தமிழ்நாட்டில் நெல்லுக்கு கிராக்கி - வயலுக்கே சென்று கொள்முதல் செய்யும் வியாபாரிகள்: அரிசி விலை உயருமா?

    • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சன்ன ரகம் நெல்லுக்கு கடந்த ஆண்டை விட அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தனியார் ஆலைகள் அதிக விலை கொடுத்து வாங்குவதால், அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஆந்திரா, தெலங்கானாவில் நெல் விளைச்சல் குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் நெல்லுக்கு அதிக விலை கிடைக்கும் சூழல் நிலவுகிறது.

நெல்லுக்கு அதிக விலை

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த விவசாயி வெற்றிவேல் இந்த ஆண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு விவசாயத்தின் மூலம் கூடுதல் வருவாய் கிடைத்ததே அவரின் மகிழ்ச்சிக்கான காரணமாக அமைந்திருக்கிறது.

வெற்றிவேலை போலவே டெல்டா மாவட்டங்களில் இருக்கும் பரவலான விவசாயிகள், தங்கள் வயலில் விளைந்த நெல்லுக்கு அதிக விலை கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

கோவிட் தொற்றுக்கு பிறகு அரிசி ஆலைகளில் மீண்டும் முழு கொள்ளளவில் இயங்கத் தொடங்கி இருப்பதாலும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்ததாலும் தமிழ்நாட்டில் அதிக விலை கிடைப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய விவசாயி ராஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு விளைச்சலுக்கு ஏற்ற வகையில் பருவம் இருந்ததால், விளைச்சலும் கடந்த ஆண்டை விட அதிகரித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

"என் வயலில் போன வருடம் ஒரு ஏக்கரில் 30 மூட்டை நெல் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு பூச்சி தொல்லை குறைவாக இருந்ததாலும், சரியான பருவத்தில் பெய்த மழையாலும் விளைச்சல் அதிகமாகி ஏக்கருக்கு 5 மூட்டைகள் வரை அதிகமாகி இருக்கிறது" என ராஜேந்திரன் கூறினார்.

"ஒரு மூட்டை BPT ரக நெல்லுக்கு(சன்ன ரகம்) தனியார் ஆலைகளில் இந்த ஆண்டு 1,400 ரூபாய் வரை கிடைக்கிறது. போன வருடம் எனக்கு 1,100 ரூபாய் கிடைத்தது. இப்போது மூட்டைக்கு கூடுதலாக கிடைத்த 300 ரூபாய் கிடைத்துள்ளது. 3 ஏக்கரில் சாகுபடி செய்த எனக்கு இந்த விளைச்சல் லாபகரமாக அமைந்திருக்கிறது," என்று மகிழ்ச்சி பொங்க பேசினார் தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி பெருமாள்.

ஏன் கூடுதல் விலையில் கொள்முதல்?

"தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சன்ன ரகம் நெல் வகைகளான ஆந்திரா பொன்னி, BPT பொன்னி, வெள்ளைப் பொன்னி, அம்மன் பொன்னி வகை நெல்லை பயிரிட்டவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது" என்று விவசாயியான ராஜேந்திரன் கூறினார்.

ஆந்திராவில் பயிரிடப்படும் BPT பொன்னி, தெலங்கானாவின் விளையும் RNR பொன்னி மற்றும் கர்நாடகாவில் விளையும் மைசூர் பொன்னி நெல் வகைகள் இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாக விளைச்சல் கண்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டில் இந்த நெல்லை பயிரிட்ட விவசாயிகளிடமிருந்து தனியார் நெல் ஆலைகள் அதிக விலை கொடுத்து நெல்லை கொள்முதல் செய்கின்றன என்று விவசாயத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"பிற மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்தது மட்டுமின்றி, மக்கள் மத்தியில் உணவுக்காக உட்கொள்ளும் அரிசியின் தரமும் மேம்பட்டுள்ளதால் இந்த வகை நெல்லுக்கு அதிகத் தேவை ஏற்பட்டுள்ளது," என்று தனியார் நெல் ஆலை உரிமையாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.

குறிப்பாக சன்ன ரக (உயர் ரகம்) பொன்னி அரிசியை தினமும் உட்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி, பிற ஊர்களிலும் அதிகரித்துள்ளது. கல்சர் பொன்னி போன்ற குண்டு ரக அரிசியை பயன்படுத்துவது குறைந்துள்ளதால், இந்த வகை நெல்லுக்கு கொள்முதல் விலை அதிகமாகி இருக்கிறது என்று அவர் விளக்கினார்.

கோவிட் தொற்றின் போது இயங்காமல் இருந்த அரிசி ஆலைகள் அனைத்தும் கடந்த ஆண்டு முழு வீச்சில் இயங்கியதால், இருப்பிலிருந்த நெல் முழுவதும் அரிசியாக மாற்றப்பட்டு சந்தைக்கு அனுப்பி விட்டோம். அதனால் அரிசி ஆலைகள் இயங்க மீண்டும் நெல் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது. இதன் வெளிப்பாடாக தனியார் அரிசி ஆலைகள் நேரடியாக விவசாயிகளிடம் சென்று வயல்களிலேயே நெல்லை கொள்முதல் செய்கின்றனர் எனத் தெரிவித்தார், தமிழ்நாடு அரிசி ஆலைகளின் உரிமையாளர் சங்கத் தலைவர் துளசிங்கம்.

அரசு கொள்முதல் நிலையங்களில் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக அரசு, விவசாயிகளிடம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்து வருகிறது.

இதற்காக பல்வேறு இடங்களில் அரசின் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,100 ரூபாய் ஆதார விலை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குவிண்டால் என்பது 100 கிலோ ஆகும்.

நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரிசியாக மாற்றி பொது விநியோகத் திட்டத்தின் மூலம் 2 கோடிக்கும் அதிகமான ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது.

தனியார் ஆலைகள் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் தமிழ்நாடு அரசின் கொள்முதல் நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய உணவு வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் கொள்முதல் நிலையங்கள் கடந்த செப்டெம்பர் 1ஆம் தேதி முதல் இதுவரை 25 லட்ச மெட்ரிக் டன் நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திருப்பதாகவும், கடந்த ஆண்டை விட இந்த பருவத்தில் 1.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக ராதாகிருஷ்ணன் கூறினார்.

மாவட்டந்தோறும் இருக்கும் நெல் கொள்முதல் நிலையங்கள்(DPC) மூலமாக தினசரி 30 ஆயிரம் மூதல் 40 ஆயிரம் கிலோ வரை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் ஆலைகள் அதிக விலை கொடுத்து நெல்லை பெறுவதால் அரசின் பொது விநியோக திட்டத்திற்கு எந்த தட்டுப்பாடும் வராது என்றும் தெரிவித்தார்.

வயலில் நெல்லை அறுவடை செய்து அரசின் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவாக சில ஆயிரம் ரூபாய் தேவைப்படும். ஆனால் தனியார் அரிசி ஆலைகள் வயலுக்கு வந்து நெல்லை கொள்முதல் செய்வதால் அந்த பணம் எங்களுக்கு மிச்சமாகிறது என்று விவசாயி வயலூர் ராஜேந்திரன் கூறினார்.

தனியார் அரிசி ஆலைகள் நெல்லை அளக்கும் முறையில் ஒரு சில மாறுபாடு இருக்கிறது. சிலர் ஒரு மூட்டைக்கு 62 கிலோவை பெறுகின்றனர். சில ஆலைகள் 63 கிலோ இருந்தால் தான் ஒரு மூட்டை என கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். அரசின் கொள்முதல் நிலையங்களில் அது போன்ற சிக்கல் இல்லையென்றாலும், அனைத்து ரக நெல்லுக்கும் அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரே விலை இருக்கிறது. ஆனால் தனியார் ஆலைகள் சன்ன ரக நெல்லுக்கு அதிக விலைக் கொடுக்கின்றனர்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவர், அரசு கொள்முதல் நிலையங்களுக்கு சன்ன ரக நெல் பெரும்பாலும் வருவதில்லை. மோட்டா ரக நெல் வகைகள்(மத்தியத் தர நெல்), குண்டு நெல் வகைகளே அரசு கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும். இந்த வகை நெல்லுக்கு தனியார் ஆலைகளில் உரிய விலை கிடைக்காது என்றார்.

அரிசி விலை அதிகரிக்குமா?

நெல்லுக்கு கொள்முதல் விலை அதிகமாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், இதன் தாக்கமாக அரிசி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதா என அரிசி ஆலைகளின் உரிமையாளர் சங்கத் தலைவர் துளசிங்கத்திடம் பிபிசி தமிழ் கேள்வியை முன்வைத்தது.

“நெல் கொள்முதல் விலை அதிகமாக இருப்பதால் மட்டும் அரிசி விலை அதிகரிக்காது. நெல் கொள்முதல் மட்டுமின்றி, போக்குவரத்து கட்டணம், தொழிலாளர் ஊதியம், ஆலைகளின் இயக்க தேவைப்படும் செலவு, வரிகள் என பல அமசங்களை பொறுத்து மட்டுமே இந்த முடிவாகும்” என விவரித்தார் துளசிங்கம்.

கடந்த ஆண்டு மூட்டைகளில் விற்பனை செய்யும் அரிசிக்கு 5 % ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாய் வரை அதிகரித்தது.

“இந்த ஆண்டு சன்ன ரக நெல்லுக்கு கொள்முதல் விலை அதிகமாகியுள்ளதால் அரிசியின் விலை அடுத்த 3 முதல் 6 மாதங்களில் கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும். இந்த விலை ஏற்றம் உயர் ரக பொன்னி வகை அரிசிகளின் விலையில் எதிரொலிக்கும்” என திருச்சியை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.

“அரிசி விலை அதிகரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த உணவு வழங்கல் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், அரிசி விலை உயர வாய்ப்புள்ளது என்ற தகவல் ஏதும் தனக்கு இப்போது வரை கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் அதிக விலைக்கு நெல்லை கொள்முதல் செய்தால் அது சந்தையில் விலை உயர்வாக எதிரொலிக்காது” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: