ஹெஸ்பொலா தலைவர் மரணம்: ரகசிய இடத்தில் இரான் உச்ச தலைவர் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, நஸ்ரல்லா மரணம் ஒரு திருப்புமுனை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்
ஹெஸ்பொலா தலைவர் மரணம்: ரகசிய இடத்தில் இரான் உச்ச தலைவர் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

லெபனானில் நடைபெற்ற தாக்குதலில் ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஹெஸ்பொலாவும் தங்களின் தலைவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தது.

நஸ்ரல்லாவின் இறப்பிற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமனெயி சூளுரைத்துள்ளார். நஸ்ரல்லா மரணம் ஒரு திருப்புமுனை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

நஸ்ரல்லாவின் மரணத்தை அடுத்து என்ன நடக்கிறது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி தெரிவித்துள்ளார். இரானில் ஐந்து நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் ஆதரவற்ற மக்களுக்கு உதவ திட்டமிட்டிருந்த நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்த காமனெயி நஸ்ரல்லாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி காமனெயி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. காமனெயி ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டதாக 2 அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஹசன் நஸ்ரல்லா மரணத்தைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஹெஸ்பொலாவுடன் இரான் ஆலோசித்து வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு இரான் அழைப்பு விடுத்துள்ளது. அதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு அவையின் 15 உறுப்பினர்களுக்கும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் அமீர் இரவானி கடிதம் எழுதியுள்ளார்.

நஸ்ரல்லாவின் மரணத்தையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நஸ்ரல்லாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த நீதி இது என நஸ்ரல்லாவின் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கான நேரம் இது என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஹஸ்பொலா, ஹமாஸ் மற்றும் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தன்னை தற்காத்து கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கு தொடர்ந்து முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்று நாடு திரும்பிய நெதன்யாகு நஸ்ரல்லாவின் மரணம் ஒரு திருப்புமுனை என தெரிவித்துள்ளார்.

எண்ணற்ற இஸ்ரேலியர்கள் மற்றும் பிற வெளிநாட்டு குடிமக்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் பழிதீர்க்கப்பட்டுவிட்டதாக தெரிவித்த நெதன்யாகு

இஸ்ரேல் தொடர்ந்து தனது எதிரிகளை அழிக்கும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பிறகும் இஸ்ரேல் லெபனானில் ஹெஸ்பொலாவின் இலக்குகளை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

லெபனானில் சனிக்கிழமையன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர் மற்றும் 195 பேர் காயமடைந்துள்ளனர் என லெபனானின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அகதிகளுக்கான ஐநாவின் உயர் ஆணையர் ஃபிலிப்போ க்ராண்டி, லெபனானில் 2 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 50 ஆயிரம் பேர் அண்டை நாடான சிரியாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா ஆகிய இருதரப்புக்கும் மோதல் தொடங்கிய பிறகு கடந்த ஓராண்டில் வடக்கு இஸ்ரேல் பகுதியிலிருந்து சுமார் 70 ஆயிரம் இஸ்ரேலியர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அவசரக் கூட்டத்திற்கு இரான் அழைப்பு, நஸ்ரல்லாவின் மரணத்தை அடுத்து என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)