You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெலங்கானா: காவல்துறை அதிகாரி போல் ஓராண்டு நடித்து ஏமாற்றிய பெண் - யார் இவர்?
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் ஓராண்டு காலமாக ரயில்வே காவல்துறை அதிகாரியாக போலியாக மற்றவர்களை ஏமாற்றி வந்த மாளவிகா என்ற பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண் ரயில்களில் சோதனைகள் செய்வது, விழாக்கள், உறவினர் வீடுகள், கோவில்கள் என அனைத்து இடங்களிலும் காவல்துறை உடையில் உலா வந்து செல்வாக்கு செலுத்தி வந்துள்ளார்.
போலி காவல்துறை அதிகாரியாக ஏமாற்றிய இப்பெண்ணை ஏன் ஓராண்டாக கண்டுபிடிக்க முடியவில்லை?
நல்கொண்டா மாவட்டம் நர்கட் பள்ளியைச் சேர்ந்தவர் ஜடலா மாளவிகா. சிறுவயதில் இருந்தே எஸ்.ஐ. ஆக வேண்டும் என்பது மாளவிகாவின் கனவு. மாளவிகாவை போலீஸ் அதிகாரியாக பார்க்க அவரது பெற்றோரும் விரும்பினர்.
மாளவிகா நிஜாம் கல்லூரியில் வேதியியலில் எம்.எஸ்சி முடித்துள்ளார். 2018-ல், ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) எஸ்.ஐ பணிக்கு விண்ணப்பித்தார்.
இருப்பினும், கிட்டப்பார்வை குறைபாடு காரணமாக உடல் தகுதி தேர்வில் அவர் தகுதி பெற முடியவில்லை. எனவே, அவர் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெறவில்லை.
ஆனால், அவர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும், விரைவில் வேலை கிடைக்கும் என்றும் உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் நம்பினர்.
"உடல் தகுதித் தேர்வில் அவர் தோல்வியடைந்தார். எனவே, தகுதித் தேர்வுக்கு தகுதி பெறவில்லை. கடந்த ஆண்டு தனக்கு வேலை கிடைத்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பக் காரணங்களால் சம்பளம் வரவில்லை, விரைவில் சம்பளம் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்" என்று ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.பி. ஷேக் சலிமா பிபிசியிடம் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)