பாக்யராஜ்: தமிழ் சினிமாவின் 'திரைக்கதை மன்னன்' என புகழப்படுவது ஏன்?

பட மூலாதாரம், PraveenaFilmCircuit
'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தில் எனது உதவி இயக்குநர் பாக்யராஜ் தான் கதாநாயகன் எனச் சொன்னபோது, எல்லோரும் கேட்டது, 'ஏன் இப்படி ஒரு விஷப் பரீட்சை?'. ஆனால், என்னுடைய கதையில் நான் கற்பனை செய்த ஒரு வாத்தியார் இப்படி தான் இருப்பார் என பதில் சொன்னேன்'- சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா ஒரு காணொளியில் இவ்வாறு பேசியிருப்பார்.
பள்ளிக்காலங்களில் தான் பார்த்த ஆசிரியர்கள் போன்ற தோற்றம் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 'புதிய வார்ப்புகள்' சண்முகமணிக்கு (பாக்யராஜ்) கண்ணாடி அணிவித்திருப்பார் பாரதிராஜா. பின்னாட்களில் அந்த கண்ணாடி பாக்யராஜின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப் போனது.
'திரைக்கதை மன்னன்' என கொண்டாடப்பட்ட மறைந்த இயக்குநர் பாக்யராஜ், முதன்முதலாக திரைக்கதை எழுதியது (பாரதிராஜாவுடன் இணைந்து) 'புதிய வார்ப்புகள்' (1979) திரைப்படத்திற்காக தான். 'சிறந்த வசனங்களுக்கான' தமிழ்நாடு அரசின் விருதும் அத்திரைப்படத்திற்காக பாக்யராஜுக்கு கிடைத்தது.
'சாதாரண மனிதர்களை ஹீரோவாக காட்டியவர்'

பட மூலாதாரம், Vigranth Creation
'தூறல் நின்னு போச்சு' (1982) திரைப்படத்தில் பெண் பார்க்கச் செல்லும் கதாநாயகன் செல்லத்துரை (பாக்யராஜ்), உடன் தனது சமவயது நண்பனையும் அழைத்துச் செல்வான். அப்போது பெண் வீட்டிற்கு வரும் ஒரு மூதாட்டி, நண்பனை 'மாப்பிள்ளை' என நினைத்து புகழ்ந்து விட்டு, பாக்யராஜைப் பார்த்து, 'துணை மாப்பிள்ளைக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா, திருட்டு முழி முழிக்கிறானே' என சொல்லும்போது சங்கடத்தில் நெளிவார் பாக்யராஜ்.
அப்போது 'கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்- பாக்யராஜ்' என்ற வரிகள் திரையில் தோன்றும்.
அதேபோல, 'சுந்தரகாண்டம்' (1992) திரைப்படத்தில் ஒரு முதியவர் மூட்டைகள் நிறைந்த ஒரு கை வண்டியை இழுக்க முடியாமல் திணற, 'நீங்கள் அப்படி ஓரமாக நில்லுங்கள், நான் எப்படி இழுக்கிறேன் பாருங்கள்' என பாக்யராஜ் வாங்கி, இழுக்க முடியாமல், அந்தரத்தில் தொங்கும்போது 'பாக்யராஜ்' பெயர் திரையில் தோன்றும்.
இப்படி அவரது திரைப்படங்களில் 'பாக்யராஜ்' என்ற பெயர் தோன்றும் காட்சிகள் மிகவும் எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும். திரைக்கதையில் எங்கு கைதட்டல்கள் கிடைக்கும் என அவர் கணித்திருப்பாரோ, அங்கே அந்தப் பெயர் தோன்றும்.
"பாக்யராஜின் திரைப்படங்களில் அவர் செய்த ஒரு புரட்சி என்பது, சாதாரண மனிதர்களை 'ஹீரோவாக' காட்டியது. 'தாவணிக் கனவுகள்' திரைப்படத்தில் தனது தங்கைகளுக்கு திருமணம் செய்துவைக்கப் போராடும் ஒரு வேலையில்லா பட்டதாரி இளைஞன், 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் மனைவியை இழந்து கைக்குழந்தையோடு ஒரு புதிய ஊருக்கு வரும் ஆசிரியர், 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தில் சினிமாவில் சாதிக்கும் ஆசையோடு கேரளாவிலிருந்து சென்னை வரும் ஒரு ஏழை இசைக் கலைஞன் என உதாரணங்கள் சொல்லலாம்." என்கிறார் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் அஜயன் பாலா.
"நம்மால் எளிதில் உள்வாங்கிக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள் அல்லது குறையுள்ளவர்கள் தான் அவரது படத்தின் ஹீரோக்கள். கதாநாயாகனுக்கு எல்லாம் தெரிந்தும் அப்பாவியாக இருப்பான். சமயம் வரும்போது அவன் புத்திசாலித்தனத்தை/வீரத்தை வெளிப்படுத்துவான். 'எதற்கெடுத்தாலும் சினம் கொள்ளும் அல்லது சண்டையிடும் ஹீரோ' என்ற நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமற்ற கதாநாயகர்களை, பாக்யராஜ் மாற்றி எழுதினார்" என்கிறார் அவர்.
அதேபோல, "அவர் உருவாக்கிய கதை/திரைக்கதைகளில் அவரைத் தவிர வேறு ஒருவரை நம்மால் நிச்சயம் கற்பனை செய்ய முடியாது. ஒரு இயக்குநரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிக்கவும் செய்து, அதிக வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார் என்றால், அது பாக்யராஜாக தான் இருக்க முடியும்" என்கிறார் அஜயன் பாலா.
'திரைக்கதை மன்னன்'

பட மூலாதாரம், KBhagyaraj
"பாக்யராஜின் பலம் என்பது திரைக்கதையில் சுவாரசியமான முடிச்சுகள் போடுவது அல்ல, அதை அவிழ்ப்பது தான், அதுவும் பார்வையாளர்கள் நம்பும் வகையில்" எனக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜா.தீபா.
"திரைப்படம் தொடங்கிய சில நிமிடங்களில் அல்லது முதல் பாதியில் சரி செய்யவே முடியாத ஒரு பிரச்னையைக் காட்டிவிட்டு, பின்னர் சுவாரசியமான காட்சிகளால் அதற்கு ஒரு தீர்வைச் சொல்வார். கதாநாயகன், இசை, வணிக அம்சங்கள் என எல்லாவற்றையும் தாண்டி திரைக்கதையே ஒரு படத்தின் உயிர்நாடி என்பதை நிரூபித்தவர். அதனால் தான் அவர் திரைக்கதை மன்னன்" என்கிறார் ஜா. தீபா.
ஜா. தீபா கூறுவதற்கு உதாரணமாக 1982இல் வெளியான
'டார்லிங், டார்லிங், டார்லிங்' திரைப்படத்தைச் சொல்லலாம்.
அத்திரைப்படத்தில், ஊட்டியில் இருக்கும் ஒரு பங்களாவின் காவலாளியாகப் பணிபுரியும் சிங்காரத்தின் மகன் ராஜா (பாக்யராஜ்), பங்களா முதலாளியின் பெண்ணான ராதாவுடன் (பூர்ணிமா) சிறுவயதில் நட்புடன் பழகியிருப்பார். ராதா வெளியூருக்கு சென்றவுடன், என்றாவது ஒருநாள் அவள் திரும்பி வருவாள் என எதிர்பார்த்து, தனது காதலைச் சொல்வதற்காக காத்திருப்பான் ராஜா.
ராதா சிறுவயதில் பிரிந்து செல்லும்போது, இறந்து போன தனது நாய்க்குட்டிக்கு அதன் கல்லறையில் ராஜா தினமும் பூ வைக்க வேண்டும் என கூறிவிட்டு சென்றிருப்பாள். அதை தினமும் தவறாமல் கடைபிடித்து வருவான் ராஜா.
பல வருடங்கள் கழித்து ஊட்டிக்கு திரும்பி வரும் ராதா, ஆவலோடு காத்திருக்கும் ராஜாவைப் பார்த்து கேட்கும் முதல் கேள்வியே 'யார் நீ என்பது தான்?'. அதேபோல, பல வருடங்களாக, நாள் தவறாமல் நாயின் கல்லறைக்கு ராஜா பூ வைத்து வருவதைப் பார்த்து, 'நீ என்ன முட்டாளா, சிறுவயதில் சொன்னதை இன்னும் யாராவது பின்பற்றுவார்களா?' என கேள்வி கேட்பாள்.
அதிலும், ஏற்கனவே வேறு ஒருவருக்கு நிச்சயமான பின்னர் தான் ஊட்டிக்கு வந்திருப்பாள் ராதா. இதையெல்லம் தாண்டி ராஜாவும் ராதாவும் எப்படிச் சேர்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.
"என்னிடம் இருந்து பாக்யராஜ் பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகச் சொல்லியிருப்பான், ஆனால் நான் அவனிடம் இருந்து கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான விஷயம் திரைக்கதை தொடர்பானது தான். ஒரு படத்தின் இறுதிக்காட்சியை 'சீரியஸாக' முடிக்கக்கூடாது. அதில் ஓரளவு நகைச்சுவை இருக்க வேண்டும் என்பது தான் அது" என்று பாரதிராஜா ஒரு காணொளியில் பேசியிருப்பார்.
இதற்கும் உதாரணமாக 'டார்லிங், டார்லிங், டார்லிங்' திரைப்படத்தின் இறுதிக்காட்சியைச் சொல்லலாம். அதில் ராஜா கதாபாத்திரம் தற்கொலை செய்துகொள்வதற்காக ஒரு மலை மீது வேகமாக ஏறிச் செல்லும். அதைத் தடுக்க ராதா பின்னால் ஓடுவார். மலை ஏறிய பின்னர் ராஜா கதாபாத்திரம் அப்படியே திகைத்து நின்று விடும். பின்னால் அழுதுகொண்டே ஓடிவரும் ராதாவும் திகைத்து நின்றுவிடுவார்.
காரணம், அது மலை உச்சியல்ல, அது ஒரு மேடு. உச்சியில் ஒரு சாலை இருக்கும், மனிதர்கள் இயல்பாக நடந்துகொண்டிருப்பார்கள். இரு கதாபாத்திரங்களும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
"இத்தகைய திரைக்கதைகளால் பாக்யராஜின் திரைப்படங்களுக்கு அந்த காலகட்டத்தில் 'ரிப்பீட் ஆடியன்ஸ்' இருந்தார்கள். குடும்பம் குடும்பமாக அவரது திரைப்படங்களுக்குச் சென்றார்கள்" என்கிறார் ஜா.தீபா.
'அந்த ஏழு நாட்கள்'
பாக்யராஜின் திரைக்கதை திறனுக்கு மற்றொரு சிறந்த உதாரணம் 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படம் (1981) என்கிறார் ஜா.தீபா.
'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தின் தொடக்கத்திலேயே நாயகிக்கு (அம்பிகா) வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துவிடும், அன்று இரவே தற்கொலைக்கு முயலும் அவளை, கணவர் காப்பாற்றிவிடுவார். தனக்கு ஒரு காதல் இருந்ததை கணவனிடம் சொல்வாள். அந்தக் காதலன், சினிமாவில் இசையமைப்பாளராக முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு ஏழையான பாலக்காடு மாதவன் (பாக்யராஜ்). இப்போது மனைவியை காதலனுடன் சேர்த்து வைக்க கணவர் (ராஜேஷ் குமார்) நினைப்பார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.
"இப்படி ஒரு சிக்கலான கதையில் சற்று தடுமாறி இருந்தாலும் அத்திரைப்படம் மிகக்கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும். ஆனால் திரைக்கதை மூலம் இந்தக் கதையை பாக்யராஜ் சிறப்பாக கையாண்டிருப்பார்" என்கிறார் ஜா.தீபா.
மிகப்பெரிய வெற்றி பெற்ற 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படம், பின்னர் தெலுங்கில் 'ராதா கல்யாணம்' (1981), இந்தியில் 'வோ சாத் தீன்' (1983), கன்னடத்தில் 'லவ் மாடி நோடு' (1989) என ரீமேக் செய்யப்பட்டது.
பாக்யராஜின் 'இன்று போய் நாளை வா', 'மௌன கீதங்கள்', 'இது நம்ம ஆளு', 'முந்தானை முடிச்சு', 'சின்ன வீடு', 'அவசர போலீஸ் 100' போன்ற பல திரைப்படங்கள் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.
"'தூறல் நின்னு போச்சு' (1982) திரைப்படத்தில் கதாநாயகன் பெண் பார்க்கச் செல்கிறான் என்ற ஒற்றைக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு முழு திரைப்படத்தையும் உருவாக்கியிருப்பார் பாக்யராஜ். அவரது பெரும்பாலான திரைப்படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட முக்கிய காரணம், எல்லா கலாச்சாரங்களுக்கும் ஏற்ற அவரது திரைக்கதைகளே" என்கிறார் அஜயன் பாலா.
"இன்று பல திரைப்படங்களில் முதல் பாதியில் பெரிய முடிச்சுகளை போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் அதை அவிழ்க்க முடியாமல் அல்லது மக்கள் ரசிக்கும் வகையில் அதை முடிக்க முடியாமல் இயக்குநர்கள் தடுமாறுகிறார்கள். அதை மிக எளிதாக தனது திரைக்கதைகளில் செய்தவர் என்பதற்காகவே பாக்யராஜ் என்றும் நினைவுகூரப்படுவார்" என்கிறார் ஜா.தீபா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



















