டாப்5 செய்திகள்: அமெரிக்காவில் இருந்து வெளியேறிய 'ரஞ்சனி ஸ்ரீநிவாசன்' எங்கே? என்ன நெருக்கடி?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இன்றைய (16/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

தனது பிஎச்டி படிப்பை முடிக்கும் வகையில் அமெரிக்காவில் F1 விசாவை மீண்டும் பெற இந்திய அதிகாரிகள் உதவ வேண்டும் என இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீநிவாசன் கேட்டுக் கொண்டதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் இந்திய மாணவி ரஞ்சனா ஸ்ரீநிவாசன் பாலத்தீன ஆதரவு நடவடிக்கைகளுக்காக நடவடிக்கைக்கு ஆளானார். பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அவரது வசிப்பிடம், அமெரிக்க குடியேற்றத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது. இவர் அமெரிக்காவிலிருந்து தாமாக வெளியேறிய நிலையில், ஆன்லைனில் தங்களுக்கு பேட்டி அளித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் "கனடாவில் பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் தற்போது தஞ்சமடைந்திருக்கும் ரஞ்சனா ஸ்ரீனிவாசன், இந்தியா திரும்பி வர விரும்புகிறார் " என குறிப்பிடப்பட்டுள்ளது. ரஞ்சனா தமது பேட்டியில்,"எதிர் நடவடிக்கைகள் குறித்து நான் மிகுந்த அச்சத்துடன் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அவரது பிஎச்டி ஆராய்ச்சி முடிவடைய 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அவரது பதிவு பல்கலைக் கழகத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது என்பது செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

"கொலம்பியா பல்கலைக் கழக மாணவர் மொகமது கலீல் கைது செய்யப்பட்டு , காணாமல் போன போது நான் மிகவும் அச்சமடைந்தேன், என்னுடைய வழக்கறிஞர்கள் இது எதிர்பாராததாகவும், கணிக்க முடியாததாகவும் உள்ளது என்று கூறினர். F1 விசா தொடர்பான பல அம்சங்களில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு முழு அதிகாரமும் உள்ளது. என் மீது என்ன குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர் என்று தெரியாது. ஆனால் அவர்கள் ஏதோ ஒன்றை செய்ய இருப்பது போல தோன்றியது" என்று தமது பேட்டியில் ரஞ்சனா கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் உதவியாளர் பணி ரத்து செய்யப்பட்டு விசாவும் ரத்து செய்யப்பட்டது. அத்தோடு நாட்டிலிருந்து வெளியேற 15 நாட்கள் கெடு விதிக்கப்பட்டது என தி இந்து குறிப்பிட்டுள்ளது.

"கடந்த ஒரு வாரமாக நான் தூங்கவில்லை. அங்கேயே இருந்து கொலம்பியா பல்கலைக் கழக நிர்வாகத்துடன் பேசுவது வசதியாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது சாத்தியமில்லை" என்று கூறியிருக்கிறார் ரஞ்சனா.

"நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் Fulbright ஸ்காலர்ஷிப் பெற்றிருக்கிறேன். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றிருக்கிறேன், தற்போது கொலம்பியாவில் படிக்கிறேன். என் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை.இது F1 விசா கொண்ட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழலை இது காட்டுகிறது. என்னுடைய பிஎச்டி படிப்பை முடிக்கும் வகையில் F1 விசா பெற இந்திய அரசு உதவ வேண்டும்" என்று ரஞ்சனா ஸ்ரீநிவாசன் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணை முட்டித் தூக்கி வீசிய மாடு

சென்னை கொரட்டூரில் கைக்குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை மாடு முட்டித் தூக்கி வீசியதில் அவர் காயமடைந்ததாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் "கொரட்டூர் பாலாஜி நகரைச்சேர்ந்த சக்தி என்பவரின் மனைவியான ஜெயலட்சுமி, நேற்று முன்தினம் 3 வயது மகளுடன் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே தெருவில் கன்றுக்குட்டியுடன் சாலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று அவரது குழந்தையை முட்ட முயன்றது.

சுதாரித்துக் கொண்ட ஜெயலட்சுமி குழந்தையை தனக்குப் பின்னால் மறைத்துக் கொண்டார். இதனால் ஜெயலட்சுமியை மாடு கொம்பால் முட்டித் தூக்கி வீசியது. அங்குள்ள வீட்டின் சுவர் ஓரத்தில் ஜெயலட்சுமி சிக்கிக் கொண்ட நிலையில் அவரை மாடு சரமாரியாக முட்டியது . அலறல் சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோர் மாட்டிடம் சிக்கிக் கொண்ட ஜெயலட்சுமி மற்றும் அவரது குழந்தையை காப்பாற்ற முயன்றனர்.

கைகளில் கிடைத்த கட்டை , கம்பு மற்றும் கற்களால் அடித்து பசுமாட்டை அங்கிருந்து பொதுமக்கள் விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கொரட்டூர் போலீசார் ஜெயலட்சுமியிடம் புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்ததோடு பசு மாட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மீண்டும் அதே சாலையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை, அம்பத்தூர் கால்நடை மருத்துவ அலுவலர் தலைமையிலான குழு பிடித்து மாநகராட்சி வண்டியில் ஏற்றி, ஓட்டேரியில் உள்ள பசு பாதுகாப்புக் கூடத்திற்கு கொண்டு சென்றனர். மாட்டின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவரிடமே மாடு ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் நிதியில் ரிசார்ட் கட்டும் அரசாணை வாபஸ் - வழக்கு முடித்துவைப்பு

மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து ரூ.14 கோடி செலவில் ஊட்டியில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.100 கோடி வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து ரூ.14 கோடி செலவில் ஊட்டியில் காந்தல் வட்டத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயில் அருகே ரிசார்ட் கட்ட தமிழக அரசு முடிவு செய்து அரசாணையும் வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி செங்கல்பட்டைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஊட்டியில் பக்தர்களுக்கான தங்குமிடம் கட்டப்படும் என்பதற்குப் பதிலாக தவறுதலாக ரிசார்ட் என் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது. எனவே இது தொடர்பான அரசாணை வாபஸ் பெறப்படும் என்றார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்." என்று கூறப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு காவலர்களிடமிருந்து தப்பிக்க குளத்தில் குதித்த விஏஓ

ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடமிருந்து தப்பிக்க குளத்தில் குதித்த விஏஓ கைது செய்யப்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ," வாரிசுச் சான்றிதழ் வழங்க மூதாட்டியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) வெற்றிவேல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குதித்து ஓட முயன்றபோது கைது செய்யப்பட்டார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"கோவை மாவட்டம், ஆலாந்துறையைச் சேர்ந்தவர் மாராத்தாள், புற்றுநோயாளி. இவரின் கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், வாரிசுச் சான்றிதழ் பெறுவதற்காக மத்துவராயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாராத்தாள் விண்ணப்பித்துள்ளார். அப்போது, வாரிசுச் சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் எம்.வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

முதல் தவணையாக மூதாட்டியிடம் ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டவர், மீதமுள்ள ரூ.4 ஆயிரத்தைக் கொடுத்தால்தான் சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து மாராத்தாள் மருமகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார்.

அப்போது, ஊழல் தடுப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை (ரூ.3,500) கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்துள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த கிராமநிர்வாக அலுவலர் வெற்றிவேலிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கிருஷ்ண மூர்த்தி கொடுத்துள்ளார்.

இதை கண்காணித்துக் கொண்டிருந்த ஊழல் தடுப்பு போலீஸார், பணத்தை வாங்கிக்கொண்டு தப்ப முயன்ற வெற்றிவேலை துரத்திச் சென்றனர். அப்போது, பேரூர் குளத்தில் குதித்து பணத்தை தண்ணீரில் போட்டுள்ளார். பின்தொடர்ந்து வந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரும் தண்ணீரில் குதித்து வெற்றிவேலைப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து லஞ்சம் வாங்குதல், தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலைக்கைது செய்தனர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடன் மறுசீரமைப்பால் 7 பில்லியன் டாலர் நட்டம் - சீனத் தூதுவர்

இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சீனத்தூதுவர் கீ சென்ஹொங் கூறியதாக வீரகேசரி இணைய செய்தி கூறுகிறது.

கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் ஊடகப்பிரதிநிதிகளுக்கும் இடையில், சீன அரசாங்கத்தின் செயற்பாட்டு அறிக்கை மற்றும் வெளிவிவகார கொள்கை மற்றும் உறவகள் பற்றிய உரையாடல் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், "இலங்கையுடன் சீனாவே முதன்முதலாக கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது. அந்த வகையில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு முதலில் இணங்கிய நாடாகவும் சீனா இருக்கின்றது. ஆனால் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இன்னமும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. அதேநேரம், இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பை சீனா மேற்கொண்டதன் மூலமாக பெருந்தொகையான நிதியை இழந்துள்ளது. குறிப்பாக இலங்கையுடனான சீனாவின் கடன்மறுசீரமைப்பு இணக்கத்தினால் 7பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவின் எக்ஸிம் வங்கி இழந்துள்ளது.

இந்த இழப்பு தொடர்பில் யாரும் பேசுவதில்லை. சீன எக்ஸிம் வங்கி சீனாவின் முக்கியமான ஏற்றுமதி, இறக்குமதி விடயங்களில் பங்காளராக இருக்கின்றது. ஆகவே இத்தகைய பெரும் இழப்பானது எவ்வாறிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க முடியும். இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்காக சீனா பெருந்தியாகத்தைச் செய்துள்ளதோடு அதிகளவான பங்களிப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் அந்த விடயங்களை சீனா பிரசாரம் செய்வதில்லை." என்று குறிப்பிட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)