தொகுதி மறுவரையறை: திமுக ஆதரிக்காமலேயே அது நிறைவேற உதவ முடியுமா? பாஜக நம்பிக்கையும் திமுக பதிலும்

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக ஆதரிக்காமலே அது நிறைவேற உதவ முடியுமா? பாஜக நம்பிக்கையும் திமுக பதிலும்

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தொகுதி மறுவரையறை மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை இந்த மசோதாவுக்கு எதிராக தொடக்கம் முதலே கடுமையான நிலைப்பாட்டை எடுத்த திமுக, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இல்லை என்பதால் அக்கட்சியின் நகர்வு அதிகம் கவனிக்கப்படுகிறது.

இந்த மசோதாவை எவ்விதத் திருத்தங்களும் இன்றி கொண்டு வந்தால் திமுக கண்டிப்பாக எதிர்க்கும் என்று அக்கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஆனால், காங்கிரசின் துரோகத்தை மீண்டும் ஒருமுறை அனுபவித்துள்ள திமுகவின் அணுகுமுறையில் இப்போது மாற்றங்கள் தென்படுவதாகவும், மசோதாவை ஆதரிக்காமல் கூட அது நிறைவேற திமுக உதவ முடியும் என்று பாஜக தரப்பு கூறுகிறது.

தங்கள் கட்சிக்கு எம்பிக்கள் இல்லாவிடினும் தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக தவெக கூறுகிறது.

இதில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக, தனது நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை.

மக்களவையில் தோல்வியடைந்த மசோதா; மகிழ்வோடு கொண்டாடிய திமுக!

திமுகவின் ஆதரவைப் பெற பாஜக முயற்சி செய்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, திமுகவின் ஆதரவைப் பெற பாஜக முயற்சி செய்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

கடந்த நாடாளுமன்ற கோடை கால கூட்டத்தொடரில், அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அவை 2023-இல் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன. அந்தச் சட்டம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்குகிறது. ஆனால் அதன் அமலாக்கத்தை எதிர்கால மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைத்திருந்தது. தொகுதி மறுவரையின்படி 543 மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கான, அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மூன்றில் இரு பங்கு வாக்குகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பெறமுடியவில்லை. அப்போது மக்களவையில் இருந்த 528 உறுப்பினர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவானதால் அந்த மசோதா தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து மற்ற 2 மசோதாக்களையும் மத்திய அரசு வாக்கெடுப்புக்கு விடவில்லை.

இதற்கு எதிராக அப்போது தீவிரமாகப் போராடிய திமுக, மசோதா தோல்வியடைந்தபோது, அதை பெரும் வெற்றியாகக் கொண்டாடியது. அப்போது இண்டியா கூட்டணியில் திமுக அங்கம் வகித்தது. ஆனால், தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாறியதுடன், கூட்டணிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்பு நெருக்கமாக இருந்த திமுகவும், காங்கிரசும் இப்போது மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தற்போதைய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவரக் கூடும் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் மேற்கு வங்காளத்திலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மஹாராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், பா.ஜ. கட்சிக்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில், மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 318 ஆக உயர்ந்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கு வசதியாக மூன்றில் இருபங்கு ஆதரவைப் பெற இன்னும் 42 எம்.பி.க்கள் இருந்தால் போதும்.

இந்த சூழலில்தான் மக்களவையில் 22 உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுகவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. தேசிய அரசியலில் மற்ற கட்சிகளால் உற்றுநோக்கப்படுகிறது.

பாஜக, திமுக கூறுவது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முந்தைய கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியாத தொகுதி மறுவரையறை மசோதா குறித்த 131-ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய பாஜக தயாராகி வருவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுளள் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், திரிணாமூல் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து, அந்த மசோதாவின் புதிய வடிவத்தை நிறைவேற்றத் தேவையான ஆதரவைத் திரட்ட பாஜக முயற்சி செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் சந்திர பவார்) மற்றும் திமுகவின் ஆதரவைப் பெற பாஜக முயற்சி செய்து வருவதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

நடப்புக் கூட்டத்தொடர் துவங்கும் முன், கடந்த ஜூலை 19 அன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, "தொகுதி மறுவரையறை மசோதா எந்த விதத்தில் வரவிருக்கிறது என்பதை அரசாங்கம் இதுவரை தெரிவிக்கவில்லை. அதற்கான வரைவு மசோதாவையும் கொடுக்கவில்லை. எனவே, அதுபற்றி நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. தொகுதிகளை 25%-50% அதிகரிப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானாலும் அரசு அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. மசோதா பற்றிய குறிப்புகள் வந்தபிறகே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லமுடியும்." என்று கூறியிருந்தார்.

அக்கட்சியின் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா, "தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான திமுக நிலைப்பாடு குறித்து தவறான தகவல் பரவியுள்ளது. தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அளவுக்கு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை முழுமையாக எதிர்ப்போம். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. திமுக அதில் உறுதியாக இருக்கிறது." என்றார்.

ஏற்கெனவே தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாகக் கூறிய திருச்சி சிவா, இது நிறைவேற்றப்பட்டால் வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கூடி, தென் மாநிலங்களின் குரலுக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்றார். வடமாநிலங்கள், தென் மாநிலங்களுக்கு இடையில் மக்கள் தொகையில் காணப்படும் ஏற்ற தாழ்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்திரா காந்தி, வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்தபோது தலா 25 ஆண்டுகள் ஒத்தி வைத்ததுபோல இப்போதும் 25 ஆண்டுகள் ஒத்தி வைக்க வேண்டும் என்று திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அவர் விளக்கியிருந்தார்.

இருப்பினும், இந்த முறை திமுக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமுள்ளதாக பாஜக தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

பிபிசியிடம் இதுபற்றி பேசிய பாஜக மாநில செயலாளர் ஏ.பி.முருகானந்தம், ''கடந்த முறை திமுகவை காங்கிரஸ் தவறாக வழி நடத்தியது. அதனால் மசோதாவைத் தோற்கடிக்கும் முடிவை திமுக எடுத்தது. இப்போது காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை திமுக மீண்டும் ஒரு முறை அனுபவித்துள்ளது. இப்போது திமுகவின் அணுகுமுறையில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. அதற்காக பாஜகவுடன் திமுக நெருக்கமாவதாக அர்த்தமில்லை.'' என்றார்.

ஏ.பி.முருகானந்தம்.

பட மூலாதாரம், Handout

''மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் இருப்பதுதான் சரியானது என்பதை பாஜக மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி வருகிறது. இதில் எந்தவொரு திருத்தத்தையும் பாஜக கொண்டு வருவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அதனால் திமுக இந்த மசோதாவை நேரடியாக ஆதரிக்காவிட்டாலும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அவையை புறக்கணித்தாலும் இது வெற்றிபெற்றுவிடும். அதனால் ஆதரவு அளிக்காமல் திமுக வெளியில் செல்வதற்கு வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறேன்.'' என்றார் ஏ.பி.முருகானந்தம்.

இந்த கருத்தை முற்றிலும் மறுத்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், ''மசோதா வந்தால், அதைப் பார்த்தபின்புதான் முடிவு சொல்ல முடியும். அதுவரை அதைப் பற்றிக் கருத்துச் சொல்வது பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர், யானையைத் தொட்டுப்பார்த்து விவரிப்பதுபோலிருக்கும். அப்படித்தான் இப்போது இந்த மசோதா பற்றி பலரும் பலவிதமான கருத்தைச் சொல்லி வருகின்றனர். அந்த மசோதாவை நாங்கள்தான் தோற்கடித்தோம். அதை இப்போது ஆதரிக்க எந்த முகாந்திரமும் இல்லை.'' என்றார் வில்சன்.

இதே கருத்தை விரிவாக விவரித்தார் திமுக செய்தித்தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவத்தை நிர்ணயிப்பதை திமுக எப்போதுமே ஏற்காது என்று விளக்கிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்துக்கான சதவீதம் மாறக்கூடாது என்பதே திமுக நிலைப்பாடு என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ''திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தற்போது தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதமாக இருக்கிறது. இனிமேல் கொண்டுவரப்படும் மசோதாவில் இதே அளவு பிரதிநிதித்துவம் இருக்கும் என்ற உத்தரவாதம் இருந்தால் அதை ஆதரிப்பது பற்றி பின்பு முடிவு எடுக்கப்படும்.'' என்றார்.

''தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருப்பதால் அதை வைத்து பாஜக, ஏதாவது முடிவுகள் எடுக்க நினைக்கலாம். ஆனால் திமுகவை பொறுத்தவரை மக்கள் தொகை எண்ணிக்கை ஒரு பொருட்டில்லை. மாநில பிரதிநிதித்துவத்தின் அளவு எந்த வகையிலும் எந்தக் காரணத்துக்காகவும் மாற்றப்படக்கூடாது என்பதுதான் திமுகவின் என்றைக்குமான நிலைப்பாடு.'' என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

இந்த மசோதா விவகாரத்தில் அதிமுக நிலைப்பாடு என்னவாக இருக்குமென்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது மாநிலங்களவையில் மட்டுமே அதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் இருந்தாலும் அக்கட்சியின் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகளும் விவாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான வழக்கறிஞர் இன்பதுரையிடம் பிபிசி பேசியபோது, ''இது கட்சியின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.'' என்றார்.

தமிழக எம்பிக்களுக்கு விஜய் அழைப்பு - திமுக பங்கேற்குமா?

தொகுதி மறுவரையறை குறித்து விளக்கும் 'தெற்கு vs வடக்கு: இந்தியாவின் பெரும் பிளவு' நூல்.

பட மூலாதாரம், NilakantanRS

படக்குறிப்பு, தொகுதி மறுவரையறை குறித்து விளக்கும் 'தெற்கு vs வடக்கு: இந்தியாவின் பெரும் பிளவு' நூல்.

தமிழகத்தை ஆளும்கட்சியான தமிழக வெற்றிக்கழகத்துக்கு இப்போது வரை நாடாளுமன்றத்தில் எந்த பிரதிநிதித்துவமும் இல்லை என்றாலும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.

பிபிசியிடம் பேசிய தவெக தேசிய செய்தித்தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, ''தவெகவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை என்றாலும், தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை, தற்போதுள்ள வடிவில் அதை எதிர்ப்பது என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. தமிழகத்தின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையக்கூடாது.'' என்றார்.

ஆனால் இந்த மசோதாவின் தற்போதைய வடிவத்தைப் பார்க்காமலும், அரசியல்ரீதியான கொள்கை முடிவு குறித்து தெளிவான அறிவிப்பும் வராமல் எதையும் உறுதியாகக் கூறமுடியாது என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஆர்.எஸ்.நீலகண்டன். இவர், தொகுதி மறுவரையறை குறித்து விளக்கும் 'தெற்கு vs வடக்கு: இந்தியாவின் பெரும் பிளவு' (South Vs North : India's Great Divide) என்ற நூலின் ஆசிரியர்.

பிபிசியிடம் பேசிய ஆர். எஸ். நீலகண்டன், ''இப்போது வரை அரசியல்ரீதியான ஊகங்கள்தான் வெளியாகிக் கொண்டிருப்பதால் அரசியல் வியூகமாகச் சொல்லலாமே தவிர, இப்படித்தான் நடக்குமென்று திட்டவட்டமாக எதையும் கணிக்க முடியாது. மசோதா எந்த வகையில் மீண்டும் கொண்டுவரப்படுகிறது என்பதன் அடிப்படையில் மட்டுமே திமுக ஒரு முடிவை எடுக்கும் வாய்ப்புள்ளது.'' என்றார்.

''இப்போதுள்ள அளவிலேயே மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் மாறாமல் தொடருமென்று ஓர் உறுதி கொடுத்துவிட்டால், திமுக இந்த மசோதாவை ஆதரிப்பதில் பிரச்னை இருக்கப்போவதில்லை. அப்படி எந்த மாற்றமும் இல்லாமல் பழைய நிலையிலேயே மசோதா கொண்டு வரப்பட்டு, அதை திமுக ஆதரித்தால்தான் அது கடுமையாக விமர்சிக்கப்படும். மசோதாவை நிறைவேற்ற, மக்களவையில் அன்று இருக்கின்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை இருந்தால் போதும். ஆனால் அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற சிறப்புப் பெரும்பான்மையுடன் மாநிலங்களின் ஒப்புதலும் அவசியம்.'' என்றார் ஆர்.எஸ்.நீலகண்டன்.

தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டு வரப்படுவது குறித்து திட்டவட்டமான அறிவிப்பு வெளியாகாத நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக தமிழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் தலைமையில் ஆகஸ்ட் 8 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடப்பதாகக் கூறி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் திமுக பங்கேற்குமா என்று திமுக செய்தித்தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, ''திமுக எம்பிக்கள் அனைவரும் டில்லியிலிருந்து இன்று இரவுதான் திரும்புவார்கள். அதனால் நாளை காலையில்தான் தலைவர் தலைமையில் எம்பிக்களுடன் கூடி கலந்து பேசிய பின்பு அதில் பங்கேற்பதா இல்லையா என்பது பற்றி முடிவெடுக்கப்படும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு