You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் மதுப் பயன்பாடு குறையுமா?
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளில் 500 கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பூரண மதுவிலக்கு என்ற இலக்கை நோக்கி இட்டு செல்லுமா அல்லது கண் துடைப்பு நடவடிக்கையாகவே அமையுமா?
தமிழ்நாட்டு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, "தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் 5,329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, இன்று(22-06-23) முதல் தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் -138, கோவை மண்டலத்தில் -78, மதுரை மண்டலத்தில் -125, சேலம் மண்டலத்தில் -59, திருச்சி மண்டலத்தில்-100 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.
மூடப்படும் கடைகள் எப்படி தேர்வு செய்யப்பட்டன?
500 மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த கடைகளை கண்டறியும்படியும் 500 கடைகள் மூடப்படுவது, கள்ளச்சாராய விற்பனைக்கு வழிவகுக்காமல் இருப்பதை உறுதி செய்யும்படி மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர்,
- குறைந்த வருவாய் உள்ள மதுபானக்கடைகள்
- அருகாமையில் உள்ள மதுபானக் கடைகள்
- வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகே உள்ள மதுபானக் கடைகள்
- நீண்ட நாட்களாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் மதுபானக் கடைகள்
- மூடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வரும் மதுபானக் கடைகள்
- கட்டிடத்தின் உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மதுபானக் கடைகள்
ஆகியவற்றின் அடிப்படையில் மூடப்படும் கடைகள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த கடைகளில் பணியாற்றிவந்த ஊழியர்களை வேறு பணியிடங்களில் அமர்த்துவது தொடர்பாக தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கின் வரலாறும் அதன் வருவாயும்
தமிழ்நாடு வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation Limited என்பதன் சுருக்கமே டாஸ்மாக். 1983-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இது முற்றிலும் அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். மாநிலத்தில் மதுவை மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் உரிமை இந்த நிறுவனத்துக்கு மட்டுமே இருக்கிறது.
தமிழ்நாட்டில் தனியார்வசம் இருந்த மதுபான சில்லறை விற்பனையை கடந்த 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தன் வசம் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து மது விற்பனை மூலம் அரசுக்கு வரும் வருமானம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2003-04-ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி வருவாய் கிடைத்தது. 2008-2009ஆம் ஆண்டில் இந்த வருமானம் 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது.
அடுத்த நான்கே ஆண்டுகளில் (2012-2013) 20 ஆயிரம் கோடி வருவாயை டாஸ்மாக் நிர்வாகம் எட்டியது. 2018-19ஆம் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடியை கடந்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வருமானம் , 2022-2023ஆம் நிதியாண்டில் 40 ஆயிரம் கோடியை கடந்துள்ளது. 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இது 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசின் நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 2017-2018ஆம் நிதியாண்டில் மட்டுமே முந்தைய நிதியாண்டின்(2016-2017) வசூலை விட குறைந்த வசூலை (சுமார் 200 கோடி குறைவு) டாஸ்மாக் நிர்வாகம் எட்டியது. பிற ஆண்டுகள் அனைத்திலும் டாஸ்மாக் வசூல் அதிகரித்தே காணப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட 1000 மதுக் கடைகள்
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டில் இந்த கோரிக்கை தீவிரமடைந்தது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி காந்தியவாதியான சசி பெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டார். பல மணி நேரமாக செல்போன் டவரில் இருந்த அவர், ரத்த வாந்தி எடுத்து அங்கேயே உயிரிழந்தார்.
அதே ஆண்டில், `மூடு டாஸ்மாக்கை மூடு` என்ற பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
அதை தொடர்ந்து வந்த 2016ஆம் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே மதுவிலக்கு பற்றி பேசின. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக திமுக அறிவித்தது. அதே நேரத்தில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜெயலலிதா 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு 2016 ஜூன் மாதத்தில் உத்தரவிட்டார். ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.
கடைகள் குறைக்கப்படுவதால் மது விற்பனை குறையுமா?
முதலமைச்சர்களாக இருந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இதற்கு முன்பே தலா 500 மதுபான கடைகளை மூடியுள்ளனர். 1000 மதுபான கடைகள் மூடப்பட்டும் தமிழ்நாடு அரசின் மது வருவாயில் குறைவு ஏற்படவில்லை. மாறாக, வருவாய் அதிகரித்துதான் செல்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 5, 329 மதுபானக் கடைகள் இருந்த நிலையில், 500 கடைகளை மூடும் அரசின் அறிவிப்பு மூலம் இந்த எண்ணிக்கை 4,829 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு 500 கடைகளை மூடுவது சமூகத்திலும் அரசு நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
"நிச்சயமாக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்கிறார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம். "ஒரு மதுபான கடை இல்லையென்றால், மற்றொரு கடையில் சென்று வாங்கப் போகிறார்கள். எனவே, கடையின் எண்ணிக்கையை குறைத்துள்ளதால் மது விற்பனை குறையும் என்றோ, குடிப்பழக்கம் குறையும் என்றோ கூற முடியாது. நிச்சயம் வியாபாரம் அதிகரிக்கத் தான் செய்யும்."
"தனியாரிடம் மதுக்கடைகளை ஒப்படைப்பதும் சரியாக இருக்காது. அவர்கள் எப்படி கொள்ளையடிப்பார்கள் என்பதை எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நாம் பார்த்து வந்துள்ளோம். மற்றபடி அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலா 500 மதுக்கடைகளை மூடினர். தற்போது திமுக ஆட்சியில் 500 மதுக்கடைகளை மூடியுள்ளனர். இது வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான்" என்று அவர் கூறுகிறார்.
