ரயில் பார்சலில் பெண் உடல்: காதலன் உண்மை குற்றவாளியா? பங்களா விருந்தில் என்ன நடந்தது?

வாங்கப்படாத பார்சல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாங்கப்படாத அந்த பார்சலை, ரயில் நிலையத்தின் ஒரு அறையில் ரயில்வே ஊழியர்கள் போட்டு வைத்திருந்தார்கள்.
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

இந்தச் சம்பவம் 90 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் உள்ள ரயில் நிலையத்திற்கு ஓர் இளம் பெண்ணின் சடலம் பார்சலில் வந்தது. அந்தப் பெண்ணின் காதலன் கைதுசெய்யப்பட்டார்.

ஆனால், அவரை உண்மையில் கொலை செய்தது யார்? இந்தக் கேள்வி 90 ஆண்டுகளாக மர்மம் விலகாமல் நீடிப்பது ஏன்?

கருங்குழி ஒரு சிறிய டவுன். இப்போதே அப்படித்தான் இருக்கிறது என்றால், 90 ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் சிறிய குடியிருப்புப் பகுதி.

அது 1934ஆம் ஆண்டு. ஜனவரி 13ஆம் தேதி. முந்தைய நாள் இரவு 10 மணியளவில் எழும்பூரிலிருந்து புறப்பட்ட பார்சல் ரயில் ஒன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் இருளைக் கிழித்துக்கொண்டு கருங்குழி ரயில் நிலையத்திற்குள் வந்து நின்றது.

மொத்தம் ஆறு பார்சல்களை இறக்கி வைத்துவிட்டு அந்த ரயில் புறப்பட்டுவிட்டது. அடுத்த நாள் காலையில், ஐந்து பார்சல்களை உரியவர்கள் வந்து வாங்கிச் சென்றுவிட, ஒரு பார்சலை மட்டும் வாங்குவதற்கு ஆள் யாரும் வரவில்லை. வாங்கப்படாத அந்த பார்சலை, ரயில் நிலையத்தின் அறை ஒன்றில் போட்டு வைத்திருந்தார்கள். அன்று இரவு அந்த பார்சலில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது.

ஏதோ விபரீதம் இருப்பது புரிந்து, அதிகாரிகளுக்குத் தகவல் பறந்தது. ஜனவரி 14ஆம் தேதி காலை ஐந்தரை மணியளவில் மதுராந்தகம் சார்பு நீதிபதி, செங்கல்பட்டு ரயில்வே காவல்துறை துணை ஆய்வாளர், கருங்குழி ரயில் நிலையத்தின் துணை நிலைய அதிகாரி டி.எஸ். நாராயணசாமி ஐயர் ஆகியோர் வந்துவிட்டனர்.

பார்சலில் இருந்த பெண்ணின் சடலம் யாருடையது?

மூக்கைப் பொத்திக்கொண்டு பார்சல் பிரிக்கப்பட்டது. உள்ளே இருந்தது ஒரு பெண்ணின் சடலம். ஈச்சமரப் பாயில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.

அந்தக் காலகட்டத்தில், ஒரு பார்சலை அனுப்ப ஒரு பயணிகள் டிக்கெட்டையும் வாங்க வேண்டும். அந்தப் பயணிகள் டிக்கெட்டின் எண் பார்சலுக்கான படிவத்தில் குறிக்கப்படும். அதன்படி, இந்த பார்சலுக்கான பயணிகள் டிக்கெட் எண் 'மூன்றாம் வகுப்பு - 4901'. ஆனால், அந்த எண்ணுடன் யாருமே ரயிலில் பயணம் செய்யவில்லை.

அப்படியானால், சடலத்தை அனுப்புவதற்காக மட்டுமே, பயணிகள் டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்கள் என்பது புரிந்தது. பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது.

விரைவிலேயே அந்தப் பெண் யார் என்று அடையாளம் காணப்பட்டார். அவர் பெயர் சீதாம்மாள்.

திருமண உறவை தாண்டிய சீதாம்மாளின் காதல்

சீதாவுக்கு செங்கல்பட்டுதான் பூர்வீகம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். அவளை ஜார்ஜ் டவுனில் பைராகி மடத்துக்கு அருகில் ஒரு கோவில் மடப்பள்ளியில் வேலை பார்த்து வந்த பார்த்தசாரதிக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள்.

போலீஸ் ராகவாச்சாரி சதுக்கத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வீடு. சீதாம்மாளுக்கு அந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை. ஆனால், வேறு வழியில்லை.

சீதாம்மாள் இருந்த வீட்டின் உரிமையாளர் சாரி, ஒரு வழக்கறிஞர். ஓய்வு நேரத்தில், சாரியின் வீட்டிற்கு வந்து, அவரது மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பாள் சீதா. அந்தத் தருணத்தில்தான் விதி ராமானுஜம் வடிவில் வந்தது.

