நெருக்கடியில் தள்ளிய ஆஸ்திரேலியா; இனி இந்தியாவுக்கு ‘இதுதான்’ ஒரே வாய்ப்பா?

இந்திய அணி இப்படித் தோற்றது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இதன்மூலம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைவதையும் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இன்று காலை ஆட்டத்தை தொடங்கியது ஆஸ்திரேலியா.

உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவுக்காக பேட்டிங்கை தொடங்கினர். கடந்த இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜா, இம்முறை தனது இரண்டாவது பந்திலேயே அஸ்வின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.

அதன் பிறகு இணைந்த லபூஷனே, டிராவிஸ் ஹெட் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த இணை ஆஸ்திரேலிய அணியை மிக எளிதாக வெற்றி இலக்கை நோக்கி அழைத்து சென்றது.

இதனால் வெற்றிக்கு தேவையான 76 ரன்களை அந்த அணி 19ஆவது ஓவரிலேயே எட்டியது.

தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் கிட்டத்தட்ட ஒருநாள் போட்டியை போலவே சற்று அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் பொறுமையாக விளையாடிவந்த லபூஷனே 58 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் தோல்வியை தழுவினாலும் 2-1 என்ற கணக்கில் இந்தியா இத்தொடரில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்திய அணி இப்படித் தோற்றது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

2021–2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு இதுவரை எந்த அணியும் தேர்வாகாமல் இருந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் இருந்தன.

இந்த போட்டியில் வெற்றிபெற்றது மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ளது ஆஸ்திரேலியா. பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியை ட்ரா செய்தாலே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் சென்றுவிடலாம் என்ற நிலை அந்த அணிக்கு இருந்தது.

இந்த சூழலில், இப்போட்டியில் வென்று அந்த வாய்ப்பை தற்போது உறுதி செய்துள்ளது ஆஸ்திரேலியா.

இந்திய அணி இப்படித் தோற்றது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியா என்ன செய்யவேண்டும்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு அடுத்ததாக நடக்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாயமாக வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 60.29 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்தியா நழுவ விடவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்றால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாவது உறுதியாகும். அதேநேரம் அப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலோ அல்லது ட்ராவில் முடிந்தாலோ இலங்கைக்கு இறுதி போட்டிக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

நான்காவது போட்டியில் இந்தியா வெற்றியை தவறவிடும்பட்சத்தில், இம்மாதம் நடைபெறும் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற்றால், அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது.

எனவே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்ய அடுத்த போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. அப்படி வெற்றி பெற முடியவில்லை என்றால் இலங்கை, நியூஸிலாந்து தொடரை பொறுத்தே இந்தியாவின் வாய்ப்பு அமையும். எனவே அடுத்த போட்டி இந்தியாவுக்கு வாழ்வா சாவா போட்டியாக இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: