You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸா: ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்கொள்ளும் மருத்துவ பணியாளர்கள் - பிபிசி கள ஆய்வு
வடக்கு காஸாவில் அவசர சேவை மருத்துவ பணியாளர்கள் குழுவினரை தொடர்புகொள்ள பிபிசிக்கு அரியதொரு சூழல் கிட்டியது. பாலத்தீன செம்பிறை சங்கத்தில் 10 ஆண்டுகளாக தன்னார்வலராக உள்ள முகமது மெக்கவே மற்றும் சில அவசர சேவை மருத்துவ பணியாளர்கள் காஸாவின் போர் பயங்கரங்களை நமக்கு விவரிக்கிறார்கள்.
முகமது மெக்கவே பிபிசியிடம் பேசுகையில், "இந்த போர் மிகவும் பயங்கரமானது. முதல் 3 நாட்களில் ஏற்பட்ட அழிவுகளும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையும் கடந்த 4, 5 போர்களுக்கு சமமானவை. ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் எங்களால் முடிந்தவரை பாலத்தீன செம்பிறை சங்கத்தின் ஆவணங்களில் தகவல்களை பதிவு செய்வோம்" என்று கூறுகிறார்.
மருத்துவ பணியாளர் ராமி கமிஸ் மௌஸா அலி பேசுகையில், "ஒவ்வொரு முறை தாக்குதல் தீவிரமடையும்போதும், என் மகள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு, நீங்கள் செல்லக் கூடாது, உங்களுக்கு மீண்டும் காயம் ஏற்படும், எங்களுக்கு நீங்கள் தான் எல்லாமே, உங்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறுவாள்" என்கிறார்.
"ஏராளமான கொடுமைகளை பார்த்து சோர்வடைந்துவிட்டோம். எங்கள் அனைவருக்கும் ஒரு ஆண்டு முழுவதும் தெரபி தேவைப்படும். அது கூட போதாது என்று நினைக்கிறேன். அவ்வளவு கொடுமைகள், துன்பங்களை கடந்து வந்திருக்கிறோம்" என்கிறார் மருத்துவ பணியாளர் அலா அல் ஹலாபி.
இதுவரை காஸாவில் பணியின்போதே 339 சுகாதார பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் ஹமாஸை தான் தாங்கள் குறிவைப்பதாகவும் பொதுமக்களையோ, மருத்துவ பணியாளர்களையோ அல்ல என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கூறுகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)