சீதாம்மாள்ளின் காதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1933, ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று சீதா, ராமானுஜம் இருவரும் வீட்டைவிட்டு ஓடிப் போனார்கள்.

ராமானுஜம் ஒரு கிராம முன்சீப். நிலம் தொடர்பாக சாரியை பார்க்க அடிக்கடி வந்து போவார். ராமானுஜத்திற்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகியிருந்தது. ஆனாலும் அந்த வாழ்க்கையில் பெரிய திருப்தியில்லை. இப்படியான சூழலில், ராமானுஜத்தின் கண்ணில் பட்டாள் சீதா.

அவரைப் பார்த்த பிறகு, வக்கீலை பார்க்க அடிக்கடி வர ஆரம்பித்தார் ராமானுஜம். பார்த்தசாரதிக்கு விஷயம் தெரிந்து கொதித்தாலும், சீதா அதைக் கண்டுகொள்ளவில்லை.

சீதா, ராமானுஜம் இருவரும் 1933, ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று, வீட்டைவிட்டு ஓடிப் போனார்கள். ஓடிப்போகும்போது, சீதாம்மாள் தன்னுடன் சில வெள்ளி பாத்திரங்களையும் நகைகளையம் எடுத்துச் சென்றார். பிறகு இருவரும் ஜார்ஜ் டவுனில் தனியாக ஒரு வீட்டை எடுத்துத் தங்கினார்கள்.

சீதாம்மாள் கொலையில் ராமானுஜம் ஏன் கைது செய்யப்பட்டார்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ராமானுஜம் வசதியானவர். அதனால், பணக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்களின் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர்களை சீதாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால், இருவரும் ஒரே வீட்டில் நீண்ட நாள் வசிப்பதில்லை.

அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பார்த்தசாரதி அந்த வீட்டைத் தேடி வந்துவிடக்கூடாது என்பது. இரண்டாவது, இவர்கள் இருவரும் மாலையில் வெளியில் போய்விட்டு இரவுக்கு மேல் வீடு திரும்புவது அக்கம்பக்கத்தினரின் கவனத்தைக் கவர்ந்தது. பல நேரங்களில் வீட்டின் உரிமையாளரே வீட்டைக் காலி செய்யச் சொல்லிவிடுவார்.

இவர்கள் கடைசியாக குடியிருந்தது நம்பர் 24, பெத்த நாயக்கன் தெரு. அங்கிருந்துதான் சீதாம்மாள் காணாமல் போனாள். அக்கம்பக்கம் விசாரித்ததில், ஜனவரி 11ஆம் தேதிக்குப் பிறகு அவளை யாரும் உயிரோடு பார்க்கவில்லை.

பால்காரனை விசாரித்தபோது, அவர் ஒரு தகவலைச் சொன்னார். அதாவது தினமும் பால் வாங்க சீதாம்மாள்தான் வருவாள். ஆனால், ஜனவரி 12ஆம் தேதி ராமானுஜம் வந்து பாலை வாங்கிச் சென்றதாகச் சொன்னார்.

விரைவிலேயே ராமானுஜம் கைது செய்யப்பட்டார். வழக்கமாக குடுமி வைத்திருக்கும் ராமானுஜம், கைது செய்யப்பட்டபோது கிராப் வெட்டியிருந்தார். ராமானுஜத்தை காவலில் எடுத்தது காவல்துறை.

காவல்துறையைப் பொறுத்தவரை நடந்தது இதுதான்.

"சீதாம்மாள் ஜனவரி 11ஆம் தேதி இரவில் கொல்லப்பட்டார். ஜனவரி 12ஆம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சீதாம்மாளின் உடலை எடுத்துச் சென்ற ராமானுஜம் முனுசாமி என்ற போர்ட்டர் மூலம் உடலை ரயிலில் ஏற்றினார்.

உடலைச் சுற்றுவதற்காக ஈச்சம் பாயை ஷேக் நானு சாஹிப் கடையில் காசிம் என்பவரிடம் வாங்கியதாகக் கூறினார். பாயை ராமானுஜத்திடம்தான் விற்றதாக காசிமும் ஒப்புக்கொண்டார். அந்தப் பாயை தாயம்மாள் என்பவர் மூலம் வீட்டிற்குக் கொண்டு வந்ததாகச் சொன்னார். தாயம்மாளும் அதை ஒப்புக்கொண்டார்."

பார்சலில் வந்த சடலம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வழக்கு விசாரணையின் முடிவில், 9 ஜூரிகளில் 6 பேர் ராமானுஜம்தான் கொலையாளி எனக் கூறினர். (மாதிரி படம்)

பிறகு வழக்கின் விசாரணை துவங்கியது. ஆனால், ராமானுஜத்தின் நடவடிக்கைகள் எல்லாமே முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. போர்ட்டர், காசிம், தாயம்மாள் போன்றவர்களைப் பற்றிய விவரங்களை தானே முன்வந்து தந்த ராமானுஜம், கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டார். ஒரு கட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதிக்குப் பிறகு சீதாம்மாளை தான் பார்க்கவே இல்லை என்றார்.

