You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' - 8 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ஆந்திராவில் கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோன்தா புயல் வடக்கு, வட மேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் கடந்த ஆறு மணி நேரங்களில் நகர்ந்துள்ளது. ஆந்திராவில் நர்சாபூரிலிருந்து வடமேற்கு திசையில் 80 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து மேற்கில் 100 கி.மீ தொலைவிலும் புயல் நிலைக் கொண்டுள்ளது.
இது அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த ஆறு மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மோன்தா புயல் ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
எட்டு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் புதுவையின் ஏனாம் பகுதியிலும், தெற்கு ஒடிசாவிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும், ஆங்காங்கே அதி கனமழை பெய்யக்கூடும். அதே போன்று வடக்கு ஒடிசாவிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்துடன் காணப்படும் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரையோரம் காற்று மணிக்கு 75 முதல் 85 கி.மீ வேகத்திலும் இடையிடையே 95 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் இன்று முற்பகல் நேரத்தில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகமாக குறையும்.
தமிழக, புதுவை கரையோரங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இன்று மாலையில் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ ஆக குறையும்.
இதனால் இந்தப் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் ஆந்திர, தமிழக, புதுவை கரையோர பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமான சேவை பாதிப்பு
மோன்தா புயல் காரணமாக, விஜயவாடாவில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரிக்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் விமான சேவைக்கான வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு