தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதா மூலம் நீர்நிலைகளை தனியாருக்கு கொடுக்கிறதா அரசு? அரசியல் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு

தமிழ்நாடு நீர்நிலைகள்

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், கவியரசு வி
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதா மூலம் நீர்நிலைகளை அரசு தனியாருக்கு தாரைவார்ப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள விவகாரம் சமீபத்திய சர்ச்சையாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளான 21.04.2023 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் வகையிலான, `தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்ட மசோதாவை’ (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Bill, 2023) அறிமுகம் செய்தார். பின்னர் அது விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின்படி 100 ஹெக்டேருக்கு குறையாத நிலத்தில் நீர்நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருந்து அந்த இடத்தில் தொழிற்துறை திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு மற்றும் நீரோட்டம் குறைக்கப்படமாட்டாது என்கிற உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் அரசு மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமென அதைக் கருதினால் அத்திட்டத்தை சிறப்புத் திட்டமாக அறிவித்து ஒரு நிபுணர் குழுவை உருவாக்கும். நான்கு அரசு அதிகாரி, ஒரு அரசால் பரிந்துரைக்கப்படும் சுற்றுச்சூழல் நிபுணர் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் கொண்ட அக்குழு பொதுமக்கள் கருத்துக் கூட்டம் ஒன்றை நடத்தி, தங்களது உள்ளீடுகளுடன் கூடிய வரைவு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கும்.

மாவட்ட ஆட்சியர் இந்த வரைவை மாவட்ட அரசிதழிலும் இரண்டு செய்தித்தாள்களிலும் வெளியிடுவார். யாருக்கேனும் இதில் மாற்றுக்கருத்தோ பரிந்துரையோ இருந்தால் 30 நாட்களுக்குள் ஆட்சியருக்கு எழுதி தெரிவிக்கலாம்.

30 நாட்களுக்கு பிறகு ஆட்சியர் அனைத்து உள்ளீடுகளுடன் கூடிய வரைவை அரசுக்கு அனுப்பி வைப்பார். இந்த வரைவுத் திட்டத்தை அரசு மீண்டும் பரிசீலித்து அடுத்த 2 மாதங்களில் ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி இறுதிப்படுத்தப்பட்ட திட்டத்தை அரசிதழில் வெளியிடும்.

இந்த சட்டமசோதா `நிலம் மற்றும் நீர்நிலைகளை சிறப்பு திட்டங்கள் எனும் பெயரில் தனியார் பெரு நிறுவனங்களுக்கு சட்டபூர்வமாக தாரைவார்க்கும் திட்டம்' என குற்றம்சாட்டி பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடைசி நாளில் விவாதமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்த சட்டமசோதாவின் அபாயங்களைப் பற்றி சுற்றுச்சூழல் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் பிபிசியிடம் பேசினர்.

சுற்றுசூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவரும் வழக்கறிஞருமான வெற்றிசெல்வன் பிபிசி தமிழிடம் பேசினார்.

"இந்த சட்டத்தின் நோக்கமே பெரும் தனியார் திட்டங்களுக்கு நிலம் வழங்குவதில் உள்ள சிக்கல்களையும் சவால்களையும் நீக்கி அதை இன்னும் சுலபமாக்குவது தான். பல துறைகளால் வழங்கப்படும் பல்வேறு அனுமதிகளை ஒரே விண்ணப்பத்தின் கீழ் வழங்குவது தான் இச்சட்டத்தின் இலக்கு. மேலும் நீர்நிலைகளின் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பிற சட்டங்கள் மற்றும் ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் இந்த சட்ட மசோதா உருவாக்கியுள்ளது.

மசோதாவில் என்ன பிரச்னை?

தமிழ்நாடு அரசு நீர்நிலைகள்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இம்மசோதாவின்படி திட்டத்தை விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு மற்றும் நீரோட்டம் குறைக்கப்படமாட்டாது என்கிற உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அதை மேற்பார்வை செய்து உறுதி செய்வதற்கு அதிகாரம் கொண்ட அரசு குழு நியமிக்கப்பட வேண்டும் என்பது மசோதாவில் இல்லை.

அப்படி மேற்பார்வை செய்யும் அதிகாரம் இல்லை என்றால் ஒரு தனியார் நிறுவனம் நீர்நிலையை சுரண்டவில்லை என்பதை எப்படி உறுதி செய்ய முடியும்?

இன்று வரை பொதுபணி துறை பராமரித்து வரும் நீர்நிலைகளை தனியார் வசம் ஒப்படைப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

அடுத்ததாக, அரசு அமைக்கும் குழு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றை நடத்தும். ஆனால் இந்த கூட்டத்தில் மக்கள், அமையப்போகும் திட்டம் (தொழிற்சாலை) குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஒருங்கிணைக்கப்படும் நிலத்தை பற்றி மட்டுமே கருத்து தெரிவிக்க முடியும்.

திட்டத்தின் விண்ணப்பத்தை நிபுணர் குழு நினைத்தால் நிராகரிக்கலாம் என்ற வாய்ப்பே இல்லை. அரசு 'ஒப்புதல்' அல்லது 'நிபந்தனைகளுடன் ஒப்புதல்' வழங்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமிருக்கும் என்றால் திட்டத்தை நிராகரிக்கலாம் என்கிற விதிமுறையே இல்லை.

இந்த நடைமுறை முழுக்க முழுக்க திட்டங்களுக்கு சாதகமானதாகவும் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. இந்த மொத்த செயல்முறையும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைக்கு (Environment Impact Assessment notification) எதிராக உள்ளது.

திட்டத்தை புறக்கணிக்க மக்கள் வாக்களிக்கும் வாய்ப்போ, நிபுணர் குழுவுக்கு திட்டத்தை தள்ளுபடி செய்யும் வாய்ப்போ அளிக்கப்படவில்லை. இது ஜனநாயக முறைக்கே எதிரானது," என்று வெற்றிச்செல்வன் கூறினார்.

மசோதாவை திரும்பப் பெற கோரிக்கை

தமிழ்நாடு அரசு நீர்நிலைகள்

பட மூலாதாரம், Google Maps

மேலும், "இம்மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முறையே ஜனநாயகமற்றது. உறுப்பினர்களுக்கு இதன் வரைவை முன்னரே அளிக்காமல், விவாதிக்க இடமில்லாமல் வெறும் குரல் வாக்கெடுப்பின் மூலம் இதை நிறைவேற்றியது முறையல்ல. இதை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்” என்கிறார் வெற்றிசெல்வன்.

இச்சட்ட மசோதாவிற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உறுப்பினர் சண்முகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்த சட்டத்தினால் பயனடையப்போவது சிறு குறு முதலாளிகள் இல்லை. 100 ஹெக்டேர் என்றாலே அது நிச்சயம் கார்ப்ரேட் முதலாளிகளுக்காக தான் இருக்கும். இம்மசோதா நில உரிமையாளர்களுக்கு இருக்கும் உரிமைகளை பறிப்பதுடன், சுற்றுசூழலுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எந்த வகையிலும் அவசியமில்லாத, அதே நேரம் மிகவும் அபாயமான இந்த சட்டத்தை அரசு உடனே திரும்ப பெறக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்” என்று கூறினார்.

செங்கல்பட்டு நீர்நிலைகளை காட்டும் கூகுள் வரைபடம்

பட மூலாதாரம், Google Maps

படக்குறிப்பு, செங்கல்பட்டு நீர்நிலைகளை காட்டும் கூகுள் வரைபடம்

இம்மசோதாவை எதிர்க்கும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், “இந்த சட்டம் நீரையும் நிலத்தையும் தனியார்மயம் ஆக்குவதற்கு மட்டுமே வழி செய்கிறது. 12 மணி நேர வேலை மசோதாவால் ஏற்பட்ட அமளி தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் இப்படியொரு சட்டத்தை முறையற்று நிறைவேற்றி இருக்கிறார்கள். இது விவாதமே எழக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சதி.

இம்மசோதா சட்ட வடிவம் பெற்றால் பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்கள் மக்கள் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தப்படும். விமான நிலைய திட்டத்தை எதிர்த்து பரந்தூர் மக்கள் கடந்த ஓராண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த விமான நிலைய திட்டத்தில் முக்கிய தடையாக இருப்பது அங்குள்ள ஏரி தான். இந்த சட்டத்தை கொண்டு அந்த தடையை உடைத்தெறிய அரசு நினைக்கிறது. காவல்துறையை கொண்டு ஓராண்டு காலமாக அவர்களை ஒடுக்க முயற்சித்து கொண்டிருப்பதை போல் அரசின் மற்றுமொரு முயற்சி தான் இது. நாங்கள் இதை முழுமையாக எதிர்க்கிறோம்,” என்று கூறினார்.

கோவை தெற்கு

பட மூலாதாரம், Google Maps

படக்குறிப்பு, கோவை தெற்கு பகுதி நீர்நிலைகளை காட்டும் கூகுள் வரைவபடம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த மசோதாவை எதிர்த்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நீர்நிலைகள் மீது அக்கறை இன்றி, அவசர அவசரமாக இயற்றப்பட்டிருக்கும் இச்சட்டம் அடிப்படையிலேயே முழுமையற்று அமைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்காக, சாமானிய மக்களைப் பாதிக்கும் இச்சட்டத்தினை நாம் தமிழர் கட்சி முற்றுமுழுதாக எதிர்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து பேசும்போது, “சாதாரண மக்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசை கட்டினால் கூட சட்டத்தின் பெயரால் அதை இடிக்கும் அரசு, நீர் நிலைகளை தொழில் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க சட்டம் இயற்றுவது எந்த வகையில் நியாயம்? ஏழைகளுக்கு ஒரு சட்டம், பணக்கார நிறுவனங்களுக்கு ஒரு சட்டமா? இதை பயன்படுத்தி இனி நிறுவனங்கள் நீர்நிலைகளை சுரண்டுவதற்கோ அல்லது கழிவுகளை கொட்டுவதற்கோ பயன்படுத்திக் கொள்வார்கள்” என்று கூறினார். “இது மக்களுக்கான ஆட்சியா? தனியார் நிறுவனங்களுக்கான ஆட்சியா?” என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: