You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏழு நாட்களில் இரண்டு முறை தமிழ்நாடு வந்த பிரதமர் மோதி - என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார்?
கடந்த 7 நாட்களில் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார். ஆளும் தி.மு.கவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
ஆனால், இந்தக் கூட்டங்களில் கவனிக்க வேண்டிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.
பேட்டியிலிருந்து: கடந்த சில நாட்களுக்குள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு பயணம் செய்துவிட்டார். தேர்தலே அறிவிக்காத நிலையிலும் அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். என்ன காரணம்? இன்னும் பத்து நாட்களில் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து, பல திட்டங்களைத் துவக்கி வைக்கவிருக்கிறார். அவரது பயணத் திட்டத்தின் அடிப்படையில்தான் தேர்தலே அறிவிக்கப்படப் போகிறது.
ஏழு நாட்களுக்குள் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது முறையாக வந்திருக்கிறார். காலை தெலங்கானா வந்துவிட்டு, மதியம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். மீண்டும் தெலங்கானா சென்று இரவு தங்குகிறார். பா.ஜ.க. 370 - 400 தொகுதிகளைப் பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த அளவு தொகுதிகளைப் பெறுவோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இதன் காரணமாக எல்லா மாநிலங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்கிறார்.
உண்மையிலேயே வளர்ச்சி, சாதனைகளைச் செய்திருந்தால் இத்தனை பயணங்கள் தேவையில்லை. ஒரு முறை மன் கீ பாத் பேசுவதைப் போல பேசிவிட்டுப் போய்விடலாம். ஊர் ஊராக பிரசாரம் செய்யத் தேவையில்லை. இதற்கு முன்பாக 303 இடங்களை உச்சபட்சமாக பெற்றார்கள்.
மீண்டும் அந்த அளவுக்கு இடங்களைப் பெறுவார்களா என்பது அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது. இந்தியா கூட்டணி கலகலத்துப் போய்விடும் என்றார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைந்துவிட்டது.
பிகாரில் அமைந்துவிட்டது. டெல்லியில், குஜராத்தில், மத்திய பிரதேசத்தில் அமைந்துவிட்டது. இப்படியாக ’இந்தியா’ கூட்டணி வலுவடைந்து வருகிறது. திங்கட்கிழமை பேசும்போது மோதி சொன்னார், "நான் சென்னை வரும்போதெல்லாம் சிலருக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது" என்றார். ஆனால், உண்மையில் இவர்கள்தான் பயந்துபோயிருக்கிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)