திருமணங்களில் கேட்கப்படும் நவீன வரதட்சணைகள்: ஐஃபோன் முதல் ஆடி கார் வரை நீளும் பட்டியல்

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

28 வயது சுமிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர்.

திருமணத்திற்குப் பிறகு, அவரது கணவரும், உறவினர்களும் வேலைக்குப் போக வேண்டாம் என்று பரிந்துரை செய்ததன் பேரில், வேலையில் இருந்து விலகிக்கொண்டார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சுமிதாவின் கணவர் செல்வராஜ், அவர் வரதட்சணையாக வாங்கிக்கொண்ட 20 சவரன் நகையில் 15 சவரனை தனது தொழில் முதலீட்டிற்காகச் செலவிட்டுவிட்டதால், அவருக்கு ஏற்பட்ட பணத் தேவைக்காக சுமிதாவை கொடுமை செய்யத் தொடங்கினார்.

''கையில் குழந்தையுடன் என் பெற்றோர் வீட்டுக்கும், என் கணவர் வீட்டுக்கும் பல நாட்கள் கண்ணீருடன் நடந்திருக்கிறேன். நான் வேலைக்குச் செல்லக்கூடாது என்று திருமணத்திற்கு முன்பே சொல்லியிருந்தார்கள்.

ஆனால், எல்லா செலவுக்கும் கணவரை நாடவேண்டிய நிலை எவ்வளவு மோசமானது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வரதட்சணை போதவில்லை எனக் கணவர் அடிக்கத் தொடங்கினார்.

அப்போது நான் மீண்டும் வேலைக்குப் போக வேண்டும். வரதட்சணை பணத்தைத் தருவதற்காக சம்பாதிக்க வேண்டும்.

வயதான என் பெற்றோரிடம் நான் எப்படிக் கையேந்தி நிற்க முடியும்? '' எனக் கண்ணீருடன் பேசுகிறார் சுமிதா.

படித்த ஆண்களுக்கும் வரதட்சணை

1961ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வரதட்சணை அளிப்பது, பெறுவது சட்டவிரோதமானது என்றாலும் சுமிதா-செல்வராஜ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியைப் போல் இந்தியாவில் பல பட்டதாரி தம்பதிகளேகூட, தங்களது திருமணத்தின்போது, வரதட்சணையாகப் பணம் அல்லது பொருட்கள் அளிக்கப்படுவதைத் தவறாகக் கருதுவதில்லை.

சுமிதா கணவரின் கொடுமை தாளாமல் தற்போது அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நாடியுள்ளார். சுமிதாவிற்கு சட்ட உதவி வழங்கி வரும் அந்த சங்கத்தைச் சேர்ந்த மனோன்மணி பேசுகையில், ''சுமிதாவை போன்ற படித்த பெண்கள்கூட வரதட்சணையாகக் கொடுக்கப்படும் பொருட்கள் அல்லது பணம் தங்களது கௌரவத்தைக் காட்டுவதாக நம்புகிறார்கள்.

அதிலும் படித்த ஆண்கள் பலர் தங்களது திருமணத்திற்காகப் பெற்ற வரதட்சணையைப் பற்றித் தங்களது நண்பர்கள் மத்தியில் பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.

புது மாடல் பிராண்டட் ஏசி, ஐஃபோன் எனப் பலவிதமாக வரதட்சணை கேட்கும் பழக்கம் வந்துள்ளது,'' என்கிறார் மனோன்மணி.

வரதட்சணையாக ஆடி கார்

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக ஆண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வரதட்சணை கொடுமையின் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி வீவர், விர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கௌரவ் சிப்லுங்கர் ஆகியோர், 1930 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த 74,000க்கும் மேற்பட்ட திருமணங்களை ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வில், 90% திருமணங்களில் வரதட்சணை அளிக்கப்பட்டுள்ளது என்றும் 1950 மற்றும் 1999ஆம் ஆண்டுக்கு இடையில் மட்டும் இதுபோல் கொடுக்கப்பட்ட வரதட்சணைகளின் அளவு 0.25 டிரில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பூ சுந்தர், படித்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பெற்றோர்கள் வரதட்சணை கொடுப்பதை வாங்குவதைப் பெருமையாக நினைப்பதை நிறுத்தினால்தான் வரதட்சணை பழக்கத்தைத் தடுக்க முடியும் என்கிறார்.

"இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டுகள் வேண்டுமானால் 1990களின் இறுதியுடன் முடிவு பெற்றிருக்கலாம். ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள சமூகப் பிரச்னை இன்னும் தொடர்கிறது," என்கிறார் குஷ்பூ.

''வரதட்சணை கேட்பது மட்டுமல்ல, கொடுப்பதும் சட்டப்படி தவறு. ஆனால் வரதட்சணை கேட்பது எவ்வளவு மோசம் என்று எண்ணுகிறோமோ, நாமாக முன்வந்து வரதட்சணை கொடுப்பதும் மோசம் என்ற சிந்தனை வளர வேண்டும்.

பல குடும்பங்களில், விலை உயர்ந்த ஆடி கார், பிஎம்டபள்யூ கார் போன்றவற்றை வரதட்சணையாகக் கொடுப்பதைப் பெருமையாக நினைக்கிறாரக்ள். அது மட்டுமல்ல, வரதட்சணையாகக் கொடுக்கும் பொருட்களை உறவினர்கள் முன் வரிசையாக வைத்து அலங்காரமாகப் புகைப்படம்கூட எடுக்கிறார்கள்.

பொருட்களை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துகொள்ளும் ஓர் ஆண் எப்படித் தனது மகளை நடத்துவான் என்று மணமகளின் குடும்பத்தார் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் ஒரு மணமகன் கிடைப்பார் என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும்,'' என்கிறார் குஷ்பூ.

மேலும் பேசிய அவர், ''எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றி யோசிக்கும்போது, திருமண உறவில் அவர்களைச் சமமாக நடத்தும் மணமகனைத்தான் நான் தேர்வு செய்வேன்.

பொருட்களைக் கொடுத்து ஒரு நபரைத் தேர்வு செய்யமாட்டேன். என் மகள்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் நான் செய்து கொடுப்பேன்.

ஆனால் வரதட்சணை கொடுத்தால் நல்ல மணமகன் கிடைப்பார் என்ற சிந்தனையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வரதட்சணை வாங்க மாட்டேன், வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று பெற்றோர்கள் முடிவு செய்யவேண்டும்,'' என்கிறார் குஷ்பூ.

வரதட்சணை கொடுப்பது சட்டப்படி தவறு என்றாலும்கூட, அதை ஒரு சாதாரண விஷயமாகவே பாவித்து சமூகத்தில் தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும் அந்த மனநிலையில் மாற்றம் வேண்டும் என்றும் குஷ்பூ கூறினார்.

இந்நிலையில், அதுகுறித்த புரிதலை ஏற்படுத்த வரதட்சணை தொடர்பாக தனிப்பட்ட வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசுட்ப தரப்பில் நடத்தப்படுகின்றனவா என்று கேட்டபோது, ''கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் தொடர்பான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துகிறோம்.

அப்போது வரதட்சணை கொடுமை தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். தேசிய மற்றும் மாநில அளவிலான ஆணையத்தில் இதுகுறித்துப் புகார் அளிக்கலாம் என்றும் சொல்கிறோம்,'' என்கிறார் குஷ்பூ.

வரதட்சணையாகக் கொடுக்கப்படும் பொருட்கள் என்ன?

ஆய்வாளர்கள், ஜெஃப்ரி வீவர் மற்றும் கௌரவ் சிப்லுங்கர் ஆகியோர் செய்த ஆய்வில், 74,000க்கும் மேற்பட்ட திருமணங்களில் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட பொருட்கள் பற்றியும் குறிப்புகளை எழுதியுள்ளனர்.

