"ரூ.200 கோடியைத் தாண்டும்" - திருப்பதியில் காணிக்கையாக வழங்கப்படும் முடி எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது?

திருமலை திருப்பதி, காணிக்கை, தலைமுடி

பட மூலாதாரம், TTD

    • எழுதியவர், ஸ்ரீனிவாஸ் நிம்மகட்டா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திருப்பதி திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் மொட்டை அடித்து தங்களது தலைமுடியைக் காணிக்கையாக செலுத்துகிறார்கள். திருப்பதியில் மொட்டை அடித்துக் கொள்வதாக வேண்டுதல் வைப்பது வழக்கமான ஒன்று.

திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு (2026) மே 27 வரை 12,43,063 பக்தர்கள் தங்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கையில், 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் 10,18,370 பக்தர்களும், 2024-ஆம் ஆண்டு மே மாதத்தில் 10,65,729 பக்தர்களும் இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.

சமீபத்தில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் திருமலையில் பக்தர்களின் வருகை பெருமளவில் அதிகரித்துள்ளது. மே 18 முதல் 23 வரை தொடர்ந்து ஆறு நாட்களாக தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். குறிப்பாக மே 23ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 57,580 பக்தர்கள் மொட்டை அடித்து முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர்.

இப்படி டன் கணக்கில் சேரும் இந்த தலைமுடிகள் எங்கே போகின்றன? திருப்பதி திருமலை தேவஸ்தானம் அதை என்ன செய்கிறது?

திருமலை திருப்பதி, காணிக்கை, தலைமுடி

பட மூலாதாரம், TTD

தலைமுடியை என்ன செய்வார்கள்?

திருமலையில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் முடிக்கான தேவை அதிக அளவில் உள்ளது. முடி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மின்னணு ஏலங்கள் மூலம் இந்த முடியைப் வாங்குகின்றன.

இந்த முடியைக் கொண்டு தயாரிக்கப்படும் விக்குகள் மற்றும் ஹேர் எக்ஸ்டென்ஷன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

சர்வதேச சந்தையில் 'திருப்பதி முடி' என்ற பிராண்டிற்கு நல்ல அங்கீகாரம் உள்ளது. அடர் கருப்பு நிறம், நல்ல நீளம் மற்றும் பளபளப்பு ஆகியவற்றைக் கொண்ட இந்த முடிக்கு, பாரிஸ் மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் உள்ள ஃபேஷன் சந்தைகளில் அதிக தேவை இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறுகிறது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முடி காணிக்கை செயலாக்கம்

திருப்பதி திருமலையில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் முடி சேகரிக்கப்பட்டு முதல்கட்டமாக அங்கேயே சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் அது கீழ் திருப்பதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. தரத்தின் அடிப்படையில் முடியைப் பிரித்துச் சுத்தம் செய்வதற்காகத் திருப்பதியில் ஒரு பெரிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதியின் அலிபிரிக்கு அருகில் உள்ள இந்த மையத்தில், திருமலையிலிருந்து கொண்டு வரப்படும் முடி தரத்தின் அடிப்படையில் ஆறு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:

வகை 1: 31 அங்குலத்திற்கு மேல் நீளமானது

வகை 2: 16–30 அங்குலம்

வகை 3: 10–15 அங்குலம்

வகை 4: 5–9 அங்குலம்

வகை 5: 5 அங்குலத்திற்குக் குறைவானது

வகை 6: வெள்ளை அல்லது நரை முடி

முதல் வகைக்கு அதிக தேவையும், ஐந்தாவது வகைக்குக் குறைவான தேவையும் இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். டிடிடி நடத்திய சமீபத்திய ஏலத்தில், முதல் தர முடி ஒரு கிலோவிற்கு குறைந்தபட்சம் 72,082 ரூபாய் என்றும், ஐந்தாம் தர முடி கிலோ 135 ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும், மொத்தம் 600 கிலோ முதல் தர முடி மற்றும் 2,83,000 கிலோ ஐந்தாம் தர முடி ஏலத்திற்கு வைக்கப்பட்டதாகவும் 'ஆக்ஷன்ஸ் இந்தியா' இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி, காணிக்கை, தலைமுடி, விக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அழகுசாதனத் துறையில் திருப்பதி திருமலை முடிக்குக் கணிசமான சர்வதேசத் தேவை உள்ளது

நீண்ட முடியின் தேவை

நீளமான தலைமுடிக்கு மிக அதிக விலை கிடைக்கும் அதே வேளையில், மற்ற வகை முடிகளின் விலைகள் சர்வதேச தேவை மற்றும் சந்தை நிலவரங்களைப் பொறுத்தே அமைகின்றன. தற்போது, ​​ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கப் பகுதிகளில் உள்ள ஃபேஷன் சந்தைகளில் திருமலை தலைமுடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

திருமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தலைமுடியின் நீளம், கறுப்பு நிற பளபளப்பு, இயற்கையான சுருட்டை மற்றும் 'ரெமி' முடி தரம் ஆகியவற்றின் காரணமாக, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் விக்குகள் மற்றும் எக்ஸ்டென்ஷன்கள் தயாரிப்பதற்கு இந்த தலைமுடிக்கு அதிக தேவை இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத் தகவல் தெரிவிக்கிறது

1938 முதல் தனியார் நிறுவனங்கள் தலைமுடி சேகரிப்பு மற்றும் விற்பனையை கவனித்து வந்தன. 1985 முதல்முடி காணிக்கை மையங்களை நிர்வகிக்கவும், முடி விற்பனையை நேரடியாக மேற்கொள்ளவும் தொடங்கியது. தொடக்கத்தில் சில முகவர்கள் மூலமாகவே ஏலங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், 2011-இல் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு ஏல முறை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கணிசமான வருவாயை ஈட்டித் தந்துள்ளது.

"முடி ஏலத்தின்போது விலையைச் செயற்கையாகக் குறைத்து வந்த வணிகக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, டிடிடி MSTC (Metal Scrap Trade Corporation) நிறுவனத்துடன் இணைந்து 2011-இல் மின்னணு ஏல முறையை அறிமுகப்படுத்தியது" என்று திருமலையின் இணை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. ஸ்ரீனிவாச ராஜு பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிடிடி நடத்தும் மின்-ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் என்று 'ஈ-ஆக்ஷன்ஸ் இந்தியா' இணையதளம் கணித்துள்ளது. டிடிடியின் இந்த ஏலம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது என்றும், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் தலைமுடிக்கு சர்வதேச அழகு மற்றும் விக் தயாரிப்புத் தொழில்துறையில் பெரும் தேவை உள்ளது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தலைமுடி மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. வருவாயானது 2020–21-இல் ₹67 கோடியாக இருந்த நிலையில், 2021–22-இல் ₹75 கோடியாகவும், 2022–23-இல் ₹135 கோடியாகவும், 2023–24-இல் ₹167 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

2024–25 நிதியாண்டிற்கான வருவாய் ₹190 கோடியாக இருக்கும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது ₹200 கோடி என்ற அளவைத் தாண்டக்கூடும் என்றும் NDTV தொலைக்காட்சி இணையதளம் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

தினமும் எத்தனை பேர்?

திருப்பதி ஏழுமலையானை தினமும் 70 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரையிலான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். கோடை விடுமுறை மற்றும் சிறப்புப் பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

பக்தர்களின் வருகைக்கு ஏற்பவே, தலைமுடி காணிக்கை செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அமைகிறது.

சமீபத்திய தகவலின்படி, ஜூன் 29ஆம் தேதி அன்று 95,498 பக்தர்கள் தரிசித்ததாகவும், அவர்களில் 30,231 பேர் முடி காணிக்கை செலுத்தியதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் தெரிவித்தது.

தினமும் இவ்வளவு பெரிய அளவில் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துவதால், அதற்கு ஏற்ப டிடிடி விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

திருமலையில் உள்ள பிரதான மொட்டை அடிக்கும் இடம் தவிர, பக்தர்களின் வசதிக்காக மேலும் 11 இடங்களில் 'மினி கல்யாண கட்டா' எனப்படும் சிறிய அளவிலான மொட்டை அடிக்கும் இடங்களும் நிறுவப்பட்டுள்ளன.

பக்தர்களுக்குச் சேவையாற்ற மொத்தம் 1,152 சவரத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவர்களில் 269 பெண் சவரத் தொழிலாளர்களும் அடங்குவர்.

திருமலை திருப்பதி, காணிக்கை, தலைமுடி, விக்

பட மூலாதாரம், TTD

சுகாதார நடைமுறைகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள்

ஒவ்வொரு சவரத் தொழிலாளரும் தங்களது பணி நேரத்தின் ஒரு பகுதியாக, 6 மணி நேரத்தில் 40 பேருக்கு மொட்டை அடிக்கிறார்கள். பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் நாட்களில், கூடுதலாக 250 சவரத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த இடங்களின் சுற்றுப்புறங்கள் எப்போதும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டிடிடி தெரிவித்துள்ளது.

பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி முடித்தவுடன், அந்தந்த இடங்களிலிருந்த முடிகள் உடனுக்குடன் சேகரிக்கப்பட்டுப் பத்திரப்படுத்தப்படுகின்றன.

மொட்டையடிக்கும் ஒவ்வொரு இடத்திலும் பக்தர்கள் மொட்டை அடித்த பிறகு குளிப்பதற்காகப் போதுமான குளியலறைகளுடன், வெந்நீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு