வேகன் டிராஜடி: கேரளாவில் உயிருடன் ஏற்றப்பட்டவர்கள் கோவையில் சடலமாக இறக்கப்பட்ட வரலாறு
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
இது சரக்கு ரயில் பெட்டியில்லை. அதை நினைவுபடுத்தும் ஒரு மாதிரி வடிவம். இந்த ரயில் பெட்டி மாதிரி நினைவுபடுத்துவது ‘வேகன் டிராஜடி’யில் பறிக்கப்பட்ட 70 உயிர்களின் பெயர்களை.
அதென்ன வேகன் டிராஜடி...
சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த காலம் அது. அப்போது மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய மலப்புரம் மாவட்டப்பகுதிகளில் மாப்ளா கலவரத்தில் பிரிட்டிஷ் போலீசால் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அந்தமான், மெட்ராஸ், கோவை உள்ளிட்ட பல்வேறு சிறைகளுக்கும் சரக்கு ரயில் பெட்டிகளில்தான் அடைத்து அனுப்பி வைத்தனர்.
அப்படி 1921 நவம்பர் 19 அன்று திரூர் ரயில் நிலையத்திலிருந்து, காற்றே புகமுடியாத சரக்கு ரயில் பெட்டிக்குள் சுமார் 100 பேரை மூட்டைகளைப் போல அடைத்துப் பூட்டி அனுப்பியது போலீஸ். மறுநாள் கோவை போத்தனுாரில் அந்த ரயில் பெட்டியை அங்கிருந்த போலீசார் திறந்தபோது, பெட்டிக்குள் பெரும்பாலானோர் இறந்து கிடந்தனர். மருத்துவமனையில் சிலர் இறந்தனர். மொத்தமாக இறந்தோர் எண்ணிக்கை 70.
இதுதான் ‘வேகன் டிராஜடி’.
இந்திய விடுதலைப்போரில் தெற்கில் நடந்த ஜாலியன் வாலாபாக் இது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
வேகன் டிராஜடி–1921 நவம்பர் 19, 20 நடந்தது என்ன?
வெவ்வேறு புத்தங்களிலும் இந்த நிகழ்வு ஒரு பகுதியாகக் குறிக்கப்பட்டுள்ளது. திரூர் தினேஷ் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் எழுதியுள்ள 'மாப்ளா கலவரம்' (MOPLAH RIOTS) நுாலில் இந்த நிகழ்வு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அந்த கலவரத்தில் தொடர்புடைய பலரை நேரில் சந்தித்துப் பேசியும், பல்வேறு செய்தித்தாள் கட்டுரைகள், நீதிமன்ற ஆவணங்கள், பிரிட்டிஷ் அரசின் அலுவலகப்பூர்வமான பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் 'வேகன் டிராஜடி' நிகழ்வை தினேஷ் பதிவு செய்துள்ளார்.
''அப்போது மலப்புரமும் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மாப்ளா கலவரம் தீவிரமாக நடந்தபோது, அதை அடக்குவதற்காக பிரிட்டிஷ் ராணுவமும், மலபார் சிறப்பு போலீசும் பல்லாயிரக்கணக்கானவர்களை கைது செய்தன. அவர்களை இங்கிருந்து அந்தமான், மெட்ராஸ், கோவை, கண்ணனூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சரக்கு ரயில் பெட்டிகளில் அடைத்து அனுப்பி வைத்தார்கள். அதில் ஒரு பகுதியாக கோவைக்கு பலரையும் அடைத்து அனுப்பியபோதுதான் இந்த துயரம் நிகழ்ந்தது.'' என்று 'வேகன் டிராஜடி' நிகழ்வைப் பற்றி பிபிசி தமிழிடம் விளக்கினார் மலையாள எழுத்தாளர் திரூர் தினேஷ்.
''1921 நவம்பர் 19 ஆம் தேதியன்று, காற்றே புகாத சரக்கு ரயில் பெட்டிகளுக்குள் (Wagon) நுாற்றுக்கும் மேற்பட்டவர்களை மூட்டைகளைப் போல அடைத்து அனுப்பினர். அதனால் மூச்சுத்திணறிய அவர்கள், ஆணி தளர்ந்த சிறு ஓட்டையில் காற்று வருமிடத்திற்குப் போய் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். போத்தனுாரில் மறுநாள் கதவைத் திறந்தபோதுதான், பலரும் இறந்துகிடந்தனர். சிலர் மருத்துவமனை சென்றும் இறந்துள்ளனர். மொத்தம் 70 பேர் இறந்துவிட்டனர். ஆனால் அவர்களை அங்கே அடக்கம் செய்ய அனுமதிக்காமல் ரயிலிலேயே இங்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.'' என்றார் தினேஷ்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட 44 பேருடைய சடலங்கள், திரூர் ரயில் நிலையம் அருகிலுள்ள கோரங்கத் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்களும் அங்கே கல்வெட்டுகளாக குறிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 11 பேருடைய உடல்கள், கோட் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு, அங்கும் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இறந்து போன 70 பேர்களில் 4 பேர் மட்டுமே இந்துக்கள். மற்ற அனைவரும் இஸ்லாமியர்கள்.
'வேகன் டிராஜடி'யில் இறந்து போன 55 இஸ்லாமிய இளைஞர்களின் உடல்கள் மட்டுமே, இவ்விரு அடக்கஸ்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டதாகவும், மற்ற சிலருடைய உடல்கள் வெவ்வேறு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் திரூரைச் சேர்ந்த கோரங்கத் ஜும்மா பள்ளிவாசலைச் சேர்ந்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
உயிரிழந்த 4 இந்துக்களின் உடல்கள், திரூர் நகருக்கு வெளியே உள்ள முத்தூர் என்ற பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாக கேரள பத்திரிக்கையாளர் பிரமோத் தெரிவித்தார்.
அந்த நிகழ்வில் இறந்துபோன 4 இந்துக்கள் உட்பட 70 பேர் நினைவாகவும், திரூர் நகரசபை சார்பில், நகரின் மையப்பகுதியில் 'வேகன் டிராஜடி ஸ்மாரக டவுன்ஹால்' (நினைவு நகர்மன்றம்) என்ற பெயரில், ஓர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பொது நிகழ்வுகள், கூட்டங்கள், கண்காட்சிகள் நடத்த அனுமதிக்கப்படும் அந்த வளாகத்தில் 'வேகன் டிராஜடி' நிகழ்வின் அடையாளமாக, ஒரு சரக்கு ரயில் பெட்டி மாதிரி செய்யப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகிலேயே இறந்து போன 70 பேருடைய பெயர், ஊர், பணி விபரங்களுடன் கல்வெட்டும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் அனைத்தையும் பிபிசி தமிழ் நேரில் கண்டறிந்து, அங்கிருந்தவர்களை சந்தித்துப்பேசியது.
இந்த நகர்மன்றம் அமைக்கும் முன்பே, 1988ஆம் ஆண்டில், பிரபல இயக்குநர் ஐ.வி.சசி, '1921' என்ற மலையாளப் படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டி, சுரேஷ்கோபி, பார்வதி ஜெயராம், ஊர்வசி, சீமா உள்ளிட்ட பலரும் நடித்த அந்த படத்திலும் 'வேகன் டிராஜடி' காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்த திரைப்படம் 1921 ஆம் ஆண்டில் நடந்த மாப்ளா கலவர நிகழ்வுகளையும், அதன் பின்னணியையும் விரிவாக விளக்குகிறது.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