டாஸ்மாக் மதுபான கடைகளை முழுதாக மூடாமல் எண்ணிக்கையை மட்டும் குறைப்பதால் பலன் இல்லை என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகிறார். "ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இப்படிதான் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்தார்கள். ஆனால், விற்பனையும் வருவாயும் குறையவில்லையே, ஏறிக்கொண்டே தானே இருந்தது. தற்போதும் அதே நிலைதான். கடைகளை மூடினாலும், தனியார் பார்களுக்கு அதிகளவில் அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மது அனைவருக்கும் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டுமே அது செய்யப்படுகிறது" என்றார்.
தமிழ்நாட்டில் தரமான மது கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் வைக்கிறார். " இந்தியாவின் பிற மாநிலங்களில் கிடைக்கும் தரமான மதுபானங்கள் இங்கு கிடைப்பதில்லை. மது ஆலைகளின் வருமானத்தை பெருக்குவதற்கான திட்டமாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் மது விற்பனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இருப்பதுபோன்ற அநியாயம் வேறு எங்கேயும் நடப்பது இல்லை. ஒருசில குறிப்பிட்ட பிராண்ட்கள், நிறுவனங்கள்தான் இயங்க வேண்டும் என்கிற நிர்பந்தம் உள்ளது " என்றார்.
"ஒரு பகுதியில் மூடி மறு பகுதியில் திறக்கிறார்கள்"
அரசு மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு வேறு இடங்களில் மதுக்கடைகளை திறப்பதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். "இது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும், திசைத்திருப்பும் வேலை. வருமானம் குறைந்த, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகளைதான் மூடுகிறார்கள். அதே நேரத்தில் மூடப்படும் கடைகளுக்கு மாற்றாக வேறு இடங்களை மதுபான கடைகளை திறப்பதும் நடக்கிறது. அம்பத்தூர், நெசப்பாக்கம் போன்ற பகுதிகளில் புதிதாக மதுப்பான கடைகளை திறந்துள்ளனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், " தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக 2000 டாஸ்மாக் பார்கள் உள்ளன. ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் டாஸ்மாக்கிற்கு வருவதற்கு பதிலாக நேராக இந்த பார்களுக்கு செல்கின்றன. இதில் வரி ஏய்ப்பு நடக்கின்றன. அதுபோக, டாஸ்மாகில் அதிகமாக மதுவை விற்றால் நற்சான்றிதழ், விற்காவிட்டால் மெமோ தருகிறார்கள். படிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் அரசின் லட்சியமாக இருக்க வேண்டும், ஆனால் குடிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் அரசின் லட்சியமாக இருக்கிறது" என்றார்.
மூடப்படும் மதுபானக் கடைகளுக்கு மாற்றாக வேறு இடங்களில் புதிதாக கடை திறக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டைதிமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மறுக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர் , "படிப்படியாக மதுக்கடைகளை மூடுகிறோம் என்று கூறி அதன்படி செயல்படும்போது, இதனால் எந்த பயனும் இல்லை என்று கூறுகின்றனர். அப்படியென்றால், கடையை மூடக்கூடாது என்று அவர்கள் சொல்கின்றனரா? 500 கடைகளை மூடுவதன் மூலம் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை சிறு அளவிலாவது குறையும்` என்றார். மேலும், நிச்சயமாக படிப்படியாக மதுபான கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை என்றார்.
"மது விலக்கு கொள்கையில் சீர்திருத்தம் தேவை"
மதுவிலக்கு கொள்கையில் நாம் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறோம். எனவே, இதில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் தராசு ஷ்யாம். " புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று சொல்லி பொது இடத்தில் புகைப்பிடிப்பதை தடை செய்துள்ளோம். இதனால், பொது இடத்தில் புகைப்பிடிப்பது ஓரளவு குறைந்துள்ளது. மது விஷயத்தில் இதுபோல் என்ன செய்துள்ளோம்? குடிப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால், குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக எப்படி விழிப்புணர்வு செய்யப்பட்டதோ அதேபோல் தீவிரமாக செய்ய வேண்டும்.
டாஸ்மாக் மதுக்கடைகளோடு இணைந்து செயல்பட்டுவரும் பார்கள் அனைத்தையும் மூடிவிட்டு, வீட்டில் போய்தான் மதுவை குடிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தினால், மதுப்பழக்கம் பெருமளவில் குறைந்துவிடும். வீட்டில் குழந்தைகள், பெற்றோர் எல்லாம் இருப்பார்கள் பலரும் வீட்டில் மது அருந்த தயங்குவார்கள். எனவே, இவ்வாறு செய்யும்போது நிச்சயம் மதுப்பழக்கம் குறையும்.
ஒரு ஊரில் மதுக்கடையை அமைப்பதற்கு கிராம சபை அனுமதி தேவை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். ஒருசில கிராமங்கள் இவ்வாறு தங்களுக்கு மதுக்கடைகள் தேவையில்லை என்று கூறி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இத்தகைய இடங்களில் மதுக்கடைகளை அமைக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.
ஒருவேளை மது விலக்கு காரணமாக கள்ளச்சாராயம் பெருகும் என்று நினைத்தால், கள்ளுக்கு அனுமதி தரலாம். தமிழ்நாட்டில் தென்னை மரங்கள் பரவலாக உள்ளன. ஆனால்,தென்னை விவசாயிகள் தற்போது நலிவடைந்துள்ளனர். அப்படியிருக்கும்போது, கள்ளுக்கு அனுமதி தருவது அவர்களுக்கு பயனளிக்கும்" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்