காஸா போரை நிறுத்தும் ஒப்பந்தத்தின் பலவீனங்கள் என்ன? - டிரம்பின் முயற்சிக்கு நெதன்யாகு உடன்படுவாரா?

காஸா, இஸ்ரேல், டிரம்ப் காஸா திட்டம், இஸ்ரேல் - பாலத்தீன் போர் நிறுத்த திட்டம்

பட மூலாதாரம், JIM LO SCALZO/POOL/EPA/Shutterstock

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
    • எழுதியவர், ஜெர்மி போவன்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பேரழிவுக்குள்ளான அந்தப் பகுதியை மீண்டும் கட்டமைப்பதற்கும் முன்வைத்துள்ள ஒப்பந்த கட்டமைப்புக்கு பின்னால் ஒரு உந்து சக்தி (Momentum) உள்ளது.

இந்த உந்து சக்தியின் பெரும்பகுதி அதிபர் டிரம்ப் மூலமாகவே வருகிறது. மேலும், ஜோர்டான், எகிப்து, கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் துருக்கி உட்பட இத்திட்டத்தை ஆதரித்துள்ள முன்னணி அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடமிருந்தும் இந்த உத்வேகம் கிடைக்கிறது.

தான் தொடர்ந்து எதிர்த்து வரும் பாலத்தீன அரசை அமைப்பதற்கான பாதையைப் பற்றி இந்த திட்டம் குறிப்பிட்டாலும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், டொனால்ட் டிரம்ப் அருகில் நின்றுகொண்டு அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

இந்த வேகத்தைத் தக்கவைக்க, ஹமாஸுக்கு "ஆம் அல்லது இல்லை" என்று முடிவு செய்ய "மூன்று முதல் நான்கு நாட்கள்" மட்டுமே அவகாசம் இருப்பதாக டிரம்ப் கூறுகிறார்.

முடியாது என பதில் வந்தால் போர் தொடரும்.

இந்த ஒப்பந்தம், ஒரு வருடத்திற்கு முன்பு ஜோ பைடன் முன்வைத்த திட்டத்தைப் போலவே தெரிகிறது. அப்போதிருந்து பாலத்தீன பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர், காஸாவில் மேலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது, இப்போது பஞ்சமும் நிலவுகிறது. அதேசமயம், காஸாவில் உள்ள இஸ்ரேலியப் பணயக் கைதிகள் மேலும் பல மாதங்கள் வேதனையிலும் சிறைவாசத்திலும் இருக்க வேண்டியிருந்தது.

பைடனின் முயற்சி தோல்வியடையக் காரணம், நெதன்யாகு தனது அமைச்சரவையில் உள்ள தீவிர வலதுசாரிகளின் அழுத்தத்தின் காரணமாக புதிய கோரிக்கைகளை முன்வைத்து இலக்குகளை மாற்றியமைத்ததுதான் என்று இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இருப்பினும், இந்த கட்டமைப்புத் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க தருணம் ஆகும். முதல் முறையாக, போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுக்கிறார். அவரிடம் இல்லை என்று சொல்வது கடினம் என்கிற தலைவராக டிரம்ப் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.

உக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கி கடந்த பிப்ரவரியில் ஓவல் அலுவலகத்தில் பெற்றதைப் போன்ற கடுமையான விமர்சனத்தை யாரும் பெற விரும்ப மாட்டார்கள். ஆனால் தலைவர்கள் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் நிலைமை மாறலாம்.

காஸா, இஸ்ரேல், டிரம்ப் காஸா திட்டம், இஸ்ரேல் - பாலத்தீன் போர் நிறுத்த திட்டம்

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன் டி.சி.யிலிருந்து இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு முன்பு, இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை அவரது பார்வையிலிருந்து விளக்கும் ஒரு காணொளியை அவரது ஊழியர்கள் பதிவு செய்தனர்.

அதில் ஒரு அம்சம், இஸ்ரேலுக்கு அருகில் ஒரு சுதந்திரமான பாலத்தீனம் என்ற யோசனை ஆகும். இதுவே பிரிட்டன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரிப்பதன் மூலம் மீண்டும் கொண்டுவர முயன்ற இரு நாடு தீர்வு (Two-State Solution) ஆகும்.

டிரம்ப்பின் ஆவணமும் பாலத்தீன சுதந்திரம் என்ற யோசனைக்கு ஒரு உறுதியற்ற ஒப்புதலை அளிக்கிறது. ரமல்லாவில் இருந்து செயல்படும் மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலத்தீன அதிகார சபை சீர்திருத்தப்பட்ட பிறகு, "பாலத்தீன மக்களின் சுய நிர்ணயம் மற்றும் அரசுக்கான ஒரு நம்பகமான பாதைக்கான நிலைமைகள் இறுதியாக உருவாகலாம், இதை நாங்கள் பாலத்தீன மக்களின் அபிலாஷையாக அங்கீகரிக்கிறோம்" என்று அது கூறுகிறது.

வெள்ளை மாளிகையில் டிரம்ப்புக்கு முழு மனதுடன் ஆதரவளித்து, அவரிடம் ஆங்கிலத்தில், "காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உங்கள் திட்டத்தை நான் ஆதரிக்கிறேன், இது எங்கள் போர்க் குறிக்கோள்களை அடைகிறது" என்று கூறிய நெதன்யாகுவுக்கு ஏதோ ஒரு தூரத்து நாளில் ஒரு பாலத்தீன அரசு ஏற்படக்கூடும் என்ற எண்ணம்கூட ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு முன், தனது நாட்டு மக்களுக்கு தனது செய்தி சென்று சேரும் வகையில் ஹீப்ரு மொழியில் காணொளியில் பேசிய அவரிடம் பாலத்தீன அரசை அவர் ஒப்புக்கொண்டாரா என்று கேட்கப்பட்டது. அவரது பதில் திட்டவட்டமாக இருந்தது.

"இல்லை, நிச்சயமாக இல்லை. இது ஒப்பந்தத்தில் எழுதப்படவே இல்லை. ஆனால் நாங்கள் ஒரு விஷயத்தைச் சொன்னோம். ஒரு பாலத்தீன அரசை நாங்கள் பலம் கொண்ட மட்டும் எதிர்ப்போம் என்பதுதான் அது." இதற்கு டிரம்ப் ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

காஸா, இஸ்ரேல், டிரம்ப் காஸா திட்டம், இஸ்ரேல் - பாலத்தீன் போர் நிறுத்த திட்டம்

பட மூலாதாரம், Getty Images

உத்வேகமே இத்திட்டத்தின் பலம். விவரங்கள் இல்லாதது இதன் பலவீனம். இது டிரம்ப் ராஜதந்திரத்தின் ஒரு குணாதிசயம். டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஏற்றுக்கொண்ட இந்த ஆவணம், இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் பின்வாங்குவதற்கான கட்டங்களை மட்டுமே ஒரு சுமாரான திட்டம் கோடிட்டு காட்டுகிறது.

ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் உருவாக்கப்பட்ட ராஜதந்திர ஒப்பந்தங்கள் ஒன்றாக இருக்குமா அல்லது சிதைந்துவிடுமா என்பதைத் தீர்மானிக்கும் அடிப்படை விவரங்கள் எதுவும் இதில் இல்லை.

இது செயல்பட வேண்டுமானால், தீவிரமான பேச்சுவார்த்தை அவசியம். அந்த நடைமுறையின்போது, அது தோல்வியடைய பல வாய்ப்புகள் உள்ளன.

இஸ்ரேலில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தை ஆதரித்துள்ளன. ஆனால், ஆண்டின் தொடக்கத்தில் விவாதிக்கப்பட்ட "டிரம்ப் ரிவியரா" திட்டத்தை வரவேற்ற நெதன்யாகுவின் கூட்டணியில் உள்ள தீவிர தேசியவாதிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்தத் "டிரம்ப் ரிவியரா" திட்டம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் கடற்கரை உடையணிந்து, பளபளக்கும் கண்ணாடிக் கோபுரங்களைக் கொண்ட புதிய காஸாவின் பின்னணியில் காக்டெய்ல் அருந்துவது போன்ற ஒரு வினோதமான காணொளியுடன் தொடங்கப்பட்டது.

அந்த 'ரிவியரா' திட்டத்தில், காஸாவில் உள்ள 20 லட்சத்திற்கும் அதிகமான பாலத்தீனர்கள் அனைவரையும் வெளியேற்றுவது உள்ளடங்கி இருந்ததால், இஸ்ரேலியத் தீவிர வலதுசாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். யூத சிந்தனையாளர்கள் அந்த நிலத்தை இணைத்து, பாலத்தீனர்களுக்குப் பதிலாக யூதக் குடியேறிகளைக் கொண்டு வர விரும்புகின்றனர்.

அந்த ரிவியரா திட்டத்தில், காஸாவில் உள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலத்தீனர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என்று இருந்தது. இஸ்ரேலிய தீவிர வலதுசாரிகள் அந்த நிலத்தை இணைத்து, பாலத்தீனர்களுக்குப் பதிலாக யூதக் குடியேறிகள் இருக்க வேண்டும் என்று விரும்பினர்.

ஆனால் புதிய திட்டம், பாலத்தீனர்கள் யாரும் கட்டாயமாக வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று கூறுகிறது. பெஞ்சமின் நெதன்யாகுவின் முக்கியத் தீவிர வலதுசாரி கூட்டாளியான இடமார் பென் கிவிர், இந்த முன்மொழிவை "ஆபத்தானது" மற்றும் "ஓட்டைகள் நிறைந்தது" என்று கூறியதாகத் தெரிகிறது.

ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், நெதன்யாகு தனது கூட்டணியைப் பதவியில் வைத்திருக்கும் வலதுசாரிகளை சமாதானப்படுத்த வழிகளைக் கண்டறிய வேண்டும். ஹமாஸ் மீது பழியைப் போடும் வகையில் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்க (Sabotage) ஏராளமான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கும். டிரம்ப்பின் கட்டமைப்பு ஒப்பந்தம் இஸ்ரேல் விரும்பாத நகர்வுகளை வீட்டோ செய்யும் பல வாய்ப்புகளை வழங்குகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த ஒரு ஆழமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது சாத்தியமற்றதாக இருக்கலாம். நீண்ட கால நோக்கில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள பிரிட்டன் மற்றும் பல நாடுகள், பாலத்தீன சுதந்திரத்திற்கு வழிவகுக்காத எந்தவொரு தீர்வும் அமைதியைக் கொண்டுவராது என்று நம்புகின்றன.

அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் ஆதரவு அறிக்கையை வெளியிட்டபோது, இது இஸ்ரேல் முழுவதுமாகப் பின்வாங்குவதற்கும், காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் வழிவகுக்கும் என்றும், "சர்வதேச சட்டத்தின்படி காஸா மேற்குக் கரையுடன் முழுமையாக ஒருங்கிணைந்த பாலத்தீன அரசை உள்ளடக்கிய இரண்டு நாடு தீர்வின் அடிப்படையில் ஒரு நியாயமான அமைதிக்கான பாதை" உருவாகும் என்றும் நம்புவதாகக் கூறினர். இது, இஸ்ரேல் பாலத்தீன நிலங்களை ஆக்கிரமித்தது சட்டவிரோதமானது என்கிற சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக இருக்கலாம்.

ஹமாஸ் மீதான இஸ்ரேலின் கிடைப்பதற்கரிய வெற்றியை இந்த ஒப்பந்தம் நெருங்கச் செய்யும் என்று நெதன்யாகு நம்புகிறார். ஜோர்டான் ஆற்றுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலத்தின் மீது பாலத்தீனர்களுக்கு எந்த உரிமையும் இருப்பதை அவர் மறுக்கிறார்.

ஒரு திட்டம், ஆனால் அதன் அர்த்தம் குறித்து இரண்டு முற்றிலும் வேறுபட்ட விளக்கங்கள். இந்த விளக்கம் இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த கட்டமைப்பு தெளிவற்றதாக உள்ளது. இது நம்பிக்கையளிக்கும் ஒரு தொடக்கம் அல்ல.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.