மஞ்சள் கொண்டுள்ள மருத்துவ குணங்கள் என்ன? அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

மஞ்சள் கிருமிநாசினி, வீக்கத்தைக் குறைக்கும் குணங்களைக் கொண்டுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரா பெல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கோழி குழம்பு, சூடானிய ஒட்டக பிரியாணி, மலேசிய லக்ஸா (சூப்) அல்லது வங்கதேசத்தின் மாசெர் ஜோல் (மீன் குழம்பு) இதில் எதைச் சமைத்தாலும், எல்லாவற்றிலும் பொதுவாக இடம்பெறும் ஒரு பொருள் மஞ்சள்.

ஆனால், உணவைச் சுவைமிக்கதாக மாற்றுவதைத் தாண்டி, உலகின் மிகப் பழமையான, மிகவும் விரும்பப்படும் இந்த மசாலாப் பொருள் நம் ஆரோக்கியத்தில் வியக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

"எங்கள் குடும்பம் பஞ்சாபி குடும்பம். மஞ்சள் சேர்க்காத உணவை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது" என்று தெற்காசிய புலம்பெயர் மக்கள் குறித்துத் தனித்துவமான ஆய்வுகளை மேற்கொள்ளும் உணவு ஆய்வாளரும் பாட்காஸ்டருமான ராகிணி காஷ்யப் 'ஃபுட் செயின்' (Food Chain) நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சமையல்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த மஞ்சளில் சுமார் 30 வகைகள் உள்ளன.

தெற்காசிய புலம்பெயர் மக்களுடன் சேர்ந்து பயணித்த மஞ்சள், கிழக்கே பாலி, பிஜி போன்ற பசிபிக் தீவுகள் முதல் மேற்கே கரீபியன் தீவுகள் வரை பரவி, உலகெங்கிலும் தனது தனி முத்திரையைப் பதித்துள்ளது.

'வலுவான செய்தி'

சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்களில்கூட மஞ்சள் குறித்த குறிப்புகள் இருப்பதாக ராகிணி காஷ்யப் கூறுகிறார். தெற்காசியாவில் இது எங்கு பார்த்தாலும் கிடைக்கக்கூடிய ஒன்று. இதற்கு கிருமிநாசினி (Antiseptic) மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் (Anti-inflammatory) குணங்கள் இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு வலுவான நம்பிக்கை உள்ளது.

"எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, என் நினைவுக்கு வருவது இதுதான். இது மிகுந்த நிம்மதியைத் தருகிறது. இதில் சிறிதளவு ஆறுதலும், சிறிதளவு மருந்தும், சிறிதளவு கடந்த கால நினைவுகளும் கலந்துள்ளன" என்று தற்போது துபையில் வசித்து வரும் ராகிணி காஷ்யப் விளக்குகிறார்.

இந்தியாவில் திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் 'ஹல்தி' (மஞ்சள் பூசும்) சடங்கிலும் இது ஒரு முக்கியப் பகுதியாகும். முகத்தை அழகாக்கிக் கொள்வதற்காக இந்தச் சடங்கின்போது மஞ்சள் பேஸ்ட் பூசப்படுகிறது.

இப்போது மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நுகர்வோர் இந்த நீண்டகால நம்பிக்கைகள் குறித்துத் தெரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதால், மஞ்சளின் விற்பனை மளமளவென அதிகரித்து வருகிறது.

இந்து சமூகத்தில், குழந்தைப்பேறு மற்றும் செல்வ செழிப்பின் அடையாளமாகத் திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்து சமூகத்தில், குழந்தைப்பேறு மற்றும் செல்வ செழிப்பின் அடையாளமாகத் திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் சார்ந்த ஆரோக்கியப் பொருட்களில் பொதுவாக 'குர்குமின்' (Curcumin) என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். மஞ்சளின் மருத்துவ குணங்களுக்கு இதுதான் முக்கியக் காரணம் என்று நம்பப்படுகிறது.

எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது வரை பல நன்மைகள் இருப்பதாகக் கூறி இந்த சப்ளிமென்ட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.

மஞ்சளைப் பயன்படுத்துவதால் தங்களுக்குக் கிடைத்த நேர்மறையான அனுபவங்களை மக்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதும் இதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்க ஒரு காரணம் என்கிறார் ராகிணி காஷ்யப்.

அவரது கூற்றுப்படி, "சுமார் நூறு கோடிக்கும் அதிகமான மக்களில், பெரும்பாலானோர் மஞ்சள் பல பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் என்று உறுதியாக நம்பினால்... அது உலகளவில் எதிரொலிக்கும் ஒரு வலுவான செய்தியாகும். அதனுடன் விளம்பரங்கள், சப்ளிமென்ட் நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் ஆதரவும் சேரும்போது, அந்தச் செய்தி மேலும் வீரியமிக்கதாக மாறுகிறது."

'ஆராய்ச்சி செய்வது எளிதல்ல'

இருப்பினும், இதன் நன்மைகள் குறித்துச் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் மினசோட்டாவை சேர்ந்த ரசாயனவியலாளர் டாக்டர் கேத்ரின் நெல்சன், குர்குமின் குறித்து வெளிவந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்தார்.

"இது அனைத்து நோய்களையும் குணப்படுத்தக் கூடியது என்ற கூற்றுகள் நிலவினாலும், இது பெரிய அளவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பது தெரிய வந்துள்ளதாக" அவர் குறிப்பிட்டார்.

சப்ளிமென்ட் வடிவில் மஞ்சளை உட்கொள்வதால் நன்மைகள் உண்டு என்பதற்குப் போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சப்ளிமென்ட் வடிவில் மஞ்சளை உட்கொள்வதால் நன்மைகள் உண்டு என்பதற்குப் போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மஞ்சளின் ரசாயனக் கலவையிலேயே இதற்கான மூலப் பிரச்னை இருக்கக் கூடும் என்றும், அதனால்தான் இதன் மீது ஆராய்ச்சி செய்வது எளிதல்ல என்றும் கேத்ரின் நெல்சன் கூறுகிறார்.

இது மிக விரைவாக எதிர்வினையாற்றக் கூடியது, பரிசோதனைகளில் குறுக்கிடும் ஒரு சேர்மமாகவும் செயல்படக்கூடியது. அதாவது, இது உண்மையில் எந்தப் பலனையும் தராவிட்டாலும், ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்துவது போலத் தோற்றமளிக்கலாம்.

இதை வாயால் உட்கொள்ளும்போது, இதில் மிகச் சிறிய பகுதி மட்டுமே ரத்த ஓட்டத்தில் கலப்பதாகவும், உடல் இதை முழுமையாக உறிஞ்சிக் கொள்வதில்லை என்றும் கேத்ரின் நெல்சன் தெரிவித்தார். இந்தக் குறையைச் சரிசெய்வதற்காகப் பலரும் இதை மிளகுடன் சேர்த்து எடுத்துக்கொள்கிறார்கள்.

"பயனுள்ள ஒரு மருந்தைத் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக இதைப் பயன்படுத்த வேண்டும் என்றால், இது உண்மையில் மிகவும் மோசமான ரசாயனக் கட்டமைப்புகளில் ஒன்றாகும்" என்று கேத்ரின் நெல்சன் கூறினார்.

'நாங்கள் ஏமாற்றமடைந்தோம்'

பல தசாப்தங்களாக மஞ்சள் மீது விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதற்கான முடிவுகள் பெரும்பாலும் முரணாகவே உள்ளன. ஆய்வுகளின் தரத்திலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மஞ்சளின் நன்மைகளை ஆதரிக்கும் பல ஆய்வுகள் மனிதர்கள் மீது நடத்தப்பட்டவை அல்ல என்று கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள லண்டன் ஹெல்சா சயின்சஸ் சென்டரில் சிறுநீரக நோய் நிபுணராகப் பணிபுரியும் பேராசிரியர் அமித் கார்க் கூறுகிறார்.

அவரும் அவரது சகாக்களும் இணைந்து இரண்டு மிகப்பெரிய ஆய்வுகளை நடத்தினர். இதுவரை நடந்த மிகப்பெரிய ஆய்வுகளில் இவையும் அடங்கும். பெருநாடி பெருமணி விரிவு (Aortic aneurysm) சிகிச்சை பெறும் நபர்களிடம் குர்குமின் சிறுநீரகக் காயத்தையும் வீக்கத்தையும் தடுக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்க முதல் ஆய்வு நடத்தப்பட்டது. 600 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில் குர்குமினால் எந்தவொரு பயனுள்ள தாக்கத்தையும் கண்டறிய முடியவில்லை.

சப்ளிமென்ட் வடிவில் மஞ்சளை உட்கொள்வதால் நன்மைகள் உண்டு என்பதற்குப் போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதன் பிறகு, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை இது மேம்படுத்துமா அல்லது நோயின் தாக்கத்தை அது தீவிரமடையாமல் தடுக்குமா என்பதைப் பார்ப்பதற்காக குர்குமினில் உள்ள ஒரு சிறிய நுண்ணிய அணுவைப் பரிசோதித்துப் பார்த்தனர். ஆனால், இதிலும் எந்தவொரு பலனும் இருந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.

"நாங்கள் ஏமாற்றமடைந்தோம். ஏனெனில், எந்தவொரு முன்முடிவும் இல்லாமல்தான் இந்தச் சோதனையைத் தொடங்கினோம். குர்குமின் வேலை செய்யாது என நிரூபிப்பது எங்கள் நோக்கமல்ல" என்று அவர் கூறினார்.

ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் இதை மருந்தாகப் பயன்படுத்தி வரும்போது, குறிப்பாக இந்தியாவில் உள்ள இந்த உண்மையை நாம் எவ்வாறு விளக்குவது?

இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சேர்மத்தை மட்டும் பிரித்து அதை மருந்தாக மாற்ற முயல்வதற்கும், அதே இயற்கைப் பொருளை முழுமையாக சமையலில் பயன்படுத்துவதற்கும் அல்லது தோலில் பூசுவதற்கும் இடையே தெளிவான வித்தியாசம் இருப்பதாக டாக்டர் கார்க் கூறினார்.

எனவே, அதிக விலை கொடுத்து சப்ளிமென்ட்களை வாங்குவது சரியானது என்று நிபுணர்கள் கருதுகின்றனரா?

அவற்றின் விலை உயர்வைத் தாண்டி, அவை வேலை செய்யும் என்பதற்குப் போதுமான ஆதாரங்களும் இல்லை என்று பேராசிரியர் கார்க் தெரிவித்தார். பிற மருத்துவப் பொருட்களுக்குப் பொருந்தக்கூடிய அதே அளவிலான கட்டுப்பாட்டு விதிமுறைகள் இயற்கையான ஆரோக்கிய பொருட்களுக்கு இருப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

"நாம் நிச்சயமாகத் திறந்த மனதுடன் இருக்கலாம். ஆனால், ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறும்போது, அதற்கு உயர்தரமான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்ற தரநிலைகளைக் கடைபிடிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இருப்பினும், இதை உணவின் ஒரு பகுதியாக உட்கொண்டு ரசிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று அவர் கூறுகிறார். "மஞ்சள் சேர்த்த உணவுகளை மக்கள் விரும்பி உட்கொண்டால், அதைத் தொடர்ந்து செய்யுமாறு நான் அவர்களை ஊக்குவிப்பேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.