பெரும்பாலான திருமணங்களில், தங்க நகையை வரதட்சணையாக அளிக்கும் பழக்கம் இருப்பதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

அடுத்ததாக, வீட்டு உபயோகப் பொருட்கள், பாத்திரங்கள், மரச்சாமான்கள், துணிகள், குளிர்சாதனப் பெட்டிகள் போன்றவற்றைக் கொடுப்பதாகக் கூறுகிறார்கள்.

ஒரு சில திருமணங்களில், மணமகள் குடும்பத்தாரிடம் இருந்து நிலம் மணமகன் குடும்பத்தாரிடம் கைமாறியுள்ளது. கால்நடை விலங்குகள், சைக்கிள், மோட்டார் வாகனம், டிவி, ரேடியோ, கார் உள்ளிட்டவை அந்தப் பட்டியலில் உள்ளன என்கிறார்கள்.

வரதட்சணை ஒழிப்பிற்காகச் சட்டம் இருந்தாலும், அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள அடிக்கடி முயன்று கொண்டிருந்தாலும், பெரும்பாலானவை பலனளிக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

இந்திய அளவில் வரதட்சணைக் கொடுமை காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கை கவலை கொள்ள வைக்கிறது.

இறந்த பெண்களின் எண்ணிக்கை நமக்குப் புள்ளி விவரங்களாகத் தெரிய வந்தாலும், வரதட்சணைப் பிரச்னை காரணமாக மோசமான தாக்குதலுக்கும், மனரீதியான தாக்குதலுக்கும் பெண்கள் ஆளாவது குறித்துப் பெரிதும் வெளியில் தெரிவதில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி குமாரி.

''கல்வி, சமூக மாற்றம் எனப் பல முன்னேற்றங்களை நாம் அடைந்திருந்தாலும், இந்திய அளவில் வரதட்சணை பெறும் பழக்கத்தில் மாற்றம் பெரிதளவில் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் விழிப்புணர்வு இருந்தபோதும், படித்த குடும்பங்களில் வரதட்சணை கொடுப்பதைத் தவறு என்று எண்ணுவதில்லை. இந்த மாற்றம் சட்டரீதியாக ஓரளவு சாத்தியம், ஆனால் இது ஒவ்வொரு பெற்றோர், மணமகன், மணமகள் ஆகியோரிடம் ஏற்பட வேண்டிய மாற்றம்,'' என்கிறார் குமாரி.

தேசிய குற்றப்பதிவு ஆவணத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக வரதட்சணை காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 7,000ஐ தொடுகிறது.

2019இல் 7,141 பெண்கள் வரதட்சணை காரணமாக இறந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 2021இல் 6,966ஆகவும், 2021இல் 6,753ஆகவும் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, 2019இல் 28 பெண்கள் வரதட்சணை காரணமாக இறந்துள்ளனர் என்றும், 2020இல் 40 பெண்களும், 2021இல் 27 பெண்களும் இறந்துள்ளனர் என்று தெரிய வருகிறது.

நீடிக்கும் பிற்போக்குத்தனம்

இந்தப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கோரமான நிலையை மாற்ற வேண்டுமெனில் சமூகத்தில் மாற்றம் தேவை என்கிறார் குமாரி.

''சமூக ஊடகங்களில் பலரும் திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். அதில் பலரும் வெளிப்படையாக வரதட்சணையை சீர் என்ற பெயரில் பதிவு செய்யும் படங்களைப் பாருங்கள்.

திருமணத்திற்கு வருபவர்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள உறவினர்கள் மத்தியில் அந்தப் படங்களைக் காட்டி, வரதட்சணையை நவீனமாகப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். கல்வியில் முன்னேறிய சமூகமாக இருந்தாலும், பிற்போக்குத்தனம் நம்மிடம் நீடிக்கிறது,'' என்கிறார் அவர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட புதிய புகார்கள் ஆணையத்தில் பதிவாவதாகக் கூறிய அவர், பெரும்பாலான துன்புறுத்தலுக்கு வரதட்சணை மூலகாரணமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

வரதட்சணை தடுப்புச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல்

ஒரு மணமகன் கல்வி மற்றும் வருமானத்தில் எந்த அளவு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளார் என்பதைக் பொருத்து வரதட்சணை அதிகரிக்கப்படுகிறது என வரதட்சணை தொடர்பான ஆய்வை நடத்திய ஜெஃப்ரி வீவர் மற்றும் கௌரவ் சிப்லுங்கர் தெரிவித்திருத்தனர்.

