You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அருகி வரும் நாட்டு குட்டை மாடுகளை காப்பாற்றும் பெண்கள் - முதலீடு, வருமானம் எவ்வளவு தெரியுமா?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணவரை இழந்த பெண்கள், மாடு வளர்ப்பு மூலம் தங்களது சொந்த வாழ்க்கையை உயர்த்திக் கொண்டதோடு, தமிழ்நாட்டில் 'நாட்டு குட்டை' என்ற நாட்டு மாடு இனத்தை அழிவில் விளிம்பில் இருந்து மீட்டிருக்கிறார்கள்.
சமீபத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வில், நாட்டு குட்டை என்ற இனம் அருகிவரும் இனமாக மாறிவிட்டதால், அதைப் பாதுகாக்கும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என ஆய்வில் தெரிய வந்தது.
இந்த மாடு இனத்தைத் தற்போது அதிகளவில் வளர்ப்பவர்கள் யார் என்ற தேடலில் ஈடுபட்ட ஆய்வாளர்களுக்கு காஞ்சிபுரம் பனையூர் கைம்பெண்கள் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளனர்.
நாட்டு குட்டை இன மாடுகளைத் தேடியபோது, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, செய்யூர் மற்றும் திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் இந்த மாடுகள் காணக் கிடைக்கின்றன. பனையூர் கிராமத்தில் மட்டும் சுமார் 4,500 மாடுகள் வரை இருந்தது தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
''தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் இரண்டு லட்சம் நாட்டுக்குட்டை மாடுகள் இருக்கும் என்று கணித்திருக்கிறோம். இந்த கிராமத்தில்தான் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்குட்டை மாடுகள் உள்ளன. பல ஏழ்மை குடும்பங்களில் உள்ள விதவை பெண்கள், இந்த மாடுகளை வளர்க்கிறார்கள்.
மேலும், நாட்டு குட்டை இனத்தில் கலப்பினம் இல்லாமல் இந்த கிராமத்தில்தான் மாடுகள் இருக்கின்றன என்பதை உறுதி செய்தோம். தங்களது உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் இந்த பெண்கள்தான் இந்த நாட்டு மாடு இனத்தைப் பாதுகாத்து வருகிறார்கள்,'' என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாலசுப்ரமணியம்.
விதவை பெண்கள் முன்னெடுத்த சாதனை
நாட்டு குட்டை இன மாடுகளை நம்பி தங்களது வாழ்வை அமைத்துக்கொண்ட பெண்களைச் சந்திக்க பனையூர் கிராமத்திற்குச் சென்றோம்.
சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்டது இந்தச் சிறிய கிராமம். பனையோலை குடிசைகள் நெருக்கமாக அமைந்துள்ள கிராமம். நவநீதம், கமலா மற்றும் சந்திரா உள்ளிட்ட பெண்கள் தங்களது மாடுகளைப் பராமரித்து அந்த வருமானத்தை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். இவர்கள் மூவரும் இளம் வயதில் கணவரை இழந்தவர்கள்.
நவநீதம் நாராயணசாமி(57) தற்போது 20 நாட்டு குட்டை மாடுகள் வைத்திருக்கிறார். தனது கணவர் இறந்தபோது, 30 மாடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்ததாகவும், மாடு வளர்ப்பைக் கற்றுக்கொண்ட பிறகு தனது வாழ்வில் தன்னம்பிக்கை அதிகரித்ததாகவும் சொல்கிறார்.
''மாடுகளைப் பராமரிப்பது என்பது எனக்குப் புதிதாக இருந்தது. ஆனால் ஜெர்சி மாடுகளைப் போல இந்த நாட்டு குட்டை மாடுகளுக்குத் தீவனம் வைக்க வேண்டியதில்லை.
அதிகமாக தடுப்பூசி செலவும் இல்லை என்பதால், தினமும் மேய்ச்சல் பகுதிக்கு கொண்டு செல்வதுதான் முக்கியம். ஒரு பசு குறைந்தது ஏழு கன்றுகளை ஈனும் என்பதால், மாடுகளைப் பராமரித்து கன்றுகளை விற்று என் தேவைகளுக்காக பணம் ஈட்டினேன். சில ஆண்டுகளில் அதுவே என் பிழைப்பாகிப்போனது,'' என்கிறார் நவநீதம்.
இதுவரை 40க்கும் மேற்பட்ட கன்றுகளை விற்றுள்ளதாகவும், அவ்வப்போது தம்மிடம் உள்ள மாடுகளின் எண்ணிக்கை 40ஐ தொடும் என்கிறார்.
நவநீதத்தை போல, கன்றுகளைப் பராமரித்து விற்பனை செய்வது பனையூர் கிராமத்தில் பலருக்கும் கைகொடுத்துள்ளது என்பதை நாம் அறிய முடிந்தது. படித்த இளைஞர்கள் பலரும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள் என்றும் பெண்கள் மேய்ச்சல் தொழிலைப் பிரதானமாகச் செய்து வருகிறார்கள் என்றும் தெரிந்தது.
முதலீடு எவ்வளவு வேண்டும்?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், நவநீதம் தனது மகளின் திருமணத்திற்கான செலவு, சீர் வைத்தது உள்ளிட்ட செலவுகளை ஈடுசெய்ய இரண்டு கன்றுகளை விற்றதாகச் சொல்கிறார்.
''என் கணவர் உடல்நலமின்றி 20 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். ஒரு மகன், ஒரு மகளை நான் வளர்த்து தற்போது திருமணம் செய்து வைத்துள்ளேன். என் வீட்டைப் புனரமைத்துள்ளேன். மாடுகளைப் பராமரித்து, சாணத்தை விற்பனை செய்வது, ஒவ்வோர் ஆண்டும் கன்றுகளை விற்பனை செய்வது என என் வாழ்க்கை ஓடியது.
தற்போது என்னிடம் உள்ள நந்தினி என்ற பசு கடந்த மூன்று ஆண்டும் தலா ஒரு கன்றை ஈன்றது. சிலநேரம் அவசர தேவைக்கு என் மாடுகளை நம்பி எனக்கு உறவினர்கள் கடன் கொடுக்கிறார்கள். ஒரு கன்று ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விலைபோகும்,'' என்கிறார் நவநீதம்.
கமலா மேகநாதன்(55), சந்திரா நடராஜன்(45) ஆகியோர் தங்களது மாடுகளை அருகிலுள்ள தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். அவர்களிடம் பேசும்போது, தினமும் சுமார் ஆறு கிலோமீட்டர் நடந்து சென்று மேய்ச்சலுக்கு மாடுகளை விடுவதுதான் அவர்கள் செய்யும் முதலீடு என்கிறார்கள்.
''எங்கள் ஊரில் நாங்கள் வளர்க்கும் மாடு அருகிவரும் நாட்டு குட்டை இன மாடு என்று அதிகாரிகள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். சிறுவயதில் இருந்து எங்கள் கிராமத்தில் நாங்கள் பார்த்து வளர்த்த மாடுகள் இவை.
மற்ற கலப்பின மாடுகளைப் போல இந்த நாட்டு மாடுகளுக்கு அடிக்கடி வியாதிகள் வருவதில்லை என்பதால் செலவு குறைவு. அதேபோல, செயற்கைக் கருவூட்டல் தேவையில்லை. இந்த மாடுகளைச் சரியான மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால்போதும்,'' என்கிறார் கமலா.
''மேய்ச்சலுக்கு செல்வதில் பெருமை''
தற்போது 20 மாடுகளை வைத்திருக்கும் கமலாவுக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் இருந்தாலும், மாடுகள் தனக்கான செலவுக்கு பணம் தரும் பிள்ளைகள் என்கிறார். தங்களது அன்றாட வாழ்க்கை என்பது இந்த மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதும், மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வருவதும்தான் என்கிறார் இவர்.
''நாங்கள் முதலீடு செய்யாமல், எங்கள் வாழ்க்கைக்கு சம்பாதிக்கிறோம். அதில் இந்த மாடு இனத்தை நாங்கள் பாதுகாக்கிறோம் என்று அதிகாரிகள் சொன்னார்கள். எங்களுக்குப் பெருமையாக உள்ளது,'' என்று சிரிப்பொலியுடன் சொல்கிறார் கமலா.
சந்திரா பேசும்போது, நாட்டு குட்டை மாடு அதிகபட்சம் நான்கு அடி உயரம்தான் இருக்கும் என்பதால், மிகவும் சிரமம் இல்லாமல், அதை மேய்க்க முடிகிறது என்கிறார். 14 மாடுகளுக்கு சொந்தக்காரர் சந்திரா.
சமீபத்தில் அவர் விற்பனை செய்த கிடா கன்று ரூ.8,000 வரை விலை போனதாகக் கூறுகிறார். ஒரு லிட்டர் பால் சுமார் ரூ.40 வரை விற்கப்படுகிறது என்றும் ஒரு பசு குறைந்தபட்சம் மூன்று லிட்டர் பால் தினமும் கொடுக்கும் என்கிறார்.
''எங்கள் ஊரில் கன்று ஈன்ற பசுவை யாரும் விற்கமாட்டார்கள். அதன் கடைசி காலம் வரை பராமரிப்போம். கிடா மாடுகளை விற்பனை செய்வோம். முடியாத காலத்தில், கடன்சுமை அதிகம் இருந்தால்தான் பசுவை விற்பார்கள். முகவர்கள் நேரடியாக எங்கள் கிராமத்திற்கு வந்து வாங்கிச் செல்வார்கள். உடல்நலம் குன்றிய மாடுகளை தங்களது வயலில், வீட்டு வாசலில் புதைத்துவிடுவோம்,'' என்கிறார் சந்திரா.
இந்த பெண்களைப் போல, நாட்டு மாடு இனத்தைக் கொண்டு தனது வாழ்வை மேம்படுத்திக் கொள்ள தற்போது முன்வந்துள்ளார் 25 வயது விவசாயி வேலு. அவருடைய பட்டி 50 மாடுகளைக் கொண்டது. பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட வேலு, நாட்டு மாடுகள், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு நான்கு லட்சம் வருமானம் ஈட்டி தருகிறது என்கிறார்.
''படித்தவர்கள் பல மணிநேரம் நகரத்தில் வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். ஆனால் நான் என் கிராமத்தில், மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, வருமானம் ஈட்டுகிறேன். அது எனக்கு மதிப்பு குறைவாகத் தெரியவில்லை, பெருமையாக இருக்கிறது,'' என்கிறார் வேலு.
மேய்ச்சல் தொழிலுக்கு அங்கீகாரம் தேவை
பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், பனையூர் பெண்களின் மன உறுதியால் தொடர்ந்து நாட்டுக் குட்டை மாடுகள் அதன் மரபு தன்மையுடன் இன்றும் காணப்படுகிறது என்றார். பலரும் பால் விற்பனையால் கிடைக்கும் லாபம் தேவை என்ற நோக்கில்தான் நாட்டு மாடுகள் வளர்ப்பதை கைவிட்டுவிட்டார்கள் என்கிறார் அவர்.
நாட்டு குட்டை மாடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு, லாபம் எவ்வளவு, பராமரிப்புச் செலவு எவ்வளவு என்ற விளக்கும் தரும் நிகழ்ச்சிகளைப் பல கிராமங்களில் நடத்தி வருவதாகக் கூறுகிறார் அவர்.
அதோடு, தமிழ்நாடு அரசு, நாட்டுக் குட்டை மாடுகளைப் பாதுகாக்க ரூ.86 லட்சம் செலவில் சிறப்பு மையம் ஒன்றைக் காட்டுப்பாக்கத்தில் நடத்தி வருகிறது என்கிறார்.
''நாட்டுக் குட்டை மாடு வைத்திருக்கும் ஒருவர் கன்றுகளை விற்பது மட்டுமல்லாமல், பால் உற்பத்தி, சாணம் மூலம் விபூதி, ஊதுபத்தி தயாரிப்பது உள்ளிட்ட வேலைகள் மூலம் எப்படி வருமானத்தை அதிகரிக்கலாம் என்றும் ஆலோசனை செய்து வருகிறோம்.
இயற்கை விவசாயத்தை நோக்கிப் பலரும் நகரும் நேரத்தில், இதுபோன்ற நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவையும் உள்ளது,'' என்கிறார் அவர்.
காஞ்சிபுரம் பனையூர் பெண்களின் உழைப்பால், நாட்டு மாடு இனம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருவது குறித்து அரசு கவனம் தரவேண்டும் என்று கோருகிறார் தமிழ்நாடு விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த சண்முகம்.
காங்கேயம், புலியூர், பர்கூர், உம்பளச்சேரி, ஆலம்பாடி ஆகிய கால்நடைகளின் பாதுகாப்பு மையங்கள் அழிவைத் தடுக்க ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன என்பதால், தற்போது நாட்டுக் குட்டை மாடுகளுக்கு முக்கியத்துவம் தருவது அவசியமான ஒன்று என்கிறார் சண்முகம்.
''பனையூர் கிராமத்தில் மாடுகளுக்கான நிரந்தரமான மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் மேய்ச்சல் தொழிலை அங்கீகரித்து, மகளிர் சுய உதவிக்குழுவில் இதை ஒரு தொழிலாகச் சேர்த்து, பெண்களுக்கு கடன் தந்தால், மேலும் பலர் இதில் ஈடுபடுவார்கள்,'' என்கிறார் சண்முகம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்