்தலில் களம் காணப்போகிறது என்பது அல்ல.
"ஆம்ஸ்ட்ராங்கை 'ரவுடி' என்று சொன்னார்கள். தலித் ஒருவரை 'ரவுடி' என குற்றம் சுமத்தினால் அதை இந்த சமூகம் எளிதாக ஏற்றுக்கொள்ளும். இதை மாற்ற தான் நீலம் பண்பாட்டு மையம் போராடி வருகிறது. இப்போதைக்கு தேர்தல் அரசியலில் நுழையும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்கள் பின்னால் எந்தக் கட்சியும் இல்லை. மக்களை அணிதிரள சொல்வது, அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கதான்" என்கிறார் வாசுகி பாஸ்கர்.

பட மூலாதாரம், PA RANJITH/FACEBOOK
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



