You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத்: தொழுகை செய்த இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் - என்ன காரணம்?
குஜராத் பல்கலைக்கழக விடுதியில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
பல்கலைக்கழக விடுதியின் ’ஏ’ பிளாக்கில் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் மீது 25 பேர் கொண்ட கும்பல் நடத்திய இந்த தாக்குதலில், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிபிசி குஜராத்தி குழுவினர் அந்த இடத்தை அடைந்தபோது, விடுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினரும் பல்கலைக்கழக அதிகாரிகளும் காணப்பட்டனர். இதுதவிர, கல்வீச்சு தாக்குதலை உணர்த்தும் வகையில் ஆங்காங்கே கற்களும் உடைந்த வாகனங்களும் காணப்பட்டன. மேலும் மாணவர்களும் பயந்து, மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர்களில் ஒருவரான நௌமன் பிபிசியிடம் பேசுகையில், “வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் இங்கு தங்குவது தற்போது பெரும் சவாலாக உள்ளது. சர்வதேச மாணவர்கள் தங்கும் விடுதி இது. இவர்கள் இங்கு எப்படி கூட்டம் கூட்டமாக வந்தனர் என்பது விசாரணைக்கு உரியது. அவர்கள் இங்கு அடிக்கடி வந்து, ’ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லுங்கள், இல்லையென்றால் கத்தியால் குத்தி கொன்று விடுவோம்’ என்று கூறிய சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இங்கு பெரும் ஆபத்து உள்ளது” என கூறினார்.
இதுதொடர்பாக, ஆமதாபாத் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். எனினும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் சில வீடியோக்கள் சனிக்கிழமை இரவு முதல் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதில், தாக்குதல் கும்பல் மாணவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதையும் கற்களை வீசியதையும் காண முடிந்தது. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மதவாத முழக்கங்களை எழுப்பியதையும் கேட்க முடிந்தது.
ஞாயிற்றுக்கிழமை முழு விஷயமும் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, ஆமதாபாத் நகர காவல்துறை ஆணையர் ஜி. எஸ். மாலிக்கும் சம்பவ இடத்திற்கு வந்தார். இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
“இந்த விடுதியில் சுமார் 75 மாணவர்கள் தங்கியுள்ளனர். இரவில், சில மாணவர்கள் வராண்டாவுக்கு வெளியே தொழுகை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சிலர் வந்து மாணவர்களிடம் ஏன் இங்கு பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டனர்” என்கிறார் அவர்.
பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது என காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
என்ன நடந்தது இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)