இந்தக் கூற்று, தற்காலத்திலும் நடைபெறுகிறது என்று உறுதி செய்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி.

கிராமம், நகரம் என எந்த வேறுபாடும் இன்றி இந்தப் பழக்கம் சமூகத்தின் எல்லா தரப்பட்ட மக்களிடம் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது என்கிறார்.

பெண்கள் மீதான வன்கொடுமை தொடர்பான வழக்குகளை 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கையாண்ட அனுபவத்தில் இருந்து பேசிய அவர், ''பல குடும்ப வன்முறை வழக்குகளில் அடிப்படையாக இருப்பது வரதட்சணைதான்,” என்கிறார்.

மேலும், “ஆண்களின் படிப்பு, அவர்களின் வேலைவாய்ப்பைப் பொருத்து, அவர்கள் கேட்கும் வரதட்சணை அமைவதைப் பல வழக்குகளில் பார்த்திருக்கிறேன். வரதட்சணை தடைச் சட்டம் 1961இல் கொண்டுவரப்பட்டது.

இருந்தாலும், விதிமீறல்கள் 60 ஆண்டுகளாகத் தொடர்கின்றன எனில், நம் சமூகத்தில் வரதட்சணை எப்படிப் புரையோடி இருக்கிறது என்று பாருங்கள். பல நேரங்களில், பெண்கள் படித்திருந்தாலும், வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தாலும், மணமகனின் கல்வி, வேலைவாய்ப்பை வைத்து அதிகமாக வரதட்சணை கேட்கும் நிகழ்வுகள் பல உள்ளன.

தற்போது நகை, வீட்டு உபயோகப் பொருட்களுடன் அந்தப் பட்டியல் முடிவதில்லை. விலை உயர்ந்த செல்போன், அடுக்குமாடிக் குடியிருப்பு வரை ஒரு சிலர் கேட்கிறார்கள். ஒரு சிலர் இதுபோன்றவற்றைத் தாமாகக் கொடுக்கிறார்கள்,'' என்கிறார் சாந்தகுமாரி.

மேலும், நவீனமாக மேட்ரிமோனியல் இணையதளங்களில், படிப்பு, வேலையை வைத்து, மணமகன் மற்றும் மணமகள் தேடும் நிலையைச் சுட்டிக்காட்டிய சாந்தகுமாரி, ''திருமணத்திற்குப் பின்னர் வெளிநாட்டுப் பயணம் வேண்டும் என்கிறார்கள், சினிமா படப்பிடிப்பு போன்ற புகைப்பட ஷூட் தேவை என்கிறார்கள்.

இதெல்லாம் பெண் வீட்டாரின் செலவில் சேர்ந்துவிடுகிறது. பல வழக்குகளில், திருமணத்திற்குப் பின்னர், வேலைக்குப் போகும் பெண்ணின் வருமானம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கப்படுகிறது.

ஆணின் வருமானம் சேர்த்து வைக்கப்படுகிறது. இந்த முகாந்திரத்தில், பெண்ணின் வருமானம் சிறிது சிறிதாகச் சுரண்டப்படுகிறது. இதுபோன்ற சிக்கல்கள் வரதட்சணையின் புதிய வடிவங்கள்,'' என்கிறார் அவர்.

வரதட்சணை தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய:

தேசிய மகளிர் ஆணையம் புகார் எண்: 7827-170-170

மின்னஞ்சல் முகவரி: complaintcell-ncw@nic.in

தமிழ்நாடு அளவில் இயங்கும் மகளிர் உதவி எண்: 1091

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: