காணொளி: கோவிலில் குழந்தைகள் கையில் 'கியூஆர் கோட்' பட்டை கட்டப்படுவது ஏன்?

காணொளி: கோவிலில் குழந்தைகள் கையில் 'கியூஆர் கோட்' பட்டை கட்டப்படுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

விஜயவாடாவில் உள்ள இந்திர கிலாத்ரி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து போனால் அவர்களை அடையாளம் காண உதவும் வகையில், அவர்களின் கைகளில் கியூஆர் கோட் (QR code) கொண்ட ஒரு கைப்பட்டை கட்டப்படுகிறது.

இந்த கியூஆர் கோட் வழங்கப்படும்போது, குழந்தைகளின் பெற்றோரிடமிருந்து விவரங்களை பெற்று அதனை ஊழியர்கள் ஒரு மொபைல் செயலியில் பதிவு செய்கின்றனர்.

"ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கியூஆர் கோட் கொண்ட இந்த கைப்பட்டை வழங்கப்படுகிறது. ஏதேனும் குழந்தை காணாமல் போனால், அவர்களை பற்றிய விவரங்கள் இந்த கியூஆர் கோட் உதவியுடன் ஆன்லைனில் கிடைக்கும். இதனால் அவர்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும்." என்கிறார் ஐசிடிஎஸ் மேற்பார்வையாளர் ரமாதேவி

குழந்தைகள் காணாமல் போனால், ஊழியர்கள் அவர்களின் கைகளில் கட்டப்பட்டுள்ள கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்கிறார்கள். பெற்றோரின் பெயர், தொலைபேசி எண் மற்றும் வீட்டின் முகவரி போன்ற விவரங்கள் தெரியவரும். இதனால் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தைகளை பாதுகாப்பாக அவர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

"கூட்டத்தில் சில குழந்தைகள் தொலைந்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது, அதனால்தான் இது போன்ற கியூஆர் கோட் பயன்படுத்தப்படுகின்றது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொலைந்தபோன குழந்தைகள் உடனடியாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட இது உதவுகிறது." விஜயவாடாவைச் சேர்ந்த புண்யவதி.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு