கனடாவில் இந்தியர்கள் வாழ முடியாதது ஏன்? நாடு திரும்பியவர்கள் கூறுவது என்ன?

கனடாவில் இந்தியர்கள் வாழ முடியாதது ஏன்? நாடு திரும்பியவர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

வாய்ப்புகளை தேடி அலையும் குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்களின் விருப்ப நாடாக கனடா நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் தற்போது அந்த கனடா கனவு தகர்ந்து போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வளம் மிகுந்த பஞ்சாபின் கிராமப்புறங்களில் பயணித்தால் , அங்கு வெளிநாட்டு பயணங்களுக்கான விளம்பரங்களை அதிகம் பார்க்கலாம்.

அதன் வயல்வெளிகளில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்று உறுதியளிக்கும் நூற்றுக்கணக்கான விளம்பர பலகைகள் உயர்ந்து நிற்பதை பார்க்கலாம். மாடி வீட்டின் சுவர்கள் தோறும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் முகவர்களின் விளம்பரங்கள் ஆக்கிரமித்திருக்கும்.

பதிண்டா நகரின் தெருக்களில் பல முகவர்களும், அவர்களை தேடி வரும் இளைஞர்களின் வெளிநாட்டு கனவினை உடனடியாக சாத்தியப்படுத்துவதாக உறுதியளிப்பார்கள்.

இந்தியாவின் வடமேற்கு மாநிலமான இங்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளிநாட்டுக் குடியேற்றத்தின் அலை வீசி வருகிறது. அதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கிய வீரர்கள் கனடாவுக்குச் செல்லும் பயணம் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிறகு கிராமப்புற பஞ்சாபியர்களின் இங்கிலாந்து பயணம் வரை அடங்கும்.

கனடா மீதான ஏமாற்றம் ஏன்?

ஆனால், தற்போது கனடா செல்வதற்கான கனவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கனடாவில் குடியேறிய பலரும் தங்களது தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

அப்படியானவர்களில் ஒருவர்தான், 28 வயதான பால்கர். கனடாவில் ஒரு வருடம் தங்கியிருந்த அவர் 2023 இன் தொடக்கத்தில் இந்தியா திரும்பினார். கோவிட் -19 தொற்றுநோய் இந்தியாவில் பரவத் தொடங்கியதை அடுத்து அவர் தனது சிறிய கிராமமான பித்தோவை விட்டு வெளியேறினார். அப்போது அவரின் இறுதி இலக்கே கனடாவின் குடியுரிமையை பெறுவது மட்டுமே. எனவே, இவரின் கல்விக்காக இவரது குடும்பம் தங்களது நிலத்தை அடமானம் வைத்துள்ளனர்.

ஆனால், கனடா சென்ற சில மாதங்களில் அவரது கனவு மங்கிவிட்டது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பால்கர், “அங்கு எல்லாமே விலை அதிகம். கல்லூரி முடித்த பிறகு, பிழைப்பிற்காக வாரத்திற்கு 50 மணிநேரம் நான் வேலை செய்ய வேண்டியிருந்தது. பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக பல மாணவர்கள் தங்களது படிப்பை கைவிடுகின்றனர்” என்றார்.

தற்போது பால்கர் தனது பெரிய முற்றம் கொண்ட தனது பாரம்பரிய பஞ்சாபி வீட்டின் ஒரு சிறிய அறையில் எம்ப்ராய்டரி தொழிலை செய்து வருகிறார். மேலும் தனது விவசாயக் குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவி வருகிறார்.

இது போன்ற கிராமப்புறங்களில் மிகக் குறைவான வேலை வாய்ப்புகளே உள்ளன. ஆனாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த இளைஞர்கள் உயரத்திற்கு செல்கின்றனர். பால்கர் தனது வணிகத்தின் பெரும்பகுதியை இன்ஸ்டாகிராம் மூலம் செய்து வருகிறார்.

இதுகுறித்து பேசுகையில், “ வாழ்க்கை வேடிக்கையாக இருக்கிறது. வீட்டிலேயே தங்கி நல்ல சம்பாத்தியம் பெறும்போது, நான் ஏன் அங்கு சென்று கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார் பால்கர்.

இந்தியா திரும்ப விரும்பும் இளைஞர்கள்

கனடாவில் இருந்து பஞ்சாப் திரும்பிய சுமார் அரை டஜன் நபர்களிடம் பிபிசி பேசியது. அனைவருமே ஒரே மாதிரியான உணர்வுகளையே பகிர்ந்து கொண்டனர்.

அப்படி கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்துள்ள இந்தியர்கள் பலரும் யூடியூபில் பகிர்ந்துள்ள வீடியோக்களில் ஒரே மாதிரியான தொனியை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதை காணலாம்.

இதுகுறித்து சமீபத்தில் இந்தியா திரும்பிய நபர் ஒருவர், குடியேற்ற முகவர்களால் (immigration agent) சொல்லப்பட்ட கனடா வாழ்க்கை குறித்த தகவலும், டொராண்டோ மற்றும் வான்கூவரில் குடியேறியவர்களின் உண்மை நிலையும் அப்படியே மாறுபட்டதாக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ராஜ் கரண் ப்ரார் பதிண்டாவை சேர்ந்தவர். இவர் வெளிநாடு செல்வதற்காக உதவும் முகவர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் நிரந்தர குடியிருப்பு மற்றும் மாணவர் விசாவைப் பெற உதவி வருகிறார்.

அவரிடம் பேசுகையில், கனடா மீதான மோகம் கொஞ்சம் குறைந்துவிட்டது. குறிப்பாக வீட்டிற்கு திரும்பி வருவதற்கான வாய்ப்புள்ள வசதி படைத்த குடியேறிகள் மத்தியில் அந்த ஆசை குறைந்து விட்டதாக தெரிவித்தார்.

இருப்பினும் கூட கனடாவில் குடியுரிமை பெறுவதற்கான விருப்பம் கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர குடும்பங்களிடம் வலுவாக உள்ளது. ஆனால், அங்கு சென்று வேலை மற்றும் வீட்டு வசதி கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள் வெளியிடும் வீடியோக்கள் இவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் குடியேற்ற முகவர்.

ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் இருந்து கனடாவில் படிப்பதற்கான அனுமதிக்கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 2023இன் இரண்டாம் பாதியில் 40% குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஒரு காரணமாக, சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய ஏஜெண்டுகள் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் பதற்றம் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னால் இந்தியாவிலிருந்து கனடாவில் குடியேறிய தலைமுறையினரின் கனடா செல்லும் கனவு மங்கி வருவதற்கு, ஆழமான கலாசாரம் சார்ந்த பல காரணங்களும் பங்கு வகிக்கின்றன.

அதில் கனடாவின் சிக்கலான பிரச்னையான பணி அனுபவத் தேவைகள் மீதான தடை, மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் சலசலப்பு போன்ற பிரச்னைகள் அடங்கும்.

கனடாவில் வீட்டு வசதி, சுகாதாரச் சிக்கல்கள்

அதிகமான மக்களுக்கு இடமளிக்க நினைக்கும் கனடாவின் தீவிர குடியேற்ற இலக்குகளில் இருந்து இந்த பிரச்னை தொடங்குகிறது.

கனடா தேசிய வங்கியின் பொருளாதார நிபுணர்களின் சமீபத்திய அறிக்கை, கனடாவின் வீட்டுவசதி நெருக்கடியில் உள்ளதாகவும், அதன் சுகாதார கட்டமைப்பு அழுத்தத்தில் இருக்கும்போது, கூடுதல் மக்கள்தொகை வளர்ச்சி மேலும் சுமையை அதிகரிப்பதாகவும் எச்சரித்தது.

புதிதாக வரும் மக்களால், கனடாவின் மக்கள்தொகை 2023 இல் 12 லட்சம் அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு மக்கள் குடியேறும் எண்ணிக்கையை 5 லட்சம் என்ற அளவில் கட்டுப்படுத்தினால் மட்டுமே, வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த முடியும் என்று நிபுணர்களின் அறிக்கை கூறப்படுகிறது.

கொள்கை வடிவமைப்பாளர்கள்(Policy Makers) இந்த அறிக்கையை மறைமுகமாக ஏற்றுக்கொண்டது போல தெரிகிறது.

சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத அரசு சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிக்கு வரம்புகளை விதித்தது. இது கல்வி விசாக்களில் தற்காலிகமாக 35 சதவீதத்தை குறைக்கும்.

கனடாவில் இருந்து வெளியேறுவதற்கான அலை வீசிக்கொண்டிருக்கும் சூழலில், இந்த குறிப்பிடத்தகுந்த கொள்கை மாற்றம், மேலும் கனடா மீதான விருப்பத்தை குறைக்கும் சிலர் நம்புகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)