You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் இந்தியர் ஓட்டிய டிரக்கில் மோதி 3 பேர் பலி
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி டிரக் ஒன்று சாலை விதிகளை மீறி யூ-டர்ன் செய்தபோது பின்னே வந்த மினிவேன் மோதி மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் டிரக்கை ஓட்டிவந்த இந்தியாவை சேர்ந்த ஹர்ஜிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹர்ஜிந்தர் சிங் கடந்த 2018-ம் ஆண்டு சட்டவிரோதமாக மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக ஃப்ளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வணிக டிரக் ஓட்டுநர்களுக்கான பணி விசா வழங்குவதை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகளவிலான வெளிநாட்டு ஓட்டுனர்கள் டிராக்டர்-டிரெய்லர் டிரக்குகளை அமெரிக்க சாலைகளில் ஓட்டுவது அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்க டிரக் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் கூறியுள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் ஹர்ஜிந்தர் சிங் வணிக நோக்கத்திலான ஓட்டுநர் உரிமம் வாங்கியதாக அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 19 மாகாணங்களில் ஒருவரின் குடியேற்ற நிலை எதுவாக இருந்தாலும் வணிகரீதியான ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. அதில் கலிபோர்னியாவும் ஒன்று என அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
டிரம்பின் ஆட்சி காலத்தில்தான் ஹர்ஜிந்தருக்கு பணி அனுமதி வழங்கப்பட்டதாக ஜனநாயக கட்சியை சேர்ந்த கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம்-யின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு