இரான் தாக்குதலில் இஸ்ரேலின் இரு நகரங்களில் ஏற்பட்ட சேதத்தை காட்டும் 12 புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images
இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி மூன்று வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள அண்டை வளைகுடா நாடுகள் மீதும் இரான் தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கு பிராந்தியம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க இரானுக்கு 48 மணிநேர அவகாசம் அளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதை செய்யாவிட்டால் இரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீதான இரானின் பதிலடி தாக்குதல்களில் தெற்கு இஸ்ரேலில் அராட், டிமோனா ஆகிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனை இந்தப் படங்கள் காட்டுகின்றன.

பட மூலாதாரம், Reuters
சனிக்கிழமை, தெற்கு இஸ்ரேலில் உள்ள அராட் என்ற சிறிய நகரத்தை இரானிய ஏவுகணை ஒன்று தாக்கியது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது.

பட மூலாதாரம், Reuters
முதல் கட்ட தகவல்படி, இரானிய தாக்குதலில் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தாக்குதலை ஒரு "மிகவும் கடினமான மாலைப் பொழுது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
இரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் எந்தவொரு குறிப்பிட்ட திசையிலும் செல்வதாகத் தெரியவில்லை.
இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். ஆனால், யதார்த்த நிலை வேறாகவே உள்ளது.

பட மூலாதாரம், Reuters
போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக டிரம்ப் கூறுகிறார். மறுபுறம், கூடுதல் கடற்படை வீரர்கள் மற்றும் அமெரிக்கத் தரைப்படை வீரர்கள் அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலின் டிமோனா அணுசக்தி நிலையத்திற்கு அருகே இரானிய ஏவுகணைகள் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்கு, மீட்புப் பணியாளர்கள் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Jorge NOVOMINSKY / AFPTV / AFP via Getty Images
சனிக்கிழமை மாலை அராட் நகரில் நடந்த ஏவுகணைத் தாக்குதல் குறித்து இஸ்ரேலின் அவசரச் சேவைப் பிரிவு கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், "எங்கள் எதிரிகளை ஒவ்வொரு முனையிலும் தொடர்ந்து தாக்குவதில் உறுதியாக உள்ளோம்" என்றார்.

பட மூலாதாரம், Mostafa Alkharouf/Anadolu via Getty Images
மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை இரான் தாக்கியுள்ளது.
இப்போது இஸ்ரேலில் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த முறை டிமோனா மற்றும் அராட் நகரங்களை இலக்கு வைத்துள்ளன.

பட மூலாதாரம், Reuters
ஏவுகணை விழுந்த இடத்திலிருந்து வெறும் 13 கிலோமீட்டர் தொலைவில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ளதால், டிமோனா நகரத்திற்கு அருகிலுள்ள அந்த நிலையத்தை இலக்கு வைத்தே இரான் இந்த ஏவுகணையை ஏவியதாக நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே டிமோனா மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தெற்கு இஸ்ரேலில் உள்ள மற்ற நகரங்களையும், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராணுவத் தளங்களையும் இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
நடான்ஸ் தாக்குதலைத் தொடர்ந்து, அணுசக்தி விபத்து அபாயத்தைத் தவிர்க்க "ராணுவக் கட்டுப்பாட்டை" கடைபிடிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் கிராஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்திற்காக யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படும் இயந்திரங்கள் நடான்ஸ் நிலையத்தில் உள்ளன. இது ஜூன் 2025 போரிலும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