இந்த வழக்கை நீதிபதி சர் ஓவன் பீஸ்லி விசாரித்தார். இந்த வழக்கு தொடர்பான செய்திகள் தினமும் செய்தித்தாள்களில் வெளியாகின. சென்னை நகரம் முழுவதும் இந்த வழக்கு பரபரப்பாகப் பேசப்பட்டது.

வழக்கு விசாரணையின் முடிவில், 9 ஜூரிகளில் 6 பேர் ராமானுஜம்தான் கொலையாளி எனக் கூறினர். 1934 ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் ராமானுஜன். அதிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

உண்மையில் ராமானுஜம்தான் கொலை செய்தாரா?

சீதாம்மாள்ளின் கொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உண்மையில் ராமானுஜம்தான் கொலை செய்தாரா என்ற சந்தேகம் இருந்தது. (மாதிரி படம்)

ஆனால், சென்னை நகரில் செல்வாக்குமிக்க சிலர் ராமானுஜத்தை வெளியில் கொண்டுவரப் போராடினர். வழக்கு லண்டனில் உள்ள ப்ரைவி கவுன்சிலுக்கு சென்றது. அங்கும் தண்டனை உறுதியானது. முடிவில், வைசிராய் வில்லிங்டனுக்கு கருணை மனு தாக்கல் செய்தார் ராமானுஜம். வைசிராய் இவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். சில ஆண்டுகளில் ராமானுஜம் சிறையிலிருந்து வெளியில் வந்தார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதுவொரு சாதாரண கொலை வழக்கு போலத் தோன்றும். ஆனால், இந்த வழக்கைச் சுற்றி எழுப்பப்பட்ட கேள்விகள்தான் இதை ஓர் அசாதாரண வழக்காக மாற்றின.

அந்தக் காலகட்டத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்து கவனித்த பலர், இந்தக் கொலையை ராமானுஜம்தான் செய்தார் என்பதை நம்பவில்லை. அவர்களுடைய கருத்துப்படி, சீதாம்மாள் கொல்லப்படவேயில்லை.

அவர்களது கருத்து இப்படியாக இருந்தது. "அதாவது ராமானுஜம் மூலமாக சமூகத்தின் உயர் மட்டத்திலிருந்த பல பெரும்புள்ளிகளின் அறிமுகம் சீதாம்மாளுக்கு கிடைத்தது. அதன் பலன்களை இருவருமே அனுபவித்தனர். கருங்குழியில் இருந்த ஒரு பங்களாவில், பெரும் பிரமுகர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்தில், மாடியிலிருந்து கீழே விழுந்ததில் சீதாம்மாள் இறந்துபோனார்.

ஆனால், அது வெளியில் தெரிந்தால், அந்தப் பிரமுகர்களுக்கு அவமானமாகிவிடும் என்பதால், பழியை ஏற்க ராமானுஜம் ஒப்புக்கொண்டார். அதையடுத்து சடலத்தை சென்னைக்குக் கொண்டு சென்று, மீண்டும் கருங்குழிக்கே பார்சல் அனுப்பினர். சடலம் பார்சலாக வந்த இடத்திலேயே மரணம் நடந்திருக்கும் என யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்பதுதான் இதற்குக் காரணம்."

கொலையாளியே சாட்சியங்களை ஏன் அடையாளம் காட்ட வேண்டும்?

பார்சலில் வந்த சடலம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதும் ராமானுஜமே தனக்கு எதிரான சாட்சிகளை அடையாளம் காட்டினார். அது ஏன்?

அவர்கள் அப்படி நினைக்கவும் காரணம் சொல்லப்பட்டது. ஏனென்றால், விரும்பி தன்னோடு ஓடி வந்தவளைக் கொல்ல ராமானுஜத்திற்கு காரணமே இல்லை.

சீதாம்மாளிடம் இருந்த வெள்ளிப் பாத்திரங்களையும் நகைகளையும் விற்பதற்காக அவளை ராமானுஜம் கொலை செய்தார் என்பது ஏற்கும்படி இல்லை.

கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதும் ராமானுஜமே தனக்கு எதிரான சாட்சிகளை அடையாளம் காட்டினார்.

அவர் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?

அப்படியே கொலை செய்திருந்தாலும், தனி ஆளாக உடலை பாயில் சுற்றி, எழும்பூர் ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்வது இயலாத காரியம். மேலும், ராமானுஜத்திற்காக பிரபல கிரிமினல் வழக்கறிஞர் நரசிம்மாச்சாரி வாதாடினார்.

அவருக்குக் கொடுக்கும் அளவுக்கு ராமானுஜத்திடம் பணம் கிடையாது. அப்படியானால், ராமானுஜத்தின் பின்னணியில் இருந்தவர் யார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கடைசி வரை விடை கிடைக்கவே இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: