You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கன்னியாகுமரியில் மோதி தியானம் செய்த 3 நாட்களும் அவருக்கு விடுப்பா? வேலை நாளா?
நடந்து முடிந்த கடைசி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், கன்னியாகுமரியில் பிரதமர் மோதி செலவிட்ட 45 மணி நேரம் அரசுப் பதிவேடுகளில் எப்படிப் பதிவாகியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திடம் கேட்டிருந்தது.
இந்த விண்ணப்பத்திற்குப் பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் மோதி விடுப்பு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மேலும், “பிரதமர் எப்போதும் பணியில் இருக்கிறார்,” என்றும் அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோதி பொறுப்பேற்றதில் இருந்து ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என அவரது அலுவலகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோதிக்கு முன் இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சிலர் தங்கள் பதவிக்காலத்தில் விடுப்பு எடுத்திருந்த தகவலையும் அவர்கள் வெளியிட்டனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் அடங்குவர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் படி, முன்னாள் பிரதமர்களின் விடுமுறைகள் குறித்த தகவல்கள் பிரதமர் அலுவலகத்திடம் இல்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு, 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர், மேக்கிங் அன் மேக்கிங் ஆஃப் டாக்டர் மன்மோகன் சிங்' என்ற புத்தகம் எழுதியிருந்தார்.
பிபிசியிடம் பேசிய சஞ்சய் பாரு, “பிரதமர் நரேந்திர மோதி கன்னியாகுமரியில் செய்த தியானத்தை அவரது முறையான கடமையின் ஒரு பகுதி என்று கூறுவது நகைப்புக்குரியது. மக்கள் தியானம் செய்யும் போது, அவர்கள் அதைத் தங்கள் அலுவல்பூர்வ வேலை, அல்லது கடமையாகவா செய்கிறார்கள்? எந்த நிறுவனமும் தியானத்தைத் தனது ஊழியர்களின் கடமையாகக் கருதுமா? மற்றொரு விஷயம், பிரதமர் அலுவலகத்தில் இல்லாதபோது, அரசாங்கத்தைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பை மற்றொரு அமைச்சருக்கு வழங்குவது பிரதமரின் பொறுப்பு,” என்றார்.
மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா சௌத்ரி சமீபத்தில் தனது ‘பிரதமர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள்’ என்ற புத்தகத்தில் பிரதமர்கள் பணிசெய்யும் பாணி குறித்து கூர்ந்து ஆய்வு செய்திருந்தார்.
“பூஜை செய்ய பிரதமருக்கு உரிமை உண்டு, ஆனால் அதை ஒரு அலுவல்பூர்வ கடமை என்று அழைப்பது எப்படி என எனக்குப் புரியவில்லை. அவரது தியான நேரத்தை உத்தியோகக் கடமை என்று அழைப்பதில் எந்த தர்க்கமும் எனக்குத் தெரியவில்லை,” என்கிறார்.
இதுவே வெளிநாடுகளில், பிரதமர்கள் அல்லது அதிபர்கள் தங்கள் விடுமுறை நாட்களை பகிரங்கமாக விவாதிக்கிறார்கள்.
அமெரிக்காவில், அதிபர்கள் தங்கள் விடுமுறையை வெவ்வேறு இடங்களில் கழித்துள்ளனர், இந்த போக்கு பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது.
வரலாற்றாசிரியர் லாரன்ஸ் நட்சன் தனது கட்டுரையில், "இன்று, ஒரு அமெரிக்க அதிபர் விடுமுறைக்குச் செல்லும்போது, அவர் ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செல்கிறார். அவரது தகவல் தொடர்பு ஊழியர்கள், ரகசிய சேவை, போலீஸ் மற்றும் ஊடகவியலாளர்களும் அவர் அருகிலேயே இருப்பர். மேலும், அவரது ஒவ்வொரு அசைவையும் பற்றிய செய்திகளை கொடுக்கிறார்கள்,” என்கிறார்.
மேலும் "அதிபர் கோல்ஃப் வண்டியில் இருந்தாலும், படகில் இருந்தாலும், மலையில் இருந்தாலும், அவரது ஓவல் அலுவலகத்தைப் போலவே அவருக்கு தகவல் மற்றும் தகவல்தொடர்புகளை எளிதாக அணுக முடியும்," என்கிறார்.
நட்சன் மேலும் கூறுகையில், “இந்த விடுமுறைகள் குறித்துப் பல ஆண்டுகளாகச் சர்ச்சை உள்ளது. விடுமுறை நாட்களில் ஏற்படும் செலவுகள், எடுக்கப்பட்ட விடுமுறைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நீளம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன," என்கிறார்.
பிரிட்டன் பற்றி பேசினால், அங்கும் பிரதமர் தனது விடுமுறை நாட்களைப் பற்றிப் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
விடுமுறை நாட்களில் முக்கியமான விஷயங்களைப் பற்றி பிரதமர் அறிந்திருந்தாலும், வெளியில் செல்வதற்கு முன், அவர் இல்லாத நேரத்தில் அன்றாடப் பணிகளைக் கையாளும் ஒரு அமைச்சரை நியமிப்பார். சமீபத்தில், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனது பதவிக் காலத்தில் முதல் முறையாக தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்றபோது, இதேபோன